×

ஆயுர்வேதத் தீர்வு!

நன்றி குங்குமம் டாக்டர்

மனச்சிதைவு ஸ்கிசோஃப்ரினியா

மனதுதான் மனித சிந்தனைகளின் பிறப்பிடம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. அதேபோல் எப்பொழுதும் குழப்பத்திற்கு உள்ளாவதும் நமது மனதுதான் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. அத்தகைய மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது. நம் வாழ்க்கையை சிக்கலின்றி அமைதியாக நடத்த மிக முக்கியமான செயல்களில் ஒன்றாக நமது முன்னோர்கள் கருதினர். அவ்வாறு செய்யாவிடில் பல்வேறு மன நோய்கள் வர அதுவே வழி வகுத்துவிடும் என்றும் அஞ்சினர். அப்படிப்பட்ட மனநோயின் முக்கியமான ஒன்றுதான் ஸ்கிசோஃப்ரினியா என்னும் மனச்சிதைவு.

இன்றுள்ள அவசர உலகத்தில் வேகமாக மாறி வரும் நமது கலாசாரம். உணவு மனோநிலை மற்றும் அணுகுமுறைகள் காரணமாக பல நோய்கள் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. அதில் இந்த ஸ்கிசோஃப்ரினியா என்னும் மனச்சிதைவு நோய் நாம் அறியாமலே நம்மில் சிலரை தாக்க ஆரம்பித்துவிட்டது. இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

மனநோய்களில் பலவகை உண்டு. அதில் ஒன்றுதான் மனச்சிதைவு நோய். இது பொதுவாக மரபு வழியாக வரக்கூடிய ஒரு நோயாக இருந்தாலும் சுற்றுச்சூழல்களின் அழுத்தத்தின் காரணமாகவும் ஒருவருக்கு மனச்சிதைவு நோய் உண்டாகலாம். பொதுவாக இந்நோய் சிறிதளவில், ஒருவருடைய சிந்தனைகள் மற்றும் உணர்ச்சிகளை ஆரம்பத்தில் பாதித்தாலும், பின்பு காலப்போக்கில் தீவிரமடைந்து மிகவும் குழப்பத்திற்கு உள்ளாகக்கூடிய நிலைக்கு பாதிக்கப்பட்டவர்களை இந்நோய் தள்ளிவிடும்.

ஸ்கிசோஃப்ரினியா அல்லது மனச்சிதைவு நோய், மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் ஏற்படும் தீவிரமான மனநோய். இது நோய்க்கு தீர்வு காண்பது கடினம் எனினும், முறையான ஆயுர்வேத சிகிச்சையின் மூலம் இந்த மனநோயை ஓரளவு கட்டுக்குள் வைக்கமுடியும். மனச்சிதைவு நோய், உலகளவில் சுமார் 24 மில்லியன் மக்களை அல்லது 300 பேரில் ஒருவரை (0.32%) பாதிக்கிறது. இந்த விழுக்காட்டில் 222 பேரில் ஒருவர் (0.4599) வயது முதிர்ந்தவராக இருக்கிறார். இது மற்ற மனநலக் கோளாறுகளை போல பொதுவானதல்ல. பெரும்பாலும் இப்பிரச்னை இளமைப் பருவத்தின் பிற்பகுதியிலும், இருபதுகளிலும் ஆரம்பமாகும். மனச்சிதைவு நோய் உள்ளவர்கள். பொது மக்களை விட 2 முதல் 3 மடங்கு அதிகமான இறப்பு சதவிகிதம் உள்ளதாக கணிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் இதயக் கோளாறுகள் மற்றும் தொற்று நோய்கள் காரணமாக நிகழ்கிறது.

ஆயுர்வேதத்தில், ஸ்கிசோஃப்ரினியா எனும் மனச்சிதைவு நோய் உன்மாதம் என்று அழைக்கப்பட்டு அதில் அதத்வாபிநிவேஷம் ஒரு நபர் உண்மையான உலகத்திலிருந்து, கற்பனையான உலகத்தை வேறுபடுத்த தவறும் நிலையாக விவரிக்கப்பட்டுள்ளது.

