சர்வதேச சந்தையில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது. இந்திய ஜவுளி ஏற்றுமதியில் 55 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் ஜவுளி உற்பத்தியில் முதன்மை இடத்தில் செயல்பட்டு வருகிறது. திருப்பூரில் 1930ல் ஒரே ஒரு பின்னலாடை இயந்திரத்துடன் தொடங்கிய ஜவுளி உற்பத்தி 1980ல் ரூ.50 கோடி மதிப்பில் பின்னலாடை துணிகளை ஏற்றுமதி செய்து, கடந்த ஆண்டு ரூ.36 ஆயிரம் கோடி ஏற்றுமதி வர்த்தகத்தை எட்டியுள்ளது.
இதுமட்டுமல்லாது உள்நாட்டு உற்பத்தியில் ரூ.35 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் செய்துள்ளது. 1980க்கு பிறகு தொடர்ச்சியான வளர்ச்சியை கண்டு வந்த திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி 2014ம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜ அரசு பொறுப்பேற்ற பின்பு அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு, கொரோனா ஊரடங்கு, பருத்தி தட்டுப்பாடு, நிலையில்லாத நூல் விலை உயர்வு, கன்டெய்னர் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றின் காரணமாக நிலை குலைந்தது. இருப்பினும் விடாமுயற்சியோடு உழைப்பை செலுத்தி கடந்த நிதியாண்டில் ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகத்தை செய்துள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்துள்ளது. தற்போது வரை 12.9 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், அக்டோபர் மாதத்தில் இந்திய அளவில் 38.6 சதவீதம், நவம்பர் மாதத்தில் 11.4 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரை பொறுத்தவரை ரூ.25 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற நிதியாண்டில் ரூ.40 ஆயிரம் கோடி வர்த்தக இலக்கை அடைய முடியும் என்கின்றனர்.
திருப்பூரில் ஏற்றுமதி வர்த்தகம் பல்வேறு சர்வதேச நாடுகளில் ஏற்படும் அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு ஏற்ற இறக்கங்களை கொண்டு மாறுபடக்கூடியது. இச்சூழலில்தான் கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி மிகப்பெரும் பாதிப்பை சந்தித்தது. கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் போர் சூழல் தணிந்து இருப்பதன் காரணமாக வெளிநாட்டைச் சேர்ந்த வர்த்தகர்கள் இயல்பான வர்த்தகத்தை மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.
இதன் காரணமாக நலிவடைந்த பின்னலாடை ஏற்றுமதி, தற்போது மீளத் துவங்கியுள்ளது.அதற்கு ஏற்றார்போல் அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் சர்வதேச போர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்துள்ளார். எனவே அவர் பதவி ஏற்ற பிறகு மீண்டும் போர் சூழல் தணிந்து இயல்பு நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொனால்ட் டிரம்ப்பின் சீன எதிர்ப்பு மனநிலை உலக அளவில் சீனாவிற்கு எதிராக இந்தியாவின் ஆயத்த ஆடை ஆர்டர்களுக்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், ‘‘திருப்பூரில் பின்னலாடை துறை ஏற்றுமதி இந்த நிதியாண்டிற்குள் ரூ.40 ஆயிரம் கோடியை எட்டிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக தற்போது மக்களிடையே வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. மேலும் போட்டி நாடுகளிடையே இருக்கும் அரசியல் அசாதாரண சூழல் காரணமாகவும் எங்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி தற்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும் ஏற்றுமதிக்கு ஒரு பெரிய ஏற்றத்தை கொடுத்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் சரிவு மட்டுமே எங்களுக்கு 5 சதவீத ஏற்றுமதியை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி உலகளாவிய பிராண்ட் நிறுவனங்களான ப்ரைமார்க், டெஸ்கோ, நெக்ஸ்ட், மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர், வார்னர் பிரதர்ஸ், வால்மார்ட் மற்றும் டாமி ஹில்பிகர் ஆகியோர்களிடமிருந்தும் ஆர்டர்கள் பெறப்பட்டு வருகிறது. 2025-26 திருப்பூர் ஏற்றுமதிக்கு பிரகாசமான ஆண்டாக இருக்கும். ஆண்டுக்கு 15 சதவீத வளர்ச்சி என்பது திருப்பூரில் கண்டிப்பாக இருக்கும்.
குறிப்பாக திருப்பூர் பசுமை சார்ந்த ஆடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதால் இதுவும் ஏற்றுமதியை அதிகரிக்க ஒரு காரணமாக அமைந்துள்ளது. மேலும் ஐரோப்பிய ஆஸ்திரேலிய நாடுகளுடன் வரியில்லா ஒப்பந்தம் ஏற்றுமதியை அதிகரிக்க ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியில் 55 சதவீதம் திருப்பூரில்தான் செய்யப்படுகிறது.
நீர்நிலைகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுத்தாத வகையில் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் சுத்திகரிப்பு முறையில் ஆலைகள் செயல்பட துவங்கியதில் இருந்து மரபுசாரா மின் உற்பத்தி, பின்னலாடை துணிகள் மற்றும் கழிவுகளின் மறுசுழற்சி என வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டின் கீழ் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தகம் மேலோங்கி உள்ள நிலையில் இனி வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகளும் உள்ளது.
தற்போதைய சூழலில் திருப்பூரில் உள்ள அனைத்து பின்னலாடை நிறுவனங்களும் 90 சதவீத கொள்ளளவுடன் இயங்கி வருகிறது. கொரோனா காலகட்டத்தில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்தபோதும், அதிலிருந்து மீண்டு தற்போது புதிய உத்வேகத்துடன் தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த கட்ட தொழில் வளர்ச்சிக்கு ஒன்றிய மாநில அரசுகளிடம் தேவையான கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம் அதனை தொடர்ந்து புதிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் தொழிலை மேம்படுத்துவதற்குமான ஏற்பாடுகளை திருப்பூர் பின்னலாடை துறை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது’’ என தெரிவித்தனர்.
* டிசம்பர் மாதத்தில் 15.2% அதிகரிப்பு
ஆயத்த ஆடை ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் துணைத் தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2023 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 2024 டிசம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி 15.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.94 ஆயிரத்து 936 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 13.2 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது.
ஆயத்த ஆடை ஏற்றுமதி வளர்ச்சியின் பாதை இம்மாதமும் தொடர்கிறது. மேலும் திருப்பூர் பின்னலாடை துறை கடந்த நிதியாண்டைவிட இந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 15 சதவீத வளர்ச்சியை அடையும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த நிதியாண்டில் திருப்பூரின் ஏற்றுமதி ரூ.40 ஆயிரம் கோடியாக உயருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சி: ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு சாதகம்: ரூ.40,000 கோடி வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.