பெரம்பூர்: எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம் கலப்படம் இல்லாத ஒரு விஷயம் தற்போது இல்லை என்ற நிலை வந்து விட்டது. நாம் சுவாசிக்கும் காற்று முதல் குடிக்கும் தண்ணீர் சாப்பிடும் உணவு என அனைத்திலும் கலப்படம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. ஆனால் இதெல்லாம் எங்களுக்கு பழகிவிட்டது என்ற போக்கில் பொதுமக்கள் அதனை ஏற்றுக்கொண்டு அவரவர் வாழ்க்கையில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் ஒரு காலத்தில் சத்து மிக்க உணவு என கருதப்பட்ட பல உணவுகள் இன்றைக்கு உண்மையிலேயே அந்த உணவில் சத்து உள்ளதா என கேள்வி கேட்கும் அளவிற்கு அந்த உணவில் கலப்படங்கள் அதிகரித்து விட்டன. மேலும் ஒரு உணவுப் பொருள் உலக அளவில் அதிக பயன்பாட்டில் உள்ளது என்றால் அந்த அளவிற்கு அந்த உணவுப் பொருளை பயிரிட வசதி வாய்ப்புகள் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அந்த தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு யுத்திகளை மனிதர்கள் கையாளுவார்கள் அந்த யுத்திகள் அனைத்தும் இயற்கைக்கு புறம்பாக பல்வேறு எதிர்மறை விளைவுகளை பிற்காலத்தில் ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். அறிந்தாலும் வெளியே கூற மாட்டார்கள்.
அந்த வகையில் இந்தியாவில் அரிசிக்கு சமமாக பார்க்கப்படும் உணவுப் பொருள் கோதுமை உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இந்த கோதுமை பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை அடைந்து தற்போது கோதுமை சாப்பிட்டால் நல்லது எனக் கூறிய மருத்துவர்கள் கூட கோதுமையை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என கூறும் நிலைக்கு வந்து விட்டார்கள். அந்த அளவிற்கு கோதுமையால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த பிரச்னைகள் எப்போது ஆரம்பித்தது எனப் பார்த்தால் சுமார் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கோதுமையின் தேவை அதிகரித்ததால் மரபணு மாற்றப்பட்ட கோதுமைகள் உலகம் முழுவதும் ஊடுருவி விட்டன எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் மரபணு மாற்றப்பட்ட கோதுமையால் தற்போது பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாக பல மருத்துவர்களும் நம்மை எச்சரிக்கின்றனர்.
மனிதனின் நாகரிக வளர்ச்சியில் ஆரம்ப காலகட்டத்தில் பயிரிடப்பட்ட தானியங்களில் கோதுமை முக்கியமானது. நீண்ட காலத்திற்கு இதனை எடுத்து வைத்து பயன்படுத்தலாம் என்ற காரணத்தினால் பலரும் இதை பயிரிட்டனர். உலகளாவிய வணிகத்தில் மற்ற எந்த ஒரு தானியத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பு கோதுமைக்கு உள்ளது. இதனை உலகில் பெரும்பாலான நாடுகள் பயன்படுத்தி வருகின்றனர். அரிசியை கூட ஒரு சில நாடுகளில் பயன்படுத்துவது கிடையாது ஆனால் கோதுமை அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. கோதுமையின் தாயகம் மத்திய கிழக்கின் லிவாண்ட் பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டில் கோதுமையின் உற்பத்தி 651 மில்லியன் டன்னாக கணக்கிடப்பட்டது. அப்போது சோளம் 844 டன்னாகவும் அரிசி 672 மில்லியன டன்னாகவும் இருந்தது. அதன் பிறகு அரிசியைவிட கோதுமை உற்பத்தி மற்றும் பயன்பாடு பல மடங்கு அதிகரித்து தற்போது கோதுமை இல்லாத நாடுகளே இல்லை என்ற சூழ்நிலை வந்துவிட்டது.
