×

நோய் நாடி நோய் முதல் நாடி

நன்றி குங்குமம் டாக்டர்

பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு

மாஸ்டர் ஹெல்த் செக்கப்…ஏன் அவசியம்?

ஐஸ்பெர்க் பெனோமினான் தியரி (Iceberg Phenomenon theory) தான் உடலுக்கும், வாழ்க்கைக்கும் மிகவும் பொருத்தமானதாக என்றுமே இருக்கிறது. டைட்டானிக் கப்பல் மேலே சிறிதாக தெரிந்த பனிப்பாறையின் மீது மோதியதால், ஒன்றும் ஆபத்தில்லை என்று கேப்டன் கூறுவது போல் அலட்சியப்படுத்தக் கூடாது. அந்த அலட்சியமே, டைட்டானிக் கப்பல் எதன் மீது மோதியது என்று புரிவதற்குள், மொத்தமாக அழிந்து போனது. அதே போல், நாம் நம்முடைய உடலின் வெளித்தோற்றத்தை வைத்து மட்டும், எப்பொழுதும் நமது ஆரோக்கியமின்மையை அலட்சியப்படுத்தக் கூடாது.

தற்போது நாம் தினமும் செல்லும் ரோடுகளில், யாரோ ஒருவர் ஒரு குடையை நிறுத்தி, அதில் நின்று கொண்டு, வாங்க வந்து உங்க உடலின் எடையைச் செக் பண்ணுங்க, என்று கூறுவதை பார்க்க நேரிடுகிறது. நாமும், அவர்கள் கூறுவதைக் கேட்டு, வெயிட் செக் பண்ணினால், நம்முடைய உயரத்துக்கு வெயிட் அதிகம் என்பார்கள். வெயிட் அதிகம் என்பதோடு நிற்காமல், அதனால், உடலில் இம்மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் கூறி, கொஞ்சம் ஃபுல் பாடி ஹெல்த் செக் பண்ணிக்கோங்க என்பார்கள். அதிலும் இத்தனை சதவீதம் ஆஃபர் இருக்கு என்று வேறு நம்மிடம் கூறுவார்கள்.

உண்மையில் மாஸ்டர் ஹெல்த் செக் அப் எதற்காக என்பதையும், அதனால் ஏற்படும் ஆரோக்கிய வாழ்வையும் பற்றி முழுமையாக இந்த கட்டுரையின் வாயிலாக தெரிந்துகொள்வோம். உண்மையில், மருத்துவமனை என்பது, மனித உடலைப் பாதுகாக்கும் இடமாக தான் இருக்கிறது. அதனால் தான், மக்கள் தன்னுடைய உடலில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும், காலநேரம் பார்க்காமல், ஓடி வருகிறார்கள். அதற்கேற்ப, அரசும் கால மாற்றத்திற்கு, தகுந்தவாறு விதவிதமான திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. அதில் மிக முக்கியமானதாக ஆரோக்கியத்திற்கு, முழுஉடல் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனையில் மிகக்குறைந்த செலவிலும், தனியார் மருத்துவமனையில் இன்சூரன்ஸ் மூலமாக இலவசமாகவும் நாம் நமது உடலின் ஆரோக்கியத்தைப் பற்றி எளிதாகவும், உடனுக்குடனும் தெரிந்து கொள்ள முடியும்.

நம்முடைய உடலின் ஆரோக்கியம் குறைகிறது என்பதற்கு நமது உடலே நமக்குத் தெளிவாக சின்ன சின்ன அறிகுறிகள் மூலம் தெரியப்படுத்தி விடும். அதை கருத்தில் கொண்டு நம்முடைய உடலுக்கு ஹெல்த் செக் அப் தேவை என்பதையும் அலட்சியபடுத்தாமல், புரிந்துகொள்ள வேண்டும். முதலில், நாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் விஷயங்களில், மிகமுக்கிய
மானது ஹீமோகுளோபின் குறைபாட்டை தான். பெரும்பாலும் ஹீமோகுளோபின் 12 என்ற அளவில் இருக்க வேண்டும். இந்தியாவில் இருக்கும் ஊட்டச்சத்து குறைபாட்டால், ஹீமோகுளோபின் இன்றும் பலருக்கும் குறைவாக இருக்கிறது. நல்ல சத்தான உணவை உட்கொண்டாலும் சிலருக்கு ஹீமோகுளோபின் அளவு 7, 8, 9 என்ற அளவில் கூட இருக்கிறது. ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் போது, மனமும், உடலும் சோர்வாகவே இருக்கும்.

அதனால் நம்முடைய தினசரி வேலைகளில் நாம் ஈடுபாடு இல்லாமல் இருப்போம். இந்த அறிகுறிகளை கவனிக்காமல் இருக்கும் போதும், தொடர்ச்சியாக ஹீமோகுளோபின் உடலில் குறைவாகும் போதும், ஒரு கட்டத்தில் கார்டியாக் பெயிலியர் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமிருக்கிறது. இந்த அபாயக்கட்டத்தை நெருங்குவதற்கு முன்னரே ஹெல்த் செக் அப் செய்வது நல்லதாகும்.

