* 20 லட்சம் இளைஞர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்க திட்டம், மாணவர்களின் திறனை மேம்படுத்த ரூ.78 கோடியில் 13 ஒப்பந்தங்கள்
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சி அடைந்து வரும் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களுக்கு இணையாக கோவை மாநகரில் அடுத்தடுத்து பல ஐடி பார்க்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோவை-பொள்ளாச்சி சாலையில் 7 லட்சம் சதுர அடியில் ஐடி பார்க் அமைக்கப்படும் என சமீபத்தில் டேனி ஷெல்டர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கோவை மாநகரின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியை மேலும் தீவிரமாக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதன்மூலம் கோவை-பொள்ளாச்சி சாலை முக்கிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களுடன் தொழில்நுட்ப மையமாக வளர்ந்து வருகிறது. ஏற்கனவே, ரத்தினம் எல்அண்ட்டி டெக் பூங்கா இங்கே பெரிய அளவில் கால் பதித்துள்ளது. இப்போது புதிதாக அமைய உள்ள டேனியின் புதிய 7 லட்சம் சதுர அடி ஐடி பூங்கா கூடுதல் கவனம் பெற்றுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஐடி சேவைகளுக்கான பிரதான இடமாக கோவை மாறி வருகிறது.
அதன்படி, ஆம்பர் குழுமம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் நிறுவனம் கோவையில் புதிய அலுவலகத்தை விரைவில் திறக்க உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் அடுத்த சில மாதங்களில் துவங்க உள்ளது. 15 மாடி கட்டிடமாக இந்த கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. மேலும், கோவையில் வின்ப்ரா சைபர்சிட்டி 1.92 மில்லியன் சதுர அடி கொண்ட ஐடி பார்க் அமைக்கப்பட உள்ளது. நகரின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப திட்டங்களில் ஒன்றாக இது அமையும்.
தற்போது கோவையில் இருக்கும் ஐடி பார்க்குகளைவிட, மிகப்பெரிய அளவில் இந்த ஐடி பார்க் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பிரம்மாண்ட வரைபடம் வெளியிடப்பட்டு உள்ளது. கோவையின் மிகப்பெரிய ஐடி பார்க்காக மட்டுமன்றி, அதிக சேவைகளை மேற்கொள்ளும் ஐடி பார்க்காக இது உருவெடுக்க உள்ளது. ஏற்கனவே கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் ரூ.9 கோடி செலவில் உருவாகி வருகிறது. காந்திபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு பிரம்மாண்ட செம்மொழி பூங்கா, பெரியார் நினைவு நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான திட்டப்பணிகளும் விரைவில் துவங்க உள்ளன. இப்படி, கோவையில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும் நிலையில், ஐடி பார்க்குகளும் அடுத்தடுத்து களம் இறங்குவதால், கோவை மாநகரம் விரைவில் ஐதராபாத், பெங்களூரு நகரங்களை முந்தினால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
மென்பொருள் ஏற்றுமதியில் கோவை மாநகரம் 5வது இடம் பிடித்துள்ள காரணத்தால், ஐ.டி பார்க் துறையில், கோவையை நோக்கி முதலீடுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. முக்கியமாக, சென்னையில் தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கப்படும் நிலையில் இன்னொரு பக்கம், ஐடி நிறுவனங்கள் கோவையை நோக்கி செல்ல தொடங்கி உள்ளன. மற்ற நகரங்களில் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் நிலையில்தான் கோவையில் புதுப்புது ஐடி நிறுவனங்கள் அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
அருமையான சீதோஷ்ண நிலை, தண்ணீர் வசதி, சாலை வசதி, விமானம் மற்றும் ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் கோவை கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டின் ஐடி தலைநகராக மாறி வருகிறது. அந்த வகையில் கோவையில் மேற்கொள்ளப்படும் ஐடி முதலீடுகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. சென்னையில் கடந்த 9ம் தேதி நடந்த விழாவில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘கோவையில் 2 மில்லியன் (20 லட்சம்) சதுர அடியில் ஐடி பார்க் அமைப்பதற்கான திட்டத்தை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
மாநில அரசின் முக்கிய துறைகளில் ஒன்றான செயற்கை நுண்ணறிவு துறை, அதாவது ஏஐ தொழில்நுட்ப துறையின் பல்வேறு திட்டங்கள் இந்த ஐடி பார்க்கில் நிறைவேற்றப்படும். கோவையின் பெரிய ஐடி பார்க்குகளில் ஒன்றாக இது இருக்கும்’’ என குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தின்படி, தமிழ்நாடு அரசின் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை ஒருங்கிணைக்கும் தொலைநோக்கு பார்வையுடன், கோவை மாவட்டத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஏஐ தொழில்நுட்ப அடிப்படையிலான வருகைப்பதிவு மற்றும் தொடர்பு கண்டறிதலுக்கான இ-பார்வை திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.
