- சஞ்சய் ராய்
- சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
- புது தில்லி
- சீல்டா
- சிபிஐ நீதிமன்றம்
- கொல்கத்தா, மேற்கு வங்காளம்…
- தின மலர்
புதுடெல்லி: கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பை வழங்கிய சியல்டா சிபிஐ நீதிமன்றம், தண்டனை விவரத்தை நாளை அறிவிப்பதாக உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி 31 வயது மதிக்கத்தக்க பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், மருத்துவர்கள் தொடர் போராட்டத்தையும் நடத்தினர்.சம்பவம் நடந்த அடுத்த நாளே காவல்துறையின் தன்னார்வலர் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில், கொல்கத்தா சியல்டா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. 120க்கும் மேற்பட்ட சாட்சிகளிடமிருந்து வாக்கு மூலங்களைப் பதிவு செய்து சுமார் 66 நாள் ரகசிய விசாரணையை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக குற்றத்தில் சஞ்சய் ராயின் தொடர்பை உறுதிப்படுத்த, டி.என்.ஏ போன்ற உயிரியல் மாதிரிகள் உள்ளிட்ட சோதனை முடிவுகள் சிபிஐயால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் உயிருக்காக போராடியதாகவும், குற்றவாளியின் உடலில் ஐந்து தனித்தனி காயங்கள் ஏற்பட்டதாகவும், உயிரிழந்த பெண் மருத்துவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதும் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. அவரது உடலில் கண்கள், வாய் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் கடுமையான ரத்தப்போக்கு உட்பட கொடூரமான தாக்குதலின் அறிகுறிகள் கண்டறியப்பட்டதாகவும் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சியல்டா நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 9ம் தேதி ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் கொல்கத்தா சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனீர்பான் தாஸ் மூடிய கதவு அமர்வில் நேற்று தீர்ப்பை வழங்கினார். அதில், ‘‘ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சஞ்சய் ராய் குற்றவாளி என்று அறிவிக்கப்படுகிறது. குறிப்பாக சட்ட விதிகள் 64, 66 மற்றும் 103 ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் அவர் கொலை குற்றவாளி என்று உறுதி செய்யப்படுகிறார்.
மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து விவரங்களும் குற்றவாளி சஞ்சய் ராயோடு ஒத்துப்போகிறது. அதேப்போன்று முன்னதாக கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் மீது 45 பக்கங்களில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சஞ்சய் ராய் தான் குற்றத்தை செய்தார் என்பதற்காக 11 ஆதாரங்கள் உறுதியாக புலப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் அடிப்படையாக கொண்டு தான் சஞ்சய் ராய் குற்றவாளியாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இவருக்கான தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும்’’ என்று தீர்ப்பளித்தார்.
இதைத்தொடர்ந்து சஞ்சய் ராய் நீதிபதி முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில், ‘‘பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் நான் சிக்க வைக்கப்பட்டேன். இதில் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி சம்பந்தப்பட்டுள்ளார்’’ என்று தெரிவித்தார். அதனை கேட்ட நீதிபதி, ‘‘இதுகுறித்து உங்களுக்கு வரும் 20ம் தேதியன்று பேசுவதற்கு வாய்ப்பு தரப்படும்’’ என்று தெரிவித்தார். இந்த தீர்ப்பை திரிணாமுல் காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். மேலும் வழக்கில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமென பாஜ வலியுறுத்தி உள்ளது.
சம்மந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்; தேசிய மகளிர் ஆணைய முன்னாள் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ரேகா சர்மா கூறுகையில், ‘‘கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் ஒரு நபர் மட்டும் சம்மந்தப்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. வழக்கில் நிதி முறைகேடு செய்தவர்கள் நிச்சயமாக இதில் சம்மந்தப்பட்டுள்ளனர். நீதிமன்றம் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மிகக் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்’’ என்றார். இறந்த பெண் மருத்துவரின் தந்தை கூறுகையில், ‘‘சமீபத்திய நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. சிபிஐ எங்களை எங்கும் அழைத்ததில்லை. ஓரிரு முறை மட்டும் வீட்டிற்கு வந்தனர்.
இதுதொடர்பான விசாரணைகள் குறித்து கேட்கும்போதெல்லாம், விசாரணை நடந்து வருவதாகவே அவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக சம்பவம் நிகழ்த்த இடத்திலிருந்து முழுமையான ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. சிபிஐ அதிகம் முயற்சிக்கவில்லை என்று தோன்றுகிறது. இதற்கு பின்னால் யாரோ ஈடுபட்டுள்ளார். இதில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்றார்.
The post கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு; கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி; சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.