உலகம் முழுவதும் கார்பன் காற்று மாசை போக்கி, சுற்றுச்சூழலை பாதுகாக்க இயற்கை எரிவாயு (சிஎன்ஜி காஸ்) பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல், எல்பிஜி காஸ் ஆகிய எரிபொருட்களுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு பயன்பாட்டை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக இயற்கை எரிவாயு விநியோக திட்டத்தை நாட்டின் முக்கிய நகரங்களில் செயல்படுத்தி வருகின்றனர். இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் மூலம் இந்த நகர இயற்கை எரிவாயு விநியோக திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டை பொருத்தளவில் சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், நெல்லை, திருச்சி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு போன்ற மாவட்டங்களில் இத்திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இத்திட்டத்தில் வீட்டு சமையலுக்கு எல்பிஜி காஸ் சிலிண்டருக்கு பதிலாக இயற்கை எரிவாயுவை பயன்படுத்த இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோக வாகன எரிபொருளாகவும், தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காகவும் இயற்கை எரிவாயுவை சப்ளை செய்கின்றனர். இந்தவகையில் தற்போது இயற்கை எரிவாயுவை எரிபொருளாக பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இயற்கை எரிவாயு எரிபொருள் கொண்ட வாகன உற்பத்தியை சில தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் நிலையில், ஏற்கனவே பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களையும் இயற்கை எரிவாயு பயன்பாட்டிற்கு மாற்றும் முறை அதிகரித்துள்ளது. சென்னை, வேலூர், சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என முக்கிய நகரங்களில் இயற்கை எரிவாயு எரிபொருள் பயன்பாட்டிற்கு கார், ஆட்டோ, லாரி, பஸ்களை மாற்றும் ரெட்ரோபிட்டர் பட்டறைகள் செயல்படுகின்றன. அங்கு தினமும் பல வாகனங்களை இயற்கை எரிவாயு பயன்பாட்டிற்கு மாற்றி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவு இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 1.32 லட்சத்தை கடத்துள்ளது. அதுவும் கடந்த 3 மாதத்தில் மட்டும் 20 சதவீத அளவிற்கு சிஎன்ஜி வாகனங்கள் அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 2,009 பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயற்கை எரிவாயு (சிஎன்ஜி காஸ்) மூலம் இயங்குகிறது. இதேபோல், கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் 54,991ம், ஆட்டோக்கள் 73,771ம், டூவீலர்கள் 1,492ம் இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 2,752 வாகனங்கள் இயங்குகின்றன.
இந்த வாகனங்களுக்காக ஆங்காங்கே உள்ள பெட்ரோல் பங்க்குகளில் இயற்கை எரிவாயு நிரப்பும் நிலையத்தை (சிஎன்ஜி நிலையம்) ஏற்படுத்தி வைத்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 375 பெட்ரோல் பங்க்குகளில் சிஎன்ஜி காஸ் நிலையங்கள் செயல்படுகின்றன. அங்கு கிலோ கணக்கில் இயற்கை எரிவாயுவை டேங்கரில் நிரப்பி வாகனங்களை மக்கள் இயக்கி வருகின்றனர். லாரி தொழிலுக்கு பிரசித்தி பெற்ற சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சுமார் 4,500 லாரி, பஸ், கார், ஆட்டோ, டூவீலர்கள் சிஎன்ஜி காஸ் மூலம் இயக்கப்படுகிறது. இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சிஎன்ஜி காஸ் நிலையங்களை இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்கி வருகிறது. இதுபற்றி இந்தியன் ஆயில் நிறுவன இயற்கை எரிவாயு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்கள் அதிகளவு உள்ளன. அதுபோல் தற்போது தமிழ்நாட்டில் சென்னை, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி நகரங்களில் அதிகபடியான வாகனங்கள் இயற்கை எரிவாயு பயன்பாட்டிற்கு மாறியிருக்கிறது.
பெட்ரோல், டீசலில் கிடைக்கும் மைலேஜை விட கூடுதலாக 30 முதல் 45 சதவீத மைலேஜ் கிடைப்பதால் மக்கள் மாறுகின்றனர். அதுவும் டூவீலருக்கு 100 கிலோ மீட்டர் இயக்க முடிகிறது. வரும் காலத்தில் 100க்கு 50 சதவீத வாகனங்கள் சிஎன்ஜி வாகனங்களாக மாற்றம் பெறும். அதை நோக்கி மத்திய, மாநில அரசுகள் முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 30க்கும் அதிகமான பஸ்கள் சிஎன்ஜி காஸ் மூலம் இயங்குகிறது. இதனை அதிகரிக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர். அதனால், வரும் காலத்தில் சிஎன்ஜி வாகனங்களே அதிகளவு பயன்பாட்டில் இருக்கும்’’ என்றனர்.
தமிழ்நாட்டில் இயங்கும் சிஎன்ஜி வாகனங்கள்
வாகன வகை எண்ணிக்கை 3 மாதத்தில் அதிகரிப்பு
லாரி, பஸ் 2,009 8%
கார், இலகுரக வாகனம் 54,991 20%
ஆட்டோக்கள் 73,771 10%
டூவீலர்கள் 1,492 (3 மாதத்திற்கு முன் எதுவும் இல்லை)
The post தமிழ்நாடு முழுவதும் சிஎன்ஜியாக மாற்றும் வாகனங்கள் அதிகரிப்பு: 3 மாதத்தில் 20% உயர்ந்தது; 1.32 லட்சம் பஸ், லாரி, கார் இயக்கம் appeared first on Dinakaran.