×

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்.. 1,400 பேர் வேட்பு மனு தாக்கல்: தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள்!!

டெல்லி: டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் 70 எம்எல்ஏக்கள் பதவிக்கு 1,400 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் வரும் பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். மொத்தமுள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம் 1,400 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. வரும் 20ம் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும்.

தொடர்ந்து தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் அதிகாரபூர்வ பட்டியல் வெளியாகும். அதன்மூலம் யார் யாருக்கு இடையே போட்டி இருக்கும் என்பது தெரிந்hதுவிடும். டெல்லியில் உள்ள 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியும், 70 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன. இரு கட்சிகளும் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்தாலும் கூட, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் நேருக்கு நேர் மோதுகின்றன. அதேநேரம் பாஜக தனது கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்து வருகிறது.

டெல்லி சட்டப்பேரவையில் பாஜக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு இரண்டு இடங்களை ஒதுக்கியுள்ளது. தியோலி தொகுதி எல்ஜேபி-க்கும், புராரி தொகுதி ஜேடியூ-க்கும் ஒதுக்கி உள்ளது. பாஜக 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. டெல்லி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. இலவசங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் பாஜகவும், தனது தேர்தல் ஆதாயத்திற்காக இலவச வாக்குறுதிகளை வழங்கியுள்ளதால் டெல்லி தேர்தல் ஆளும் ஆம் ஆத்மிக்கும், பாஜகவுக்கும் இடையிலான முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.

The post டெல்லி சட்டப்பேரவை தேர்தல்.. 1,400 பேர் வேட்பு மனு தாக்கல்: தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள்!! appeared first on Dinakaran.

Tags : Delhi Legislative Assembly Election ,Delhi ,Delhi Legislative Council ,
× RELATED 67 வழக்கில் தொடர்புடைய குற்றவாளி...