இந்த கோதுமையில் நார்ச்சத்து, புரதம், விட்டமின்கள், தாதுக்கள் போன்ற உள்ளன. கோதுமை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என பொதுவாக மக்களுக்கு ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. கோதுமையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. கோதுமையின் தவிடு மலச்சிக்கலை கட்டுப்படுத்த உதவுகிறது .கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் வயிற்றில் புளிப்பு தன்மை. ஏப்பம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். கோதுமையின் மாவை அக்கிபுண். நெருப்பு பட்ட இடம். மேல் தோல் உறிந்து போன இடங்களில் பயன்படுத்தினால் விரைவில் குணமடையும் கோதுமை சாப்பிடுவதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம். கோதுமை சாப்பிடுவதால் இதயம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் போன்றவை அனைத்தும் கடந்த காலங்களில் கோதுமையால் நமக்கு ஏற்படும் நன்மைகளாக நாம் பார்க்கப்பட்டவை.
ஆனால் காலப்போக்கில் அதே சத்து மிகுந்த கோதுமை மரபணு மாற்றப்பட்ட பிறகு நமக்கு பல்வேறு பிரச்னைகளை கடந்த 20 வருடங்களாக கொடுத்து வருகிறது என்றால் அதை நம்மால் நம்ம முடியுமா. அந்த வகையில் எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம் என்பதை நிரூபிக்கும் விததமாக இன்று கோதுமையில் பல்வேறு கலப்படங்கள் ஏற்பட்டு அது மனிதர்களை ஆட்டி படைத்து வருகிறது. ஆனால் இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் சர்க்கரை நோய் வந்துவிட்டதா உடனே அரிசியை நிறுத்துங்கள் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் சப்பாத்தி கோதுமை தோசை என கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை நம்மவர்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இது எந்த வகையிலும் அவர்களுக்கு கை கொடுக்காது என்பது சிறிது காலம் கழித்து இதன் உண்மை தன்மை தெரிய வருகிறது. அந்த வகையில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இருந்த கோதுமைக்கும் தற்போது உள்ள கோதுமைக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து புதுச்சேரியை சேர்ந்த இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவ மருத்துவர் சந்தோஷ் சரவணன் கூறுகையில், ‘‘ரேஷன் கடையில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட கோதுமைகள் தான் ஒரிஜினல் கோதுமைகள். இயற்கையாக நமக்கு கிடைத்த தரமான கோதுமை அவை. அப்போது உள்ள கோதுமைகளை வாங்கி வைத்தால் பூச்சிகள் வரும் தவிடுகள் நிறைய இருக்கும். அதன் பிறகு வந்த கோதுமை நாம் எத்தனை ஆண்டுகள் சேமித்து வைத்தாலும் அதில் பூச்சிகள் வருவதில்லை. 20 வருடங்களுக்கு முன்பு கோதுமையில் தேவை அதிகரித்த காரணத்தினால் அப்போது அதனை உணர்ந்து கொண்ட வணிக நிறுவனங்கள் மரபணு மாற்றப்பட்ட கோதுமைகளை விளைவிக்க தொடங்கி விட்டனர். ஹைபிரிட் எனப்படும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் கோதுமையை பயிரிட ஆரம்பித்தார்கள். இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறும்.
