×

பொங்கல் முடிந்து திரும்புபவர்களால் சென்னை வரும் விமானங்களில் கட்டணம் பல மடங்கு உயர்வு: அலைமோதும் பயணிகள் கூட்டம்

சென்னை: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து, பயணிகள் ஒட்டு மொத்தமாக சென்னை திரும்ப தொடங்கியதால் வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சென்னைக்கு வரும் விமானங்களில், விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணங்கள் குறைவாக உள்ளது. விமான நிறுவனங்கள் ஒரே ஊருக்கு, போகும் போது ஒரு கட்டணமும், வரும்போது ஒரு கட்டணமும், இரட்டை கட்டணம் முறையை செயல்படுத்துவதால் பயணிகள் கடும் வேதனை அடைந்தனர்.

பொங்கல் தொடர் விடுமுறையால் சென்னையில் வசிக்கும் பல லட்சம் பேர், சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு குடும்பம் குடும்பமாக கடந்த வாரத்தில் புறப்பட்டு சென்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, விடுமுறையும் நிறைவடையும் நேரத்தில் இருப்பதால் வெளியூர் சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். அதேபோன்ற பயணிகளில் பலர் விடுமுறையை முழுமையாக கழித்து விட்டு, ஞாயிறு அன்று விமானங்களில் சென்னை திரும்புவதற்காக, விமானங்களில் டிக்கெட்டுகள் முன்பதிவுகள் செய்துள்ளனர்.

இதனால் மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டிக்கெட்டுகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஒருசில டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. அந்த டிக்கெட் கட்டணங்களும், பலமடங்கு அதிகமாக உள்ளன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னைக்கு வரும் விமானங்களில், டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்தாலும், அதே நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் டிக்கெட் கட்டணங்கள் மிகவும் குறைவாகவே உள்ளது.

இதேபோன்று விமான கட்டணங்கள் ஒரே நாளில், ஒரே ஊருக்கு ஒரே விமானத்தில், சென்னையில் இருந்து செல்வதற்கு குறைந்த கட்டணமும், சென்னைக்கு வருவதற்கு பல மடங்கு அதிக கட்டணமும் விமானம் நிறுவனங்கள் வசூலிப்பது பயணிகள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பயணிகளின் கூட்டங்களை பயன்படுத்திக் கொண்டு, பயணிகளிடம் அதிக கட்டணங்களை விமான நிறுவனங்கள் வசூலிப்பதாக பயணிகள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, விமான நிறுவனங்கள் தரப்பில் கூறுகையில், ‘‘ சென்னைக்கு வருகின்ற விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் குறைந்த கட்டண டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே காலி ஆகிவிட்டதால் அதிக கட்டணங்கள் டிக்கெட்டுகள் மட்டுமே தற்போது இருக்கிறது. அது பயணிகளுக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பது போல் தெரிகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்றால், இனிமேல் வரும் காலங்களில் பயணிகள் தங்களுடைய பயணத்தை முன்னதாகவே திட்டமிட்டு, 2 மாதங்களுக்கு முன்னதாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்’’ என்றனர்.

கட்டணம் விவரம்
* மதுரை- சென்னை ரூ.10,046 முதல், ரூ.17,991 வரை.
* சென்னை- மதுரை ரூ.3,975 முதல் ரூ.4,947 வரை.
* திருச்சி- சென்னை ரூ.6,049 முதல் ரூ.11,089 வரை.
* சென்னை- திருச்சி ரூ.4,862 முதல் ரூ.5,282 வரை.
* கோவை- சென்னை ரூ.5,552 முதல் ரூ.11,089 வரை.
* சென்னை- கோவை ரூ.3,260 முதல் ரூ.6,492 வரை.
* தூத்துக்குடி- சென்னை ரூ.10,750 முதல் ரூ.17,365 வரை.
* சென்னை- தூத்துக்குடி ரூ.5,071 முதல் ரூ.5,281 வரை.
* சேலம்- சென்னை ரூ.10,441.
* சென்னை- சேலம் ரூ.4,862.

The post பொங்கல் முடிந்து திரும்புபவர்களால் சென்னை வரும் விமானங்களில் கட்டணம் பல மடங்கு உயர்வு: அலைமோதும் பயணிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pongal ,Chennai… ,
× RELATED பொது அமைதி மற்றும் மத...