×

மார்கழி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்

Sathuragiriவத்திராயிருப்பு : மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் பிரதோஷம் மற்றும் மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 11ம் தேதி முதல் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.

நேற்று மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் குவிந்தனர்.காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதித்தனர். பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார்.

சதுரகிரி சந்தன மகாலிங்கம் கோயிலில் சித்தர்கள் ஆலயம் உள்ளது. இங்குள்ள 18 சித்தர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் திருவாதிரை திருநாள் மற்றும் சித்தர்கள் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவாதிரை திருநாள் மற்றும் சித்தர் விழாவை முன்னிட்டு நேற்று காலை 8.30 மணிக்கு அகஸ்தியர், போகர் உள்ளிட்ட 18 சித்தர்களுக்கு 21 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் 18 சித்தர்களும் பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.

பவுர்ணமி மற்றும் திருவாதிரை திருநாள், சித்தர்கள் விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கடைசி நாளான இன்றும் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மார்கழி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Chathuragiri ,Margazhi Pournami ,Vathirairuppu ,Western Ghats ,Saptur, Madurai district ,Chathuragiri Sundaramakalingam hill ,
× RELATED சதுரகிரியில் பௌர்ணமி வழிபாடு..!!