×

வலியை அறிவோம்

நன்றி குங்குமம் டாக்டர்

இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி

தீரா வலி தரும் டிராபிசியஸ் தசை!

பின் மண்டையில் அடிப்பகுதியில் இருந்து கடைசி கழுத்து எலும்புவரை பரவி இங்கிருந்து துவங்கி தோள்பட்டையின் முன் பகுதி மற்றும் பின் முதுகு வரை விரவிக் காணப்படும் ஒரு தசைக்கு பெயர் தான் டிரபிசியஸ் (Trapezius).

கழுத்து வலியா, தோள்பட்டை வலியா, கை வலியா என சிலநேரங்களில் குழப்பத்தை கூட உண்டாக்கும்.கழுத்து எலும்பு தேய்மானம், கழுத்து நரம்பு அழுத்தம், தோள்பட்டை தேய்மானம் இவற்றிலிருந்து இந்த தசை வலியை பிரித்து அறிவது சில நேரங்களில் கடினம் என்றாலும் கூட அவர்களின் தொழில்முறை அடிப்படையில் இந்த வலியை எளிதாக கண்டறிந்து விடலாம்.

இந்த தசைவலியின் நிலைகள் (conditions)

* வழக்கமாக ஏற்படும் தசை திரிபு(muscle strain)
* வலியைத் தூண்டும் புள்ளிகள்(trigger points) இதனால் சில நேரங்களில் தலை வலி கூட ஏற்படலாம் (tension head ache).
* நரம்பு சேதம் ( nerve damage)
* தசை இறுக்கம் (muscle tightness).

காரணிகள்

* அதிக வேலைப்பளு
* தசை நார் கிழிதல் (muscle tearing)
* மென் மற்றும் தசை விறைத்தன்மை (muscle tenderness and stiffness).
* கம்யூட்டரில் அதிக நேரம் வேலை பார்ப்பது
* சில வகையான விளையாட்டுகள் (throwing events, cricket, golf, tennis)
* சரியான தூக்கம் இன்மை
* கழுத்து மற்றும் தோள்பட்டை மூட்டு பிரச்னைகள்.
* படுத்துக்கொண்டே படிப்பது அல்லது டிவி பார்ப்பது அல்லது அதிக நேரம் குனிந்து கொண்டே எழுதுவது படிப்பது (Awkward posture & desk activities ).
* வலுவற்ற தசைகள் (muscle weakness)
* பாலூட்டும் தாய்மார்கள்
* ஊட்டச்சத்து குறைபாடு (விட்டமின் D குறைபாடு வலியை குணப்படுத்துவதை தாமதப்படுத்தும்).

அறிகுறிகள்

* கைகளில் வீக்கம்
* எரிச்சல்
* உணர்வின்மை
* ஊசி குத்துவது போன்ற உணர்வு
* வலி
* குறிப்பிட்ட பகுதியில் அழுத்தம் கொடுப்பதால் உண்டாகும் வலி .
* தசை இறுக்கம், விறைப்பு கம்யூட்டரில் வேலை செய்பவர்கள்,அலைபேசியை அதிகம் உபயோக்கிப்பவர்கள் ஏற்படும் உபாதைகள் பற்றி நமக்கு ஓரளவு தெரியும் என்பதால், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்படும் கழுத்து மற்றும் மேல் முதுகு வலியைப் பற்றி பார்ப்போம்.

நர்சிங் நெக் அல்லது நர்சிங் மதர்ஸ் நெக் (Nursing neck or Nursing Mother’s neck)

கைக்குழந்தையை வைத்திருக்கும் தாய்மார்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் புகட்ட வேண்டும். கிட்டத்தட்ட 20-30 நிமிடங்கள் ஒரே நிலையில் அமர்ந்திருக்க வேண்டும். இது தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு மட்டும் அல்லாமல் புட்டிப்பால் புகட்டும் தாய்மார்களுக்கும் இதே நிலை தான்.கர்ப்ப காலத்திலேயே கழுத்து மற்றும் முதுகின் வளைவுகளில் மாற்றம் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், சரியான தூக்கம் இன்மை, அடிக்கடி குழந்தைகளுக்கு தாய்ப்பால் அல்லது புட்டிப்பால் புகட்டும் போது உட்காரும் தோரணை, அதிக நேரம் குழந்தையை கையில் வைத்திருத்தல் போன்ற பல்வேறு காரணிகளால் பாலூட்டும் தாய்மார்களுக்கு கழுத்து மற்றும் மேல் முதுகு வலி உண்டாகிறது.

அதிக நேரம் குழந்தையை கவனிக்க வேண்டிய காரணத்தால் குழந்தை பிறந்த முதல் சில மாதங்கள் தன்னைத்தானே சரி வர கவனித்துக் கொள்ளவோ , உடற்பயிற்சி செய்வதோ, சரியாக தூங்குவதோ இயலாத காரியம். குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் போது முதுகுப்பகுதியிலும், குழந்தையை தாங்கிப் பிடிக்கும் கைகளுக்கு கீழே மடியில் தலையணைகளை வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள்.

தற்போது மார்க்கெட்டுகளில் இதற்கான பிரத்யேக வடிவமைப்பு கொண்ட தலையணைகள் கிடைக்கிறது.கழுத்து மேல் முதுகு வலியோடு சேர்த்து எரிச்சல், தலைவலி, கைகளில் உணர்வின்மை போன்ற அறிகுறிகள் இருக்கும். குழந்தையை கவனிப்பதோடு அல்லாமல் தற்போது சில தாய்மார்கள் WFH என கம்யூட்டரிலும் தொடர்ந்து வேலை பார்க்கும் சூழ்நிலை உள்ளதால் இதை நாம் கருத்தில் கொண்டு பாதுகாப்பு முறைமைகளை கடைபிடிக்க வேண்டும் ஏனெனில் வரும் முன் காப்பதே சிறந்தது.

