×

இயற்கையோடு கால்நடைகளை வழிபடும் திருநாள்: தமிழ்நிலத்தின் தனித்துவம் சொல்லும் தைப்பொங்கல்

மனித குலத்திற்கு உணவளித்து உயிர் வளர்க்கும் ஒப்பற்ற பணியை செய்பவர்கள் உழவர் பெருமக்கள். அவர்கள் தங்களது உழைப்பிற்கு உதவி இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் மகிழ்வோடு நன்றி தெரிவிக்கும் நாளே ‘தை பொங்கல் திருநாள்.’ ஆடிமாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன்அடையும் பருவமே தைமாதம். இந்த மாதத்தின் முதல் நாளில் விவசாயத்திற்கு உதவி செய்த சூரிய பகவானுக்கு வாசலில் கரும்பு, மஞ்சள், மங்கலப்பொருட்கள் படையலிட்டு, மண்பானையில் பொங்கலிட்டு நன்றி செலுத்துகின்றனர்.

மழையின் உதவியால் ஆடி முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை, மார்கழியில் வீட்டுக்கு கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத்தொடங்கும் நாளாகவும் இது உள்ளது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள், சில மாதங்களுக்கு முன்பே விரதமிருப்பர். தை முதல்நாளில் விரதம் முடித்து பொங்கலிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்துவர்.அப்போது நல்லவிளைச்சல் கொடுத்ததற்காக பூமி, சூரியன், கால்நடைகளை வழிபட்டு நன்றி தெரிவிக்கும் வகையில் வீட்டு முற்றத்தில் சக்கரை பொங்கலிடுவர்.

இதற்கான குறிப்புகள் பல நூல்களில் இடம் பெற்றுள்ளது. இதுவே காலத்தின் சுழற்சியால் பொங்கல் விழாவாக மாறி நிற்கிறது என்கின்றனர் வரலாற்று முன்னோடிகள்.அதே நேரத்தில் வரலாறும், அறிவியலும் சார்ந்த கொண்டாட்டமாகவும் இது உள்ளது என்கின்றனர் அறிஞர்கள். சூரியன் தனது வெப்பசேவையின் உச்சத்தை பெறும் முதல் ஆறு மாதங்கள் ‘உத்தராயணம்’ என்றும், சாந்தத்தை பெறும் அடுத்த ஆறு மாதங்கள் ‘தட்சிணாயணம்’ என்றும் அழைக்கப்படுகிறது. உத்தராயணத்தில் சூரியனின் பார்வை உக்கிரம் வடக்கு நோக்கியும், தட்சிணாயணத்தில் தெற்கு நோக்கியும் இருக்கும் என்று கோளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

அத்தகைய உத்தராயணம் தொடங்கும் நாளும், தட்சிணாயணம் முடியும் நாளும் பொங்கல் பண்டிகையாகும். ஆறு மாதங்களாய் நிலவி வந்த நீண்ட இரவுகளுக்கு பிறகு வரும் கடவுள்களின் தினமே தை முதல்நாள் என்றும் கூறப்படுகிறது.இந்த நாளில் நமக்கு உணவளிக்கும் உழவர்களுக்கும் அதற்கு துணையாக நிற்கும் சூரியனுக்கும் நாம் நன்றி செலுத்தும் நாளே ‘தை திருநாள்,’ என்பது அவர்களின் கூற்று. இதேபோல் மார்கழி மாதத்தின் கடைசி நாளில் அதாவது பொங்கலுக்கு முதல்நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் போகி கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கம்.

இந்த போகிப்பண்டிகையானது புராணங்களில், இந்திரனுக்காக ஆயர்கள் கொண்டாடும் விழா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அன்று வீட்டின் கூரையில் பூலாப்பூ கட்டுக்களை சொருகி வைப்பதை இன்றுவரை மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். பொங்கல் கொண்டாட்டத்தின் மற்றொரு நிகழ்வு மாட்டுப்பொங்கல். உழவர்க்கு துணை நிற்கும் மாடுகளை அலங்கரித்து, திருநீறு பூசி, கொம்புகளுக்கு வண்ணமிட்டு வழிபடுவது இந்த நாளின் சிறப்பு. மாடுகளின் இருப்பிடமான பட்டியிலேயே அவற்றுக்கு படையலிட்டு வழிபடுவதால் பட்டிப்பொங்கல் என்றும் இதனை கூறுவார்கள். பொங்கல் விழாவின் நிறைவு நாளில் வருவது காணும் பொங்கல்.

* பொங்கலிட உகந்த நேரம்
போகியில் பழையன கழித்து, தை முதல் நாளில் வாழ்வு வளம்பெற மகிழ்வுடன் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த வகையில் நடப்பாண்டு (2025) பொங்கலிட்டு வழிபட காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நல்லநேரமாக கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காலை 10.30மணி முதல் 11.30மணிவரையும் சிறந்த நேரமாக பஞ்சாங்கத்தின் மூலம் கணிக்கப்பