×

‘ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய’ பக்தி முழக்கம் விண்ணதிர சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இந்த ேகாயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்துக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினசரி காலை, மாலை பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து 11ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடந்தது. நேற்றுமுன்தினம் காலையில் தேர் திருவிழா நடந்தது. இந்நிலையில் சிகர நிகிழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 3.30 மணி முதல் 7 மணி வரை ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜ மூர்த்திக்கும், சிவகாமசுந்தரிக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விபூதி, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், பழச்சாறுகள், தேன், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவை குடம் குடமாக, சுவாமிக்கு ஊற்றி அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சொர்ணா அபிஷேகம், மகா தீபாராதனை, ராஜ சபையில் திருவாபரண அலங்காரம், சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன.

பின்னர் சித்சபையில் உத்சவ ஆச்சாரியாரால் ரகசிய பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. பிற்பகல் நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரியும் ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து, சிவ வாத்தியங்கள் முழங்க, நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆருத்ரா தரிசன கோலத்தில் காட்சியளித்தனர். பின்னர் ஞானகாச சித்சபா பிரவேசம் மாலை 4.10 மணியளவில் நடைபெற்றது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள் ‘ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய’ என விண்ணதிர பக்தி முழக்கமிட்டபடி சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை காண்பதற்காக உள்ளூர், வெளியூர், வெளிமாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடு உள்ளிட்ட பகுதியிலிருந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் திரளாக வந்திருந்தனர். வரும் 14ம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், 15ம் தேதி இரவு 30 ஆண்டுகளுக்கு பிறகு ஞானபிரகாசம் குளத்தில் தெப்பல் உற்சவமும் நடைபெறுகிறது.

 

The post ‘ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய’ பக்தி முழக்கம் விண்ணதிர சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Om ,... Om ,Aruthra Darshan festival ,Nataraja temple ,Chidambaram ,Chidambaram, Cuddalore district ,Ani ,
× RELATED ஹரி ஓம்சித்தர் குருபூஜை விழா