×

பாம் சரவணனை சுட்டுப் பிடித்த போலீசார் நாட்டு வெடிகுண்டு வெடிக்காததால் உயிர் தப்பிய போலீஸ்: 7 ஆண்டுக்கு முன் மாயமான ரவுடியை பாம் சரவணன் எரித்துக் கொன்றது அம்பலம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிதீர்க்க இருந்த பிரபல ரவுடி பாம் சரவணனை போலீசார் சுட்டுப் பிடித்தனர். அப்போது நாட்டு வெடிகுண்டு வெடிக்காததால் அதிர்ஷ்டவசமாக போலீசார் உயிர் தப்பினர். மேலும் கோயம்பேடு ரவுடியை எரித்து கொலை செய்ததாக பாம் சரவணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னையில் குற்ற செயல்களை தடுக்கவும், குற்ற செயல்கள் நிகழாமல் இருக்கவும் போலீசார் பல்வேறு வியூகங்களை வகுத்து ரவுடி கும்பல்களை ஒடுக்கி வருகின்றனர். அந்த வகையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்பு சென்னை மாநகர கமிஷனராக பொறுப்பேற்ற அருண், சரித்திர பதிவேடு ரவுடிகளுக்கு எதிராக பல்வேறு வியூகங்களை அமைத்து தொடர் நடவடிக்கையாக போலீசார் அவர்களை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

குறிப்பாக, ரவுடிகளை தொடர்ந்து கண்காணிக்க ரவுடிகள் நுண்ணறிவுப் பிரிவு தொடங்கப்பட்டு சரித்திர பதிவேடு ரவுடிகள் உள்பட அனைத்து ரவுடிகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்க்க இரண்டு ரவுடி கும்பல்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக ரவுடிகள் நுண்ணறிவு பிரிவு போலீசார் சென்னை மாநகர கமிஷனர் அருணுக்கு அறிக்கை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து உஷார்படுத்தப்பட்ட போலீசார், ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட அவரது உறவினர்களின் வீடுகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அவர்களது வீட்டில் இருந்து 51 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் சுமார் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நாகேந்திரன் உறவினர்கள் வீடுகளில் 8 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை செய்து வங்கி ஆவணங்கள் மற்றும் வீட்டுப் பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங்கின் தீவிர ஆதரவாளராக இருந்த நபர் புளியந்தோப்பு வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்கின்ற பாம் சரவணன் (48), ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு இவர், சென்னையில் இருந்து தலைமறைவானர். தற்போது திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் இந்திரா நகர் பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் மீது 6 கொலை உள்பட 33 வழக்குகள் உள்ளன. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் தொடர்ந்து போலீசார் இவரை தேடி வந்தனர்.புளியந்தோப்பு சரித்திர பதிவேடு ரவுடி என்பதாலும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க பாம் சரவணன் தயாராக இருப்பதாகவும் உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து பாம் சரவணனை தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் நாகேந்திரன் வீடு உள்ள பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கூட்செட் பகுதியில் பாம் சரவணன் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தனிப்படையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப் இன்ஸ்பெக்டர் மணி, காவலர்கள் சரவணபிரசாத். கஜேந்திரன் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது பாம் சரவணன் போலீசாரை பார்த்து தப்பித்து ஓடும்போது அவரது கையில் இருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை போலீசார் மீது தூக்கி வீசினார். அந்த நாட்டு வெடிகுண்டு வெடிக்காத காரணத்தினால் அதிர்ஷ்டவசமாக போலீசார் உயிர் தப்பினர். அப்போது எஸ்.ஐ. மணி அவரை பிடிக்கும் முற்பட்டபோது பாம் சரவணன் கையில் இருந்த கத்தியால் எஸ்ஐ மணியை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், பாம் சரவணனின் காலில் சுட்டார். இதில் இடது பக்க காலில் குண்டு பாய்ந்த பாம் சரவணன் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். உடனடியாக போலீசார் பாம் சரவணனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் மணியை மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.பாம் சரவணன் சுடப்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் தொடர் விசாரணை நடத்தினார். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், ஒரு கத்தி மற்றும் கஞ்சா பொட்டலங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த இடத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தி உள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாம் சரவணனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். எம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க பாம் சரவணன் வியாசர்பாடி பகுதிக்கு வந்தாரா யாரை கொலை செய்ய அவர் திட்டம் தீட்டி வைத்திருந்தார். இதற்காக சென்னையில் உள்ள சில ரவுடிகள் ஒருங்கிணைக்கப்பட்டார்களா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யார் இந்த பாம் சரவணன்?
புளியந்தோப்பு பகுதியில் சின்ன கேசவலு என்ற ரவுடி இருந்தார். இவரும், பாம் சரவணனின் சகோதரர் தென்னரசு ஆகிய இருவரும் வடசென்னையில் கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசம் செய்து வந்தனர். இந்நிலையில் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அம்பேத் என்ற நபர் தென்னரசுவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். அவர் குற்ற வழக்கில் சிறைக்குச் சென்றபோது தென்னரசுவின் எதிரியான எண்ணூர் தனசேகரிடம் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த தகவலை அறிந்து தென்னரசு மற்றும் அவரது தம்பியான பாம் சரவணன் ஆகிய இருவரும் அம்பேத்கரை அடித்துள்ளனர். இதனால் அம்பேத், பாம் சரவணனுக்கு எதிராக மாறினார். அவர் எண்ணூர் தனசேகரனுடன் சேர்ந்து பாம் சரவணன் மற்றும் தென்னரசுவை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