பல்வேறு புதுமைகளில் அளவுகோல்களை அமைத்து வரும் தமிழ்நாடு அரசு, ஏஐ தொழில்நுட்பத்துக்கான சிறந்த மையமான, ஏஐ ஆய்வகங்களை மாநிலம் முழுவதும் நிறுவி வருகிறது. கோவையிலும் இந்த ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, கூகுள், பேபால், ஏடபிள்யூஎஸ் போன்ற உலகளாவிய ஜாம்பவான்களுடன் தமிழ்நாடு அரசு கைகோர்த்துள்ளது. இந்நிறுவனங்களுடன் இணைந்து, 20 லட்சம் இளைஞர்களுக்கு, அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய, தொழில்நுட்ப உந்துதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இத்திட்டம், செயல்பாட்டுக்கு வரும்போது, கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும், சர்வதேச சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலைக்கு சேர, தங்களை தயார்படுத்திக்கொள்ளும் தகுதிகளை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
* மென்பொருள் ஏற்றுமதியில் சாதனை
இந்தியாவில், இரண்டாம் நிலை நகரங்களில் 2024ம் ஆண்டில் மென்பொருள் ஏற்றுமதியில் கோவை முக்கிய பங்காற்றியுள்ளது. மென்பொருள் ஏற்றுமதியில் 5 பெருநகரங்களில் கோவையும் இடம் பிடித்துள்ளது. காந்திநகர் (குஜராத்) ரூ.8,637 கோடி, மொஹாலி (பஞ்சாப்) ரூ.4,228 கோடி, ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) ரூ.3,217 கோடி, விசாகப்பட்டினம் (ஆந்திரா) ரூ.2,625 கோடி, கோவை (தமிழ்நாடு) ரூ.2,548 கோடி. பெங்களூரு, ஐதராபாத்திற்கு போட்டியாக இங்கே பல ஐடி பார்க்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் கோவை நகரம் கொச்சியைவிட அதிக அளவில் மென்பொருள் ஏற்றுமதியை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது.
* தமிழ்நாடு அரசு சார்பில், ஐசிடி அகாடமி என்னும் பயிற்சி மையம் மூலம் கடந்த ஓராண்டில் 10 ஆயிரத்து 435 ஆசிரியர்கள் மற்றும் 34 ஆயிரத்து 227 மாணவ, மாணவிகளுக்கு தொழில்சார்ந்த நிறுவனங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஐடியில் எந்தெந்த துறைகளில் மேம்பட வாய்ப்புகள் உள்ளது என்பதை கவனித்து அந்த துறைகளில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த பல்வேறு தொழில் பிரிவுகளோடு ரூ.78 கோடியில் 13 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
* தண்டவாளங்களை யானை கடந்தால் ரயிலை நிறுத்தும் ஏஐ தொழில்நுட்ப ஆப்: அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது
கோவையில் இருந்து கேரளா செல்லும் ரயில்கள் போத்தனூர் முதல் கஞ்சிக்கோடு வரையிலான வனப்பகுதி வழியாக செல்கின்றன. ரயில்கள் ஏ, பி என்ற இரண்டு ரயில் பாதைகளில் சென்று வருகின்றன. அதில் `ஏ’ ரயில் பாதை 1.78 கி.மீ. தூரமும், `பி’ ரயில் பாதை 2.8 கி.மீ தூரமும் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் அமைந்துள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில் 35 காட்டு யானைகள் ரயில் மோதி இறந்தன. இதனை தடுக்க பாலக்காடு ரயில்வே நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகே காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்டறிய 15.42 கோடி ரூபாய் செலவில் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் யானை ஊடுருவல் கண்டறிதல் அமைப்பு என்ற செயலியை பாலக்காடு ரயில்வே கோட்டம் உருவாக்கி வருகிறது.
இதற்காக போத்தனூர் முதல் கொட்டேகாடு வரை மொத்தம் 48.4 கி.மீ. தூரத்திற்கு ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் கேபிள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த கேபிள்களுக்கு அருகே யானைகள் வரும்போது, கால்தடங்கள் மூலம் ஏற்படும் அதிர்வுகள் மூலம் வாளையாறு மற்றும் பாலக்காட்டில் உள்ள கட்டுப்பாட்டு அறை மற்றும் லோகோ பைலட், வனப்பணியாளர்கள் ஆகியோருக்கு எச்சரிக்கை ஒலியுடன் தகவல் அனுப்பப்படும். மொபைல் மற்றும் இணையதளம் மூலம் தகவல் அனுப்பப்படுவதால் தண்டவாளத்தில் உள்ள யானைகள் நடமாட்டத்தை அறிந்து ரயிலின் வேகத்தை குறைக்கவும், நிறுத்தவும் முடியும்.
The post 2 மில்லியன் சதுர அடியில் புதிய ஐடி பார்க்: ஏஐ தகவல் தொழில்நுட்ப பூமியாக மாறும் கோவை: கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு கைகோர்ப்பு appeared first on Dinakaran.