மும்பை: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிப்.19ம் தேதி தொடங்குகிறது. முதலில் இந்த போட்டியை நடத்த பாகிஸ்தான் தயாராகி வந்தது. பாகிஸ்தானில் போட்டி நடந்தால் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்தது. கிரிக்கெட் உலகில் இந்தியாவின் அபரிதமான செல்வாக்கு காரணமாக இந்தியா விளையாடும் ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டன. ஒருவேளை இறுதி ஆட்டத்துக்கு இந்தியா முன்னேறினால், அந்த ஆட்டமும் துபாயில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்து விட்டது. பாக் எதிர்ப்பு எடுபடவில்லை. இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடும் இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது.
ஆஸிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய கேப்டன் ரோகித், கோஹ்லி, சுப்மன் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்ற பேச்சு இருந்தது. ஆனால் மூவரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். கூடவே சுப்மன் கில்லுக்கு துணைக் கேப்டன் பதவியையும் தந்து, எதிர்ப்பாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது பிசிசிஐ. ஜெய்ஸ்வால் முதல் முறையாக சர்வதேச ஒருநாள் ஆட்டத்தில் களம் காண உள்ளார். காயம் காரணமாக 2023 உலக கோப்பைக்கு பிறகு காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை. கூடவே சில வாரங்களுக்கு முன்பு ரஞ்சி, விஜய் ஹசாரே என உள்ளூர் தொடர்களில் விளையாடினார்.
அவற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷமி பல மாதங்களுக்கு பிறகு ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார். ஷமியை போல ஜடேஜாவும் 14மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் அணியில் இடம் பி டித்துள்ளார். விஜய் ஹசாரே தொடரில் ‘ரன் மெஷினாக’ இருக்கும் கருண் நாயருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதே தொடரில் அதிக விக்கெட் அள்ளிய அர்ஷ்தீப் வாய்ப்பு பெற்றிருக்கிறார். அதனால் முகமது சிராஜிக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜடேஜா உடன் சுழல் ஆல்ரவுண்டர்கள் அக்சர், வாஷிங்டன் ஆகியோரும், வேகம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியவும் அணிக்கு வலு சேர்க்க காத்திருக்கின்றனர். எனினும் பிசிசிஐ பிப்.11ம் தேதி ஐசிசியிடம் வழங்க உள்ள பட்டியலே இறுதியானது என்றும் கூறப்படுகிறது.
அணி விவரம்: ரோகித் சர்மா(கேப்டன்) சுப்மன் கில்(துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்கள்), விராத் கோஹ்லி ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யாஷ்வி ஜெய்ஸ்வால்.
ரஞ்சியில் ரோகித்: இந்திய டெஸ்ட், ஒருநாள் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 10 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார். ஆஸி டெஸ்ட்தொடரில் ரோகித் ஆடிய விதம் தான் இந்த முடிவுக்கு காரணம். ஜன.23ம் தேதி தொடங்க உள்ள ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பைக்காக விளையாடுகிறார்.
The post ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணியில் துணைக்கேப்டன் கில் appeared first on Dinakaran.