மனச்சிதைவு ஏற்படக் காரணங்கள்

ஸ்கிசோஃப்ரினியாவின் சரியான காரணத்தைக் கண்டறிய இப்பொழுதும் ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏற்கெனவே, இந்த நோயால் பாதிக்கப்பட்ட குடும்ப வரலாறு உள்ள ஒரு நபருக்கு அதிகபட்ச அபாயம் இருக்கிறது. பொதுவாக இந்நோய் மூளையில் உள்ள சில ரசாயனக் குறைபாடுகள் மற்றும் வேறுபாடுகளினால் வருகிறது. மேலும், கஞ்சா மற்றும் பிற போதைப் பொருள்கள் உபயோகிப்பவர்களுக்கு இந்நோய் அதிகமாக வரும். இது தொற்று நோய் அல்ல.

கோழைகள், நடைமுறைக்கு எதிரான செயல்களை செய்பவர்கள். பேராசை, மகிழ்ச்சி, பயம், வருத்தம், மன எழுச்சி இவற்றால் அடிக்கடி அல்லல்படுபவர்கள் என இவ்வகை மனோநிலை கொண்ட நபர்களை இந்த மனச்சிதைவு எளிதாக தாக்கலாம் என ஆயுர்வேதம் கூறுகிறது. ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளுதல், கெட்டுப்போன, பழக்கமில்லாத மற்றும் முறையற்ற உணவுகளை பயன்படுத்துதல், கவலை, துக்கம், மனதில் எழும் சஞ்சலங்கள் முதலிய காரணங்களினால் மனதில் உள்ள சத்வ குணம் வலுவிழக்கிறது. மனதின் சத்வ குணம் குறைவால் மனச்சிதைவு நோய் ஏற்படுகின்றது என்று ஆயுர்வேத ஆசாரியர் வாக்பட்டரின் அஸ்டாங்கஹ்ருதயம் எனும் படைப்பில் உன்மாத பிரஷேதம் எனும் அத்யாயத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதன் விளைவால் புத்திசாலித்தனம், புரிதல் தன்மை மற்றும் நினைவாற்றல் ஆகியவை பாதிப்படைகிறது.

மனச்சிதைவின் குறிகணங்கள்

காதில் மாயக்குரல் கேட்டல், காரணமில்லாமல் சந்தேகப்படுதல், பயப்படுதல் அல்லது கோபப்படுதல் ஆகியவை இந்நோயின் முகக்கியமான அறிகுறிகள்.மனச்சிதைவு நோயாளர்கள் குழப்பமடைந்தவர்களாகவும், மாறுபட்ட நடத்தையுள்ளவர்களாகவும் இருப்பர், தனக்குள்ளே பேசிக் கொள்பவர்களாகவும், சிரிப்பவர்களாகவும் இருப்பர். பொதுவாக, தனிமையை விரும்புவதுடன் பிறருடன் சேராமல் ஒதுங்கியே இருப்பர். குழப்பமான பேச்சு இருக்கும். சிந்தனைகளில் தெளிவும், நியாயத்தன்மையும் இருக்காது.

தண்ணீரில் குளிப்பதில் அதிகம் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். சிலர் குளிப்பது, உடை மாற்றுவது, சாப்பிடுவது என அன்றாட செயற்பாடுகளைக் கூட செய்யாது சோம்பலாக இருப்பர். எதைச் செய்வதிலும், ஆர்வம் குன்றியவர்களாக இருப்பர். தனிமையில் இருக்கும்போது, காதுகளில் குரல் அல்லது இரைச்சலை உணர்வார்கள். கோபமும், சோகமும், சந்தேகக் குணமும் உள்ளவர்களாக இருப்பர். காரணமில்லாமல், மற்றவர்களை தங்களுக்குத் தீங்கு இழைப்பவர்களாக தாங்களாகவே நினைத்துக் கொள்வார்கள்.