தற்போது நாம் வாங்கும் கோதுமையை பலரும் பல வகைகளில் குறிப்பிடுவார்கள். குறிப்பாக பஞ்சாப் கோதுமை. ராஜஸ்தான் கோதுமை என தரம் பிரித்து இவ்வாறு கூறுவார்கள். கடந்த காலங்களில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றவாறு கோதுமையின் தரம் மாற சிலர் கோதுமை மாவுகளை நாங்கள் பயன்படுத்த மாட்டோம் கோதுமை வாங்கி கடையில் அரைப்போம் என கூறுவார்கள். அதுவே தற்போது தவறான ஒரு விஷயம். தற்போது வரும் பெரும்பாலான கோதுமைகள் மரபணு மாற்றப்பட்ட கோதுமைகளாகத்தான் வருகிறது. அதை கடையில் கொண்டு போய் அரைத்து சாப்பிட்டாலும் அதில் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.இன்னைக்கு இளைய தலைமுறைகளுக்கு வரும் வீசிங் எனப்படும் நுரையீரல் தொற்று பிரச்னைக்கு கோதுமை ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
2000ம் ஆண்டு இருந்த பிஸ்கட் கம்பெனிகளின் எண்ணிக்கையும் தற்போதுள்ள பிஸ்கட் கம்பெனிகளின் எண்ணிக்கை ஒப்பிடு செய்து பார்த்தால் நமக்கு ஓரளவுக்கு விளங்கும் இரண்டாயிரத்தில் இருந்த பிஸ்கட் கம்பெனிகளோடு ஒப்பிடுகையில் 2025 இல் எண்ணற்ற பிஸ்கட் கம்பெனிகள் வந்துவிட்டன. இவை அனைத்தும் கோதுமையை மையாக வைத்து தான் வியாபாரம் நடக்கிறது. இவர்கள் ஏற்கனவே பிற்காலத்தில் கோதுமையின் தேவை அதிகரிக்கும் என்பதை உணர்ந்து மரபணு மாற்றப்பட்ட கோதுமையை விளைவித்து அதன் பிறகு தங்களது வியாபாரத்தை நிலைநிறுத்தி உள்ளனர். தற்போது கோதுமை என்பது இண்டஸ்ட்ரியல் பொருளாக மாறிவிட்டது. பிரட். பிஸ்கட் மைதா என பல பரிணாமங்களில் இது வெளியே வருகிறது. மேலும் பல்வேறு மதுபானங்கள் மற்றும் பியர் தயாரிக்கவும் கோதுமைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதை உணவுக்காகவும் நாம் பயன்படுத்தும் பிஸ்கட் முதல் பல்வேறு தின்பண்டங்கள் மற்றும் மதுபான ஆலைகள் என அனைத்திற்கும் கோதுமை தேவைப்படுவதால் அந்த அளவிற்கு கோதுமையை சாதாரணமாக பயிரிட்டு விளைவிக்க முடியாது. அதனால் இதை முன்கூட்டியே அறிந்து மரபணு மாற்றப்பட்ட கோதுமையை புகுத்தி விட்டனர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கோதுமையால் செய்த சப்பாத்தியை நாம் சாப்பிடும் போது மிகவும் கடினமாக இருக்கும் இரண்டு சப்பாத்திக்கு மேல் நம்மால் சாப்பிட முடியாது. ஆனால் இன்று மிகவும் மிருதுவாக ஐந்து அல்லது ஆறு சப்பாத்திகள் சாதாரணமாக சாப்பிடும் அளவில் கோதுமை உள்ளது. இது எவ்வாறு சாத்தியம் ஆயிற்று. அவ்வாறு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நாம் சாப்பிட்ட சப்பாத்திகளை இப்போது உள்ள தலைமுறைகளுக்கு கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். அந்த காலத்தில் நாம் சாப்பிட்ட சப்பாத்தி இரண்டு அல்லது மூன்று சாப்பிட்டால் வயிறு நிரம்பிவிடும் அடுத்த ஆறு மணி நேரம் பசி இருக்காது ஆனால் இன்று அப்படி கிடையாது.
தற்போது கோதுமைகளை மிருதுவாக்கவும் வெண்மையாக்கவும் செரிவூட்டபட்ட கோதுமை என்ற பெயரில் அது மாவாக வெளியே வருகிறது. மேலும் தற்போது அதில் மல்டி கிரைன் சோயா என பல விஷயங்களை சேர்த்து விட்டனர். ஆனால் இது எதுவுமே மனிதர்கள் உடல் நலத்தற்கு ஒத்துவர மாட்டேங்குது என்பது தான் உண்மை. இன்றய தேதிக்கு அரசி சாப்பிட்டாலும் கோதுமை சாப்பிட்டாலும் சர்க்கரை அளவு ஒரே மாதிரியாக தான் காட்டுகிறது இதை பலரும் தங்களது ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்துள்ளனர். இன்றைய தேதியில் நான்கு சப்பாத்தி சாப்பிட்டால் ஒன்றுதான் நான்கு தோசை சாப்பிட்டால் ஒன்னு தான் அந்த அளவிற்கு இரண்டும் ஒரே அளவாக வந்து விட்டது. பொதுவாக சர்க்கரை நோய் வந்துவிட்டது என்றால் சப்பாத்தி சாப்பிடலாம் நல்லது என கூறுவார்கள் ஆனால் அரசியில் என்ன இருக்கிறதோ தற்போது வரும் கோதுமையிலும் அதுதான் உள்ளது. எனவே சுகர் வந்துவிட்டது என்ற காரணத்திற்காக சப்பாத்தி அதிக அளவு எடுத்துக் கொண்டால் அப்போதும் சர்க்கரை நோய் அதிகரிக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,’’ என்றார்.