டெக்ஸ்ட் நெக் (Text Nack)

அதிக நேரம் தலையை குனிந்து மொபைல், டேப்லெட், பயன்படுத்துபவர்கள், கம்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்படும்.

அறிகுறிகள்

*கழுத்து வலி
* தசை திரிபு
* நரம்பு அழுத்தம்
* தலை வலி
* தலை சுற்றல்

தடுக்கும் வழிமுறைகள்

*ஃபோனை சரியான உயரத்தில் வைத்து பார்ப்பது
*கம்யூட்டர் , ஃபோன் பார்ப்பதிலிருந்து கொஞ்சம் இடைவெளி விடுவது.
*படுத்துக் கொண்டு ஃபோன் பார்ப்பது , ேப்டாப்பில் வேலை செய்வதை தவிர்ப்பது.
*இடை இடையே ஸ்ட்ரெட்சிங் எக்ஸ்சர்சைஸ் செய்வது (Stretching exercise).
*உடற்பயிற்சி செய்வது.

டிரபீசியஸ் தசை வீக்கம் (Trapezitis)

கழுத்து, தோள்பட்டை நடு முதுகுவரை பரவி இருக்கும் இந்த தசை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.இத்தசை வீக்கமானது தசையில் ஒரு இறுக்கத்தையும், முடிச்சிட்டதைப் போன்ற உணர்வையும் தரும்.மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு தன்னாலே சரியாகிவிடும் என்றாலும் கூட வலியுடன் கழுத்து மற்றும் தோள் பட்டையை அசைக்க முடியாது.சரியான சிகிச்சை எடுக்காமல் அதிக நாட்கள் தொடர்ந்தால் கழுத்தில் நரம்பு அழுத்தத்தை உண்டாக்கும்.

யாருக்கெல்லாம் இந்த வலி அடிக்கடி ஏற்படும்?

*அதிக நேரம் கம்யூட்டரில் வேலை செய்பவர்கள்

*வீரியமாக உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாடுபவர்கள்

*அதிக தூரம் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள்

*அதிக நேரம் மொபைல் மற்றும் டேப்லெட் போன்றவற்றை பயன்படுத்துபவர்கள்

*அதிகமாக இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள்

*பியானோ, வயலின் போன்ற கருவிகளை அதிக நேரம் வாசிப்பவர்கள்.

*ஸ்ட்ரெஸ்

*விட்டமின் குறைபாடு

*தூங்கும் போது சரியான உடல்நிலையை இல்லாமல் இருத்தல்

*கழுத்து, தோள்‌ மூட்டு‌ தேய்மானம் உள்ளவர்கள்.

அறிகுறிகள்

1.கழுத்து, தோள்பட்டையை அசைப்பதில் சிரமம்
2.தலையை திருப்புவதில்/அசைப்பதில் சிரமம்
3.தசை இறுக்கம் அல்லது பிடித்தம்
4.கழுத்தை ஒரு புறமாக சாய்த்தல்.
5.வலியைத் தூண்டும் புள்ளிகள் (Trigger points).

சிகிச்சை முறை:

வலி அதிகமாக இருந்தால், மருத்துவர் அறிவுரையின்படி வலி நிவாரண மருந்துகளை உட்கொள்ளலாம்.

தொடர் பிசியோதெரபி சிகிச்சை

வலியை உண்டாக்கும் புள்ளிகளை மசாஜ் அல்லது ட்ரை நீடிலிங்க், மூலமாக வலியைத் தூண்டும் புள்ளிகளை தூண்டி விடுவது மூலம் நிவாரணம் பெறலாம்.

ஸ்ட்ரெட்சிங் உடற்பயிற்சி (stretching exercise)

பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த வலி இருக்கும் போதே சுடுநீர் ஒத்தடம் தருவது பலனைத்தரும்.வலைதளங்களில் இதற்கான உடற்பயிற்சி முறைகள் நிறைய இருந்தாலும் அவற்றை பார்த்து அத்தனையும் அப்படியே செய்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெறலாம். ஏனென்றால் உங்களின் தசையானது உறுதியாக உள்ளதா? இறுக்கமாக உள்ளதா? வலிமையற்று உள்ளதா என்பதை நீங்கள் அறியாமல் செய்யும் போது அது எதிர்வினையை உண்டாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

உறுதியான தசை, இறுகிய தசை, வலிமை குறைந்த தசை ஒவ்வொன்றிற்கும் உடற்பயிற்சி மாறுபடும். அதையறிந்து சரியான முறையில் பயிற்சிகள் செய்தாலே பலனளிக்கும். மேலே குறிப்பிட்ட சில அறிகுறிகள் இந்த தசைக்கு மட்டும் அல்லாது அருகில் உள்ள மற்ற தசைகளிலும் சேர்த்து வலியை உண்டாக்கும். அதையும் கண்டறிந்து அதற்கு தகுந்த சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டும்.

இதன் சில அறிகுறிகள் கழுத்தின் வேறு வகை நோய்க்கூறின் காரணியாகவும் அமையும். நோய் கண்டறிதல் முறைகளின் மூலமாகத்தான் அவற்றை கண்டறிய முடியும். ஆகவே இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்ட அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டாலும் அவற்றை உங்கள் மருத்துவரிடம் கேட்டு உறுதி செய்து பின்னர் தான் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.சுயசிகிச்சை வேண்டாம்.

The post வலியை அறிவோம் appeared first on Dinakaran.

Tags : Kungumam ,Dr. ,Iyanmura ,Doctor ,N. Krishnaveni ,Dinakaran ,
× RELATED வலியை வெல்வோம்!