×

அமெரிக்க அதிபராக நாளை பதவியேற்பு; தலைநகர் வாஷிங்டனுக்கு டிரம்ப் வருகை: வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்

~வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக நாளை பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், தலைநகர் வாஷிங்டன் வந்தடைந்தார். பதவியேற்பு விழாவையொட்டி தலைநகரில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஆளும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசை வென்றார். இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் நாளை பதவியேற்க உள்ளார். இதற்காக புளோரிடாவில் இருந்து புறப்பட்ட டிரம்ப் தலைநகர் வாஷிங்டனுக்கு நேற்று வந்தார்.

வாஷிங்டனின் புறநகரில் விர்ஜினியாவின் ஸ்டெர்லிங்கில் உள்ள டிரம்ப்பின் தேசிய கோல்ப் கிளப்பில் இரவு விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. இதில் புதிய அதிபராகும் டிரம்பும், துணை அதிபராகும் ஜே.டி.வான்சும் பங்கேற்று தங்களின் அமைச்சரவை சகாக்களை வரவேற்று விருந்தளிக்கின்றனர். இதைத் தொடர்ந்து,இன்று ராணுவ வீரர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ஆர்லிங்க்டன் தேசிய கல்லறைக்கு டிரம்ப் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
பின்னர், பதவியேற்கும் விழாவான நாளை அவர் வெள்ளை மாளிகைக்கு செல்லும் முன்பாக பாரம்பரிய வழக்கப்படி செயின்ட் ஜான்ஸ் எபிஸ்கோபல் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்கிறார். அதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகைக்கு வரும் டிரம்புக்கு தற்போதைய அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் இருவரும் தேநீர் விருந்து அளித்து வரவேற்பார்கள். பின்னர், அதிபர் பைடன், புதிய அதிபர் டிரம்ப்பை நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் செல்வார். அங்கு முறைப்படி 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றுக் கொள்வார். சம்பிரதாயப்படி, தனது முதல் அறிவிப்பு குறித்த ஆவணத்தில் டிரம்ப் கையெழுத்திட்டு அதிபர் பணியை தொடங்குவார்.

பதவியேற்பு விழாவில் முன்னணி தொழிலதிபர்களான டெஸ்லாவின் எலான் மஸ்க், அமெரிக்க இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், மெட்டா சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார். பதவியேற்பு விழாவையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

The post அமெரிக்க அதிபராக நாளை பதவியேற்பு; தலைநகர் வாஷிங்டனுக்கு டிரம்ப் வருகை: வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் appeared first on Dinakaran.

Tags : US President ,Trump ,Washington ,Donald Trump ,Republican Party ,United States ,Dinakaran ,
× RELATED வாஷிங்டனில் பயணிகள் விமானம், ராணுவ...