சென்னை: ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உத்தரபிரதேச வாலிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐஐடி-யில் படித்து வரும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையை யொட்டி அவர் கோட்டூர்புரத்தில் உள்ள பேக்கரியுடன் இணைந்த டீ கடைக்கு உடன் படித்து வரும் நண்பருடன் டீ குடிப்பதற்காக சென்றார். அப்போது அங்கு வேலை பார்க்கும் வாலிபர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அவரது சீண்டல் எல்லை மீறி போனதால் அந்த மாணவி கோட்டூர்புரம் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் பேக்கரி கடைக்கு விரைந்து வந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரது பெயர் ஸ்ரீராம் (29). உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். மாணவியின் புகாரின் பேரில் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐஐடி விளக்கம் அளித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு: நேற்று (14ம் தேதி) மாலை 5.30 மணியளவில், ஒரு டீக்கடையில், சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த மாணவியுடன் வந்த மாணவர்களும், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களும், குற்றவாளியை பிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரை பிடித்து நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் வளாகத்திற்கு வெளியே ஒரு பேக்கரியில் பணிபுரிகிறார். அவருக்கு சென்னை ஐஐடி-யுடன் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை: உத்தரபிரதேச வாலிபர் கைது appeared first on Dinakaran.