×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு வாபஸ் பெற இன்று கடைசி நாள்: இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை வெளியீடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 10ம் தொடங்கி 17ம் தேதியுடன் முடிவடைந்தது. திமுக, நாதக மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 58 பேர் 65 மனுதாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனையில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோரின் மாற்று வேட்பாளர்களின் 2 மனுக்களும், ஒரு சுயேச்சை வேட்பாளரின் மனு ஒன்றிலும் அபிடவிட் இணைக்கப்படாததால் தள்ளுபடி செய்யப்பட்டன.

மொத்தம் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று (20ம் தேதி) கடைசி நாள். அதன்படி, இன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணிக்குள், தேர்தலில் போட்டியிட விரும்பாத வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். இதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின்னர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அவர்களது சின்னமும், சுயேச்சைகள் மற்றும் சின்னம் ஒதுக்கீடு பெறாத அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டு, வேட்பாளர்கள் கேட்கும் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஒருவேளை ஒரே சின்னத்தை பல வேட்பாளர்கள் கேட்டால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி, அதன்பின், சின்னம் கேட்டு முதலில் தாக்கல் செய்யப்பட்ட மனு, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி எனும் வரிசையின் அடிப்படையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். இதையடுத்து, ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்களுடன் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இன்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் என்பதால் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு வாபஸ் பெற இன்று கடைசி நாள்: இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Erode East ,DMK ,NDA ,Dinakaran ,
× RELATED ஈரோடு இடைத்தேர்தல்: இன்று வாக்கு...