ஊட்டி,ஜன.18: நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, காட்டு மாடுகள், சிறுத்தை, கரடி போன்றவைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவைகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வனங்களில் கிடைப்பதில்லை.இதனால், இவைகள் மக்கள் வாழும் பகுதியை முற்றுகையிடுகின்றன. குறிப்பாக, வனங்களை ஒட்டியுள்ள குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்டங்களை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் இந்த காட்டு மாடுகள் முகாமிடுகின்றன.
மேலும், இவைகள் மலை காய்கறி தோட்டங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களில் கூட்டம் கூட்டமாக வலம் வருவதால் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் இந்த காட்டு மாடுகள் பகல் நேரங்களிலேயே குடியிருப்புகளுக்குள் வந்து விடுகின்றன. மேலும், மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகள் மற்றும் கடை வீதிகள் போன்ற பகுதிகளிலும் வந்து விடுகின்றன.
இதனை கண்டு பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடும் போது விழுந்து விபத்து ஏற்படுகிறது.தற்போது ஊட்டி அருகேயுள்ள தேனாடு,மெரிலேண்ட்,பெங்கல்மட்டம்,சாம்ராஜ் மற்றும் மைனலை மட்டம் பகுதியில் அடிக்கடி காட்டு மாடுகள் கூட்டமாக வலம் வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் இந்த காட்டு மாடுகள் சாலையிலேயே படுத்துக் கொள்வதால் பொதுமக்கள் நடந்துச் செல்ல முடிவதில்லை. வாகன ஓட்டுநர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
The post குடியிருப்புகளுக்குள் உலா வரும் காட்டு மாடுகளால் பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.