விழிப்புணர்வு அவசியம்
இந்தியாவில் வட மாநிலங்களில் கோதுமை அதிகமாக பயன்படுத்துவார்கள் அரிசியை மிக குறைவாக பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு கோதுமை ஒத்துக் கொண்டு விட்டது ஆனால் நமக்கு கோதுமை அதிக அளவில் ஒத்துக் கொள்ளாது நமது சீர்தோஷம் என்பது உஷ்ண நிலையில் உள்ளது. இதனால் பலருக்கும் கோதுமை சாப்பிட்டால் பிரச்னை ஏற்படுகிறது. குளிர்காலத்தில் நமக்கு கோதுமை ஒத்துக் கொள்ளும் ஆனால் கோடை காலத்தில் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே உணவுகளின் தரம் கடந்த காலங்களில எப்படி இருந்தது தற்போது எப்படி இருக்கிறது, நாம் சாப்பிடும் உணவால் நமக்கு எதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் உணவுகளை எடுத்துக் கொள்வதில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
மைதா பயன்பாடு
கோதுமையில் இருந்து ஒரு பிரிவுதான் இந்த மைதா. இந்தியாவில் தான் மைதா எனக் கூறுகிறார்கள் இந்தியாவை விட்டு வெளியே சென்று விட்டால் உலக நாடுகளில் மல்டி பர்ப்பஸ் ப்ளோர் என மைதாவை அழைக்கின்றனர். எதற்கு வேண்டுமோ அதற்கு இதை பயன்படுத்திக் கொள்ளலாம். கோதுமையின் கடைசி வர்ஷன் மைதா. இவ்வாறு கோதுமை மற்றும் மைதாவை ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு நாடுகளிலும் வேறு விதமாக பயன்படுத்துகின்றனர் எனவே இதை பயன்படுத்தும் போது நமக்கு கோதுமை ஒத்து வரவில்லை என்றால் அதை நாம் விட்டுவிட வேண்டும்.
நுரையீரல் தொற்று
20 வருடத்திற்கு முன்பு இருந்த கோதுமை வேறு இப்போது சந்தையில் உள்ள கோதுமை வேறு. இதிலிருந்து தப்பிக்க மரபணு மாற்றப்படாத கோதுமையை தேடிப் பிடித்து வாங்க வேண்டும். ஆர்கானிக் கோதுமை என வருகிறது அதின் உண்மை தன்மை கண்டறிந்து வாங்க வேண்டும் இல்லையென்றால் கோதுமையை தவிர்ப்பதே நல்லது. குறிப்பாக தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உள்ளவர்கள். நுரையீரல் தொற்று உள்ளவர்கள். சைனஸ் அல்லது அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் கோதுமையை தவிப்பது நல்லது. இதனை ஆங்கிலத்தில் பேக்கர்ஸ் அலர்ஜி எனக் கூறுவார்கள். பேக்கர்ஸ் அலர்ஜி என்பது சற்று புதிய வார்த்தையாக இருக்கும் ஆனால் காலப்போக்கில் இது பிரபலமடையும். உடல்நிலை சரியில்லை என்றால் நாம் பிரெட் வாங்கி சாப்பிடுவோம் ஆனால் வருங்காலத்தில் அந்த பிரட் தவிர்க்கப்பட வேண்டிய உணவாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை மைதா என்பது இன்றைய காலகட்டத்தில் உலகில் மல்டி பர்ப்பஸ் உணவாக மாறிவிட்டது. அது இல்லாமல் வேறு எந்த உணவும் இல்லை என்ற நிலை வந்து விட்டது.
The post மரபணு மாற்றப்பட்ட கோதுமையால் உடல் உபாதைகள் அதிகரிக்கும்: மருத்துவர் எச்சரிக்கை appeared first on Dinakaran.