கடலூர், ஜன. 18: கால்நடை மருந்தகத்தை திறக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் அருகே வி.காட்டுப்பாளையம் உள்ளது இப்பகுதியில் உள்ள விவசாயிகள் ஏராளமான கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக அப்பகுதியில் கால்நடை மருந்தகம் கட்டப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு கால்நடை மருந்தகம் கட்டி முடிக்கப்பட்டது. இருப்பினும் இன்றுவரை அந்த கால்நடை மருந்தகம் திறக்கப்படவில்லை.
இது குறித்து பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், வி.காட்டுப்பாளையம் பகுதி மக்கள் நேற்று அப்பகுதியில் உள்ள பிரதான சாலையில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராமமக்கள் கூறுகையில், கால்நடை மருந்தகம் கட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் நாங்கள் எங்கள் கால்நடைகளுக்கு மருந்து வாங்க நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே உடனடியாக கால்நடை மருந்தகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளியுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என போலீசார் தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post கால்நடை மருந்தகத்தை திறக்கக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.