×

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16000 போலீசார் சிறப்பு பாதுகாப்பு: சென்னை காவல்துறை தகவல்

சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் சென்னை காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கை: சென்னை காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் 16,000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினர் மூலம் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை காவல் துறை விரிவான தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் விவரம்:
* மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள் அமைக்கப்பட்டும், 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டும், அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். இவை தவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 200க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவர்.
* உழைப்பாளர் சிலை முதல் கலங்கரைவிளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்படுவர். மேலும், 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
* காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
* பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 1 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை, 3 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, காவல் ஆளிநர்களால் பைனாகுலர் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், ஒலிபெருக்கி மூலம் அறிவுரைகள் வழங்கப்படும்.
* கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட கைகளில் கட்டப்படும் பேண்ட், அடையாள அட்டைகள் காவல் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகளில் வைக்கப்பட்டுள்ளது.
* கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை. துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜிஎஸ்டி ரோடு மற்றும் இதர சாலைகளில் இருசக்கர வாகன பந்தயம் (பைக் ரேஸ்) தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16000 போலீசார் சிறப்பு பாதுகாப்பு: சென்னை காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kanum Pongal ,Marina Beach ,Police Commissioner ,Arun ,Dinakaran ,
× RELATED கலைஞர் நினைவிடத்தில் காலையில் வைத்த...