மெல்போர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் மெல்போர்ன் நகரில் நடக்கிறது. அங்கு ஒற்றையர் பிரிவுகளில் 3வது சுற்று ஆட்டங்களும், இரட்டையர் பிரிவுகளில் 2வது சுற்று ஆட்டங்களும் நடைபெற்றது. அதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் நெம்பர் ஒன் வீராங்கனையான போலாந்தின் இகா ஸ்வியா டெக்(23வயது, 2வது ரேங்க்), கிரேட் பிரிட்டன் வீராங்கனை எம்மா ரெடுகானு(22வயது, 61வது ரேங்க்) ஆகியோர் மோதினர். சுமார் ஒரு மணி 10 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்வியாடெக் 6-1, 6-0 என நேர் செட்களில் எளிதில் வென்று காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா(25வயது, 7வது ரேங்க்) ஒரு மணி 30 நிமிடங்கள் விளையாடி 6-3,6-4 என நேர் செட்களில் உக்ரைன் வீராங்கனை டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா(24வயது, 33வது ரேஙக்)வை வீழ்த்தினார். இன்னொரு ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை யுலியா புடின்சேவா(30வயது, 23வது ரேங்க்), ரஷ்ய வீராங்கனை டாரியா கசட்கினா(27வயது, 10வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் டாரியா 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வென்றார். இந்த ஆட்டம் ஒரு மணி 19நிமிடங்களில் முடிந்தது.
இவர்களை போல் வெரோனிகா குதெர்மேடோவா(ரஷ்யா), ஈவா லீஸ்(ஜெர்மனி), எம்மா நவர்ரோ(அமெரிக்கா), எலனா ஸ்விடோலினா(உக்ரைன்) ஆகியோரும் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றுக்குள் நுழைந்துள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அலெக்ஸ் டி மினூர்(ஆஸ்திரேலியா), கேல் மோன்ஃபில்ஸ்(பிரான்ஸ்), பென் ஷெல்டன்(அமெரிக்கா) ஆகியோருடன் உலகின் நெம்பர் ஒன் வீரரும் நடப்பு சாம்பியனுமான ஜானிக் சின்னர்(இத்தாலி) ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றுக்குள் நுழைந்தனர்.
The post ஆஸி ஓபன் டென்னிஸ்; நான்காவது சுற்றில் டாரியா, ரைபாகினா appeared first on Dinakaran.