உறவுகளையும் நண்பர்களையும் கூட நம்பமாட்டார்கள். தூக்கக் குறைவு. பசியின்மை இருக்கும். இவர்கள் ஒருபோதும் தாம் மனநோய்க்கு உள்ளாகி இருப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல கூப்பிட்டாலும் மறுப்பார்கள் படிக்கும் மாணவர்களோ அல்லது வேலைக்கு செல்பவர்களோ இதனை தொடரமுடியாத நிலை இருக்கும். மேற்கூறிய சந்தேக உணர்வினால் உந்தப்பட்டு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சண்டை போடுதல், இதே காரணங்களினால் வீட்டை விட்டு வெளியேறி எங்கேனும் சென்று விடல் ஆகிய நடவடிக்கைகளை அன்றாடம் ஒரு மனச்சிதைவு ஏற்பட்ட நபரிடம் காணலாம். மனச்சிதைவு நோய் உள்ளவர்களுக்கு உருவாகும் மேற்கூறிய அறிகுறிகள். அவர்களை பொறுத்தமட்டில் உண்மையே, அவை கற்பனை அல்ல.

மனச்சிதைவிற்கான சிகிச்சை

மேற்கூறிய அறிகுறிகளுடன் ஒருவரை சந்திக்க நேர்ந்தால், அவரை அவசியம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அறியாமையாலும், மேலும் மனநோய் குறித்து சமூகத்தில்
இருக்கும். பழிசொல்லுக்கு பயந்தும் சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காமல் தாமதப்படுத்துவது இந்நோயின் தீவிரத்தை பல மடங்கு அதிகரிக்கும். அறிகுறி ஏற்பட்டவுடன் சீக்கிரமாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்த நோயில் இருந்து முழுவதுமாக விடுபட வாய்ப்பு உள்ளது.

ஆயுர்வேதத்தில் இதற்கு பல பிரசித் திபெற்ற சிகிச்சை முறைகள் உள்ளன. அவை அனைத்தும் நச்சுத்தன்மையை நீக்குவதோடு மூளையில் சிந்தனைத்தடையை நீக்கி மன ஆற்றலை சரி செய்து, மனப்புதுதணர்ச்சி அளித்து, நல்ல அறிவாற்றலை தூண்டுகின்றது. ஆயுர்வேத மருத்துவம் இத்தகைய மன நோய்களுக்கு சிறந்ததாக திகழக்காரணம் இதில் மருத்துவமுறை மட்டுமல்லாது தியானம், ஆன்மிக சிகிச்சை முறை, உடல் சுத்திகரிக்கும் முறைகள் என்று ஒரு முழுமையான அணுகுமுறை உள்ளதேயாகும். இந்நோய்க்கு பஞ்சகர்ம சுத்திகரிக்கும் முறைகளாக வமன – விரேசனம் ) வாந்தி, பேதி சிகிச்சை முறைகள்), நஸ்யம் ( மூக்கிலிடும் மருந்து), பஸ்தி (எனிமா முறை), அஞ்சனம் ( கண்ணில் இடும் மருந்துகள் கலந்த கண் மை பிரயோகங்கள்) ஆகியவை நல்ல பயனளிக்கக்கூடியதாக இருக்கிறது.

மேலும் சந்தோஷமுண்டாக்குதல், ஆறுதல் கூறுதல் போன்றவைகளும், எண்ணெய்த் தேய்ப்பு, மூலிகைப் பொடியைத் தேய்த்தல், புகையிடுதல், மூலிகை நெய் பருகுதல் போன்றவற்றாலும், மனதை சுயநிலைக்குக் கொண்டு வரலாம். பஞ்சகர்மா சுத்திகரிக்கும் முறைகளுக்குப்பின் உள்மருந்துகளாக கல்யாணக க்ருதம், பஞ்சகவ்ய க்ருதம், மஹா பைஷாச்சிக க்ருதம், லசூனாதயம் க்ருதம் ஆகியவை நோயாளிக்கு ஏற்றவாறு தக்க ஆயுர்வேத மருத்துவரின் அறிவுரைப்படி கொடுக்க கொடுக்க நல்ல பயனளிக்கிறது.

