×

மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக ஒரே ஆண்டில் ரூ.16.68 கோடி அபராதம் வசூல்

ஊட்டி,ஜன.17: நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக கடந்த ஒரே ஆண்டில் ரூ.16.68 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் போக்குவரத்து விதிமீறல் முக்கிய காரணமாக உள்ளது. அதிக வேகம், அதிக ஆட்கள் ஏற்றிச் செல்வது,மதுபோதையில் வாகனம் ஓட்டுவது, செல்போன் பயன்படுத்தி கொண்டு வாகனம் ஓட்டுவது போன்ற காரணங்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

விபத்துகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும்,விதிகளை மீறுபவர்கள் மீறிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.காவல்துறை மூலம் பல்வேறு அபராத நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் பலரும் விதிகளை மீறுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை அபராத தொகை குறைவாக இருந்ததால் வாகன ஓட்டிகள் பலரிடம் அலட்சியம் அதிகமாக இருந்தது. எனவே, அபராத தொகையை அதிகரித்தால் மட்டுமே விபத்துகளை குறைக்க முடியும் என்று அரசு முடிவு செய்து,மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தது.

இதன்படி இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த அபராத தொகை ரூ.1000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதிவேகமாக வாகனம் ஓட்டினாலோ, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினாலோ ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். அதே தவறை மீண்டும் செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்,ஆம்புலன்ஸ்,தீயணைப்பு வாகனம் போன்ற அவசர வாகனங்கள் செல்லும் போது வாகனத்தை சாலையோரம் ஒதுக்கி அவற்றுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது, தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஹாரன் அடிப்பது போன்ற செயல்களுக்கு முதல் முறை ரூ.1000, அதே தவறை மீண்டும் செய்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்கு 2.19 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.16.68 கோடி அபராதமாக காவல்துறையால் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராத கட்டணம் அதிகரிக்கப்பட்ட பின்னர் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. காவல்துறை தரப்பிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு 2.32 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,ரூ.3.12 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. 2022ம் ஆண்டு 1.96 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3.86 கோடி அபராதமாகவும், 2023ம் ஆண்டு 2.49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.20.23 கோடி அபராதமாகவும் வசூலிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 2.19 லட்சம் வழக்குகள் பதியப்பட்டு, ரூ.16.68 கோடி அபராத வசூலிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

The post மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக ஒரே ஆண்டில் ரூ.16.68 கோடி அபராதம் வசூல் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED தேயிலை பூங்காவில் நாற்று உற்பத்தி தீவிரம்