கே.வி.குப்பம்,ஜன.14: கே.வி.குப்பத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆட்டுச்சந்தையில் வியாபாரம் களைகட்டியது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை யன்று ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். இந்நிலையில் திங்கட்கிழமயான நேற்று காலை வழக்கம்போல் கடும் பனிப்பொழிவிலும் சந்தை கூடியது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆடுகள் லோடு வேன் மூலம் அழைத்து வரப்பட்டன. இதில் ஏராளமான வியாபாரிகள் போட்டிப்போட்டுக்கொண்டு ஆடுகளை கொண்டு வந்து வியாபாரம் செய்தனர்.
ஆடுகளின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது. வெள்ளாடுகள், முத்து கிடாய் ரகங்கள், நாட்டு ரக கிடாய்கள், செம்மறி ஆடுகள் என பல்வேறு ரக ஆடுகள் அதிகம் கொண்டுவரப்பட்டிருந்தது. தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று நடைபெற்ற சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. ஒரு ஆடு ₹20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. வழக்கத்தை விட விலை கூடுதலாகவும் இரட்டிப்பாகவும் சில ஆடுகள் விற்கப்பட்டது. தொடர்ந்து ஆட்டின் விலை கூடுதலாக விற்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திரட்சியான உடல் அமைப்பு கொண்ட ஆடுகள் விற்றன. விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால், சிலர் எதிர்பார்த்த தொகைக்கு ஆடுகள் கிடைக்காமல் போனதால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
The post ஆட்டுச் சந்தையில் வியாபாரம் களைகட்டியது கே.வி.குப்பத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி appeared first on Dinakaran.