நெய் இயல்பாக ஞானத்தையும் அறிவாற்றலையும் கூட்டும். அரும்பொருளாக ஆயுர்வேதம் கருதுகிறது. நரம்பு மண்டலச் செயல்பாடுகளைப் பாதிக்கும் நோய்களைக் குணப்படுத்த, நெய்யை மூலப் பொருளாகக் கொண்ட மருந்துகளே ஆயுர்வேதத்தில் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. மூளைத் திசுக்களைச் சிறப்பாகச் செயல்பட வைப்பதில் நெய் முக்கிய பங்கு வகிக்கிறது. நெய் அளவாகப் பயன்படுத்தும்போது, மறதி நோய், பார்க்கின்சன்ஸ், அல்சைமர் நோய் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது.

இவை மட்டுமின்றி பிராம்மி வடி, மேத்ய ரசாயனம், மானச மித்ர வடகம், சாரஸ்வதாரிஷ்டம், உன்மாத கஜகேசரி, ப்ராவல பிஷ்டி, சங்கபுஷ்மி சூரணம், ஸ்ம்ரிதிசாகர ரஸ், சதுர்புஜ ரஸ் ஆகிய மருந்துகளும் இந்நோயில் நல்ல பலனளிக்கக் கூடியவையாக உள்ளன. ஒற்றை ஆயுர்வேத மூலிகைகளாக பிரம்மி, வல்லாரை, சங்குபுஷ்பம், சடாமாஞ்சில், அமுக்கிரா கிழங்கு, சர்ப்பகந்தா, ஜடமாஞ்சில், வசம்பு, பூனைக்காலி, கொட்டைக்கரந்தை, தண்ணீர்விட்டான் கிழங்கு, தகரம், சீந்தில் ஆகியவை தகுதி வாய்ந்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை பேரில் கொடுக்க நல்ல பலன் தரும்.

மேலும், எளிதான மனப்பயிற்சிகள், மனம் மற்றும் சிந்தனைகளை ஒருமுகப்படுத்த உதவும். சிறிய அளவிலான தொழில் ரீதியான பயிற்சிகள் கொடுக்கலாம். ிவை தன்னம்பிக்கை மற்றும் சுய மதிப்பை அதிகரிக்க உதவும். மருத்துவத்துடன் அன்பு, அரவணைப்பு, ஆறுதல் வார்த்தைகள், மனநிலைக்குகந்த வேலை, பாராட்டுதல், பரிசளித்தல், குடும்பத்திந் அரவணைப்பு, சமுதாயத்தின் அரவணைப்பு இவை யாவும் சேர்ந்தால் நோயாளி மனோநிலையில் வெகுசீக்கிரத்தில் முன்னேற்றம் காணலாம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஸ்கிசோஃப்ரினியா எனும் மனச்சிதைவு நோயை தவிர்க்கும் முறைகள் மனச்சிதைவு நோயை தவிர்ப்பது என்பது கேள்விக்குறியே! ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். இது ஒரு மரபியல் ரீதியான நோயாக இருப்பதால் உங்கள் பெற்றோர், உடன் பிறந்தோர், உங்களின் மூத்த தலைமுறைகளில் யாரேனும் ஒருவருக்கு இந்நோய் இருந்திருந்தால் உங்களுக்கும் இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதை உணர வேண்டும்.

அண்மையில் மன நோய்களில் நடந்த சில ஆய்வுகளில் இந்நோயை தவிர்ப்பதற்கான வழிகளின் சிறந்ததாக சமூகத் தனிமைப்படுத்தலைத் தவிர்ப்பது என்று முடிவுகள் வெளியானது, நாம் தனிமைப் படுத்தப்பட்டால் ஆரோக்கியமற்ற மனப்பழக்கங்களிலும், தவறான புரிதலையும் வளர்த்துக் கொள்ளும் அபாயம் உள்ளது என்று நாம் எப்போதும் உணர வேண்டும். எனவே, எப்போதும் சமூகத்தோடு ஒன்றி வாழ்தலே சாலச் சிறந்தது என்பதில் உறுதியாக இருப்போம்.

தொகுப்பு: உஷா நாராயணன்

The post ஆயுர்வேதத் தீர்வு! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dinakaran ,
× RELATED தலைச்சுற்றல்… தடுக்க… தவிர்க்க!