அடுத்து, முக்கியமாக மனிதர்கள் பாதிக்கப்படுவது பிபி. யாரோ ஒருவர் நம் முன்னிலையில், பிபி எகிறுது என்று விளையாட்டாக சொல்வதை காமெடியாக எடுக்கமுடியாது. ஏனென்றால், பிபியை நாம் எளிதாக கணிக்க முடியாது. சிலருக்கு உடலில் சின்ன சின்ன அறிகுறிகளுடன் தெரியும். சிலருக்கு பிபி இருப்பதே தெரியாமல், நேரடியாக மூளையில் ரத்தக் கசிவை ஏற்படுத்தி விடும். அதனால், பிபியை சரியாக கவனிக்காமல் இருக்கும் போது, மூளையில் ரத்தக்கசிவு, கிட்னி பெயிலியர், ஸ்ட்ரோக் என்று பெரிதாக உடல் பாதிப்படைய ஆரம்பிக்கும்.

அப்படி உடல் பாதித்து வருபவர்களிடம் கேட்கும் போது, பிபி மாத்திரையை சரியாக சாப்பிடாமல் இருந்து விட்டோம் என்று கூறுவார்கள். இன்றைக்கு அரசு மருத்துவமனையில், பிபிக்கு தரமான மாத்திரைகளை வழங்குகிறார்கள். முறையான பரிசோதனையில், நம்முடைய பிபியை சரியாக வைத்துக் கொள்ள வேண்டிய முயற்சியை மட்டும் தொடர்ந்து நாம் செய்ய வேண்டும் என்பதே அவசியமானது.

அடுத்து, முக்கியமாக இருப்பது சர்க்கரை வியாதி. ஏன் சர்க்கரை வியாதியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், பலவித உடல் பாகங்கள் செயல்படாமல் முடங்குவதற்கு காரணமாக இருக்கிறது. அதனால், முதலில் சர்க்கரையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சர்க்கரை வியாதிக்கு முறையான சிகிச்சையால் ஏற்படும் நன்மைகள் என்று இரண்டு விதமாக தெரிந்துகொள்வோம். முதலில் சர்க்கரை வியாதியால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்றால், உடலில் அளவுக்கு அதிகமான சர்க்கரை இருக்கிறது என்றால், கண்கள், நரம்புகள், கிட்னி, மூளை, இருதய பாதிப்பு என்று பல விஷயங்கள் மூலம் நம்மை முடக்கி விடும்.

மேலும் டயபடிக் அல்சரும் மிகவும் முக்கியமானதாகும். சர்க்கரை வியாதி மருந்து மாத்திரைகளுடன் சரியான அளவில் இருக்கும்போது, உடலில் ஏற்படும் புண்களும் ஆறிவிடும். அதுவே சர்க்கரை வியாதி முற்றிப்போகும் போது, கை, கால்களில் புண்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதனால், சிலநேரங்களில் புண்கள் ஆறாமல் இருந்து, உடல் பாகங்களை வெட்டி எடுக்கும் சூழலே வந்து விடும். இது எல்லாமே சர்க்கரை வியாதியின் கடைசி ஸ்டேஜாகும்.

இவற்றை எல்லாம் தடுப்பதற்கு, சர்க்கரை வியாதிக்கு முறையான சிகிச்சையை நாம் மேற்கொள்ள வேண்டும். சிகிச்சையினால் ஏற்படும் நன்மைகள் என்னவென்றால், பெரும்பாலும், டைப்2 டயபடிஸில் முதல் ஸ்டேஜில் இன்சுலின் இருக்கும், ஆனால் சரியாக வேலை பார்க்காது. அதை இன்சுலின் எதிர்ப்பு தன்மை என்போம். இரண்டாவது ஸ்டேஜில், இன்சுலின் உற்பத்தியாவதே குறைந்து விடும். அதாவது, இன்சுலின் எதிர்ப்புத் தன்மை குறைவாக இருக்கும்போதே, சிகிச்சை எடுத்தால், குறைவான மாத்திரைகள் மூலம், இன்சுலினை வேலை பார்க்க வைக்கமுடியும்.

நாம் அதை கண்டுகொள்ளாமல் இருக்கும் போது, இன்சுலின் எதிர்ப்புத் தன்மை அதிகமாகி, ஒரு கட்டத்தில் இன்சுலின் சுரப்பதே இல்லாமல் போய் விடும். அதன்பின், இன்சுலின் உடலுக்கு செலுத்தினால் மட்டும் தான், வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டு விடும். அதனால், இன்சுலின் எதிர்ப்புத் தன்மை இருக்கும் முதல் ஸ்டேஜில் ஆரோக்கியமான உணவு முறைகள், முறையான உடற்பயிற்சி, மருத்துவரின் ஆலோசனையுடன் கூடிய மருந்து மாத்திரைகள் மூலம் சர்க்கரையை சீரான அளவில் வைத்துக் கொண்டால், 2வது ஸ்டேஜ் போகாமலேயே , நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். மேலும், வாழ்நாள் முழுவதும் உடலின் சர்க்கரையை சரியான அளவிலும் வைத்திருக்கமுடியும்.

அடுத்து தைராய்டு டெஸ்ட். பலருக்கும் தைராய்டு பிரச்சனைகள் இருக்கும். அதனால் உடல் எடை அதிகரிப்பதும், குறைவதுமாக இருக்கும். மேலும் தூக்கமின்மை, உடல் சோர்வு, மாதவிடாய் பிரச்சனைகள் என்று பலவித உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும். சிலர் தைராய்டு பிரச்சனை இருப்பது தெரியாமல், ஒவ்வொரு உடல் உபாதைகளுக்கும் மாறி மாறி சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்கள். அதற்கு ஒரே ஒரு தைராய்டு டெஸ்ட் எடுத்து, அதற்கான சிகிச்சையைப் பார்த்தோமானால், மேலே சொன்ன மற்ற பிரச்சனைகள் எளிதில் சரியாகிவிடும்.

அடுத்தபடியாக, கொலஸ்ட்ரால் டெஸ்ட். கொலஸ்ட்ராலை சரியாக வைக்க உணவும், உடற்பயிற்சியும் அவசியமானது. கொலஸ்ட்ராலுக்கு தேவையான சிகிச்சையும், மாத்திரையும் சாப்பிடும் போது, முக்கியமாக ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் வராமல் 80 வயது வரை ஆரோக்கியமாக வாழ முடியும், வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.

அடுத்தபடியாக, ஹெல்த் செக் அப்பில் நுரையீரலை எக்ஸ்ரே எடுப்பார்கள். அதனால் நுரையீரலில் இருக்கும் கட்டிகள் மற்றும் நோய்களை அறிகுறிகள் தெரிவதற்கு முன்னரே கண்டுபிடித்து விட முடியும். அதனால் நோய் நுரையீரலில் பரவாமல் தடுக்கவும் முடியும். அடுத்தபடியாக, ஆண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் எடுப்பார்கள். மேலும், கல்லீரல், மண்ணீரல், கிட்னி போன்றவற்றையும் செக்அப் செய்து பார்ப்பார்கள். அதில், அவர்களுக்கு ப்ரோஸ்டேட் வீக்கமாக இருக்கிறது என்றால், அதற்கான சிகிச்சை எடுக்கும் போது, அதனால் ஏற்படும் கேன்சரை தடுக்க முடியும். ப்ரோஸ்டேட் வீக்கத்தை சரி செய்யும் போது, சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் தொந்தரவுகளை சரிசெய்ய முடியும்.

பெண்களுக்கு எடுக்கப்படும் அல்ட்ரா சவுண்ட் மூலம் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் மற்றும் ஓவரியில் ஏற்படும் பிரச்சனைகளையும் தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவில் முதலிடத்தில் பெண்களுக்கு, மார்பகப் புற்றுநோயும், இரண்டாவது இடத்தில் கர்ப்பப்பைவாய் புற்றுநோயும் இருக்கிறது. மேமோகிராம் செய்வதன் மூலம், மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து சரி செய்ய முடியும். சில நேரங்களில் மற்ற இடங்களுக்கு பரவாமலும் தடுக்க முடியும். மேலும், பாப் ஸ்மியர் செக் அப் மூலம், கர்ப்பப்பைவாய் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து சரி செய்ய முடியும். மேலும், வேறு உடல் பாகங்களுக்கு பரவாமலும் நாம் எளிதாக தடுக்கமுடியும்.

இது போக, சில டெஸ்ட்களில் இசிஜியும், எக்கோவும் மிகவும் முக்கியமானது. சுகர், பிபி இருக்கும் போது, சிலருக்கு ஹார்ட் அட்டாக் வருவது கூட தெரியாமல் போய் விடும். வருடத்திற்கு ஒரு முறை இசிஜி, எக்கோ எடுப்பதன் மூலம், இருதயத்துடிப்பு சீராக இருக்கிறதா என்றும், இருதயம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதையும் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளமுடியும்.

இப்படியாக நாம் வெளித்தோற்ற ஆரோக்கியத்தை மட்டுமே முன்வைத்து, நம்முடைய தினசரி வாழ்வியல் நடவடிக்கையால் உடலை என்ன செய்து வைத்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள மருத்துவத்துறையின் வளர்ச்சியில் முக்கியமானதாக இருப்பது முழுஉடல் பரிசோதனையாகும். நோய் வருவதற்கு முன், உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள் என்பதைத்தான் மருத்துவர்கள் கூறுகிறோம். ஆனால், இந்த பரிசோதனை மூலம், நோயை ஆரம்பக் கட்டத்திலேயே சரி செய்து விடுங்கள் என்று கூறுகிறோம். சமூகத்தில் அதற்கான விழிப்புணர்வும், புரிதலும் வேண்டுமென்பதே அவசியமானதாக இருக்கிறது.

The post நோய் நாடி நோய் முதல் நாடி appeared first on Dinakaran.

Tags : SAFFRON ,DR. ,M. Lord ,
× RELATED உங்க பாப்பா சாப்பிட அடம்பிடிக்குதா?