இதில் 2015ம் ஆண்டு பாம் சரவணனின் அண்ணன் தென்னரசுவை கொலை செய்தார். தன் அண்ணன் கொலைக்கு பழி வாங்க பாம் சரவணன் 2015ம் ஆண்டு செவ்வாப்பேட்டையில் ஜெயசீலனை கொலை செய்தார். இந்த கொலைக்கு பழிவாங்க பாம் சரவணன், நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன் எண்ணூர் தனசேகர், அம்பேத் உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்து பாம் சரவணனை கொலை செய்ய முயன்றன. ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில் தனக்கு பக்க பலமாக இருந்த தென்னரசு மற்றும் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை கொலை செய்த நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன் மற்றும் அம்பேத் ஆகியோரை கொலை செய்ய தொடர்ந்து வெளியில் இருந்து பாம் சரவணன் சதி திட்டம் தீட்டி வந்தார். இந்த தகவலை அறிந்த போலீசார் தற்போது அவரை சுட்டுப் பிடித்துள்ளனர்.

டெல்லியில் 6 மாதம் பதுங்கல்
போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட பாம் சரவணன் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பின்பு நாகேந்திரன் கும்பலால் தனக்கும் ஆபத்து ஏற்படும் அல்லது போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று எண்ணி வழக்கமாக அவர் தங்கும் ஆந்திராவிற்கு செல்லாமல் டெல்லியில் சென்று கடந்த 6 மாதமாக தங்கி வந்துள்ளார். அங்கிருந்து வட மாநிலங்கள் சிலவற்றிற்கும் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து ஆந்திராவிற்கு வந்துள்ளார். அவர் ஆந்திராவிற்கு வந்த தகவல் நுண்ணறிவு பிரிவு போலீசார் மூலம் தெரியவந்தது. ஆந்திராவிற்கு வந்து அதன் பின்பு அவர் வியாசர்பாடிக்கு வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிர வைக்கும் 6 கொலைகள்
தற்போது சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ள பாம் சரவணன் பல கொடூரமான கொலைகளை செய்துள்ளார். 1998ம் ஆண்டு சின்ன குட்டி என்ற நபரை கொலை செய்த வழக்கு, 2001ம் ஆண்டு ஆரிஷ் என்பவரை கொலை செய்த வழக்கு, 2002ம் ஆண்டு கதிரவன் என்பவரை கொலை செய்த வழக்கு, 2011ம் ஆண்டு வெள்ளை உமா என்கின்ற உமாசங்கர் என்பவரை கொலை செய்த வழக்கு, 2001ம் ஆண்டு மற்றொரு கதிரவனை கொலை செய்த வழக்கு, 2016 ஆம் ஆண்டு ஜெயசீலன் என்பவரை கொலை செய்த வழக்கு உட்பட 6 வழக்குகள் இவர் மீது உள்ளன.

6வது துப்பாக்கி சூடு
சென்னை மாநகர கமிஷனராக அருண் பொறுப்பேற்ற பிறகு ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தப்பட்ட திருவேங்கடம் என்ற ரவுடி, தொடர்ந்து பிரபல ரவுடி கல்வெட்டு ரவி, சீசிங் ராஜா ஆகியோர் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதையடுத்து டி.பி. சத்திரம் பகுதியில் ரோகித் என்பவரை பெண் உதவி ஆய்வாளர் என்கவுன்டர் செய்தார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஓட்டேரி பகுதியில் அறிவழகன் என்ற நபரை ஓட்டேரி போலீசார் சுட்டுப் பிடித்தனர். தற்போது 6வது சம்பவமாக பாம் சரவணனை போலீசார் சுட்டு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோயம்பேடு கொலையை தூசி தட்டும் போலீசார்
கோயம்பேடு பகுதியில் கடந்த 18-10-2018 அன்று ஏ கேட்டகிரி சரித்திர பதிவேடு ரவுடி பன்னீர்செல்வம் என்பவர் காணாமல் போனார். தற்போது சுட்டு பிடிக்கப்பட்டுள்ள பாம் சரவணன் தனது அண்ணன் கொலைக்கு பழிவாங்க பன்னீர் செல்வத்தை அவர் காணாமல் போன நாள் அன்று கடத்தி சென்றுள்ளார். அவருடன் வில்லிவாக்கம் பகுதியில் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ராஜேஷ், அகரம் அப்பு, வீரா உள்ளிட்டோரும் உடன் இருந்துள்ளனர். தற்போது இவர்கள் 3 பேரும் உயிரோடு இல்லை. கடத்திச் சென்ற பன்னீர்செல்வத்தை ஆந்திர எல்லையில் வைத்து பாம் சரவணன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் எரித்துக் கொலை செய்துள்ளனர். தற்போது பாம் சரவணன் போலீசாரிடம் திடுக்கிடும் இந்த தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார். எனவே கோயம்பேடு இன்ஸ்பெக்டர் அருள்மணிமாறன் தலைமையிலான போலீசார் நேற்று ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்று வாக்குமூலம் பெற முயற்சி செய்தனர். ஆனால் தீவிர சிகிச்சை பிரிவில் பாம் சரவணன் இருப்பதால் அவர்களால் வாக்குமூலத்தை பெற முடியவில்லை. தொடர்ந்து பாம் சரவணனை போலீஸ் காவலில் எடுத்து பன்னீர்செல்வம் கொலை வழக்கு சம்பந்தமாக விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். சரித்திர பதிவேடு ரவுடி காணாமல் போய் 7 ஆண்டுகள் கழித்து தற்போது அவர் கொலை செய்யப்பட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாம் சரவணனின் மனைவி பாஜ மாநில நிர்வாகி
ரவுடி பாம் சரவணனின் மனைவி மகாலட்சுமி, பாஜ சிந்தனையாளர் பிரிவில் மாநில நிர்வாகியாக உள்ளார். மகாலட்சுமியின் பிறந்த நாள் விழா சில நாட்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. அதில் பல பாஜ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post பாம் சரவணனை சுட்டுப் பிடித்த போலீசார் நாட்டு வெடிகுண்டு வெடிக்காததால் உயிர் தப்பிய போலீஸ்: 7 ஆண்டுக்கு முன் மாயமான ரவுடியை பாம் சரவணன் எரித்துக் கொன்றது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Pam Saravan ,Bam Saravan ,Rawudi ,Ambalam ,Chennai ,Rawudi Bam Saravan ,Armstrong ,Coimbed Rawudi ,
× RELATED வியாசர்பாடியில் பிரபல ரவுடி கைது..!!