×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : எட்டு சுற்றுகள் முடிவில் 4 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வு!

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் எட்டு சுற்றுகள் முடிவில் 4 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர். உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று காலை 6.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு நிகழ்வை தமிழ்நாடு அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் களம் காண்கின்றனர். வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் பிடிக்கின்றனர். வீரர்களுக்கு இரு சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அறிவிக்கப்படுகின்றன. ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் காளைகளை அடக்க களமிறக்கப்படுகின்றனர்.

100 காளைகள் என ஒவ்வொரு மணி நேரத்திற்கும் காளைகள் களத்தில் களமாடுகின்றன. ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் இறுதி சுற்றில் பங்கேற்க தயாராகி வருகின்றனர். போட்டியானது மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.

போட்டியின் முடிவில் சிறந்த மாடுபிடி வீரருக்கு 8 லட்சம் மதிப்பிலான நிசான் கார் பரிசும், சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு 11 லட்சம் மதிப்பிலான டிராக்டர் வாகனமும் முதல் பரிசாக வழங்கப்படவுள்ளது. தற்போதுவரை எட்டு சுற்றுகள் நிறைவடைந்துள்ளன.

ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 36 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 16 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 15 பேர், 5 பார்வையாளர்கள் என மொத்தம் 36 பேர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து 9-வது சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

The post அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : எட்டு சுற்றுகள் முடிவில் 4 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வு! appeared first on Dinakaran.

Tags : AVANIAPURAM JALLIKATU ,Madurai ,Avanyapuram Jallikatu match ,Madurai Avaniapuram Jallikatu Competition ,Pongal Festival ,Jallikatu ,Dinakaran ,
× RELATED அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 10-வது சுற்று நிறைவு!..