×

விஜய் ஹசாரே தொடரில் கருண் நாயர் 664 நாட் அவுட்! இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு

புதுடெல்லி: கடந்த 2017ல் சென்னையில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 303 ரன் குவித்து ரசிகர்களை வியக்க வைத்தவர் கருண் நாயர். இருப்பினும் புரியாத காரணங்களுக்காக அவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற முடியாமல் போனது. 7 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது நடந்து வரும் விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் போட்டித் தொடரில் விதர்பா அணிக்காக ஆடி வரும் கருண் நாயர், அஜித் அகார்கர் தலைமையிலான தேசிய தேர்வுக் குழுவை, தன் அதிரடி ஆட்டத்தால் திரும்பப் பார்க்க வைத்துள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பைக்காக, விதர்பா அணியின் கேப்டனாக பங்காற்றி வரும் கருண் நாயர் ரன் மிஷினாக மாறி சதங்களாக அடித்து வருகிறார். கடந்த 6 போட்டிகளில், அவுட் ஆகாமல் முறையே 112, 44, 163, 111, 112, 122 ரன்களை குவித்து ஒட்டு மொத்தமாக 664 ரன்களை அள்ளியுள்ளார். ஏ பிரிவில் நடத்தப்படும் போட்டித் தொடரில் 5 சதங்கள் விளாசிய வீரராக உருவெடுத்துள்ளார் கருண் நாயர். இதற்கு முன் தமிழ்நாட்டு வீரர் நாரயண் ஜெகதீசன் ஒரு தொடரில் 5 சதங்களை அடித்துள்ளார். இதுவரை ஏ பிரிவு கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 3 வீரர்கள் மட்டுமே 4 சதங்களை விளாசியுள்ளனர். அவர்களில் கருண் நாயரும் ஒருவர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி ஆகியோர் சமீபத்தில் முடிந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் மிக மோசமாக ஆடி ரசிகர்களை நோகடித்தனர். இதனால், அவர்களுக்கு மாற்று வீரரை தேடும் நிலையில் இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு உள்ளது. இந்த சூழ்நிலையில் அவர்களது தேர்வுக்கு பொருத்தமான வீரராக கருண் நாயர் உருவெடுத்துள்ளார். அவரது சமீபத்திய சாதனைகளை கருத்தில் கொண்டு இந்திய அணியில் சேர்ப்பார்கள் என கிரிக்கெட் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post விஜய் ஹசாரே தொடரில் கருண் நாயர் 664 நாட் அவுட்! இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Karun Nair ,Vijay Hazare ,New Delhi ,England ,Chennai ,Indian ,Dinakaran ,
× RELATED ரஞ்சி கோப்பை காலிறுதி தமிழகத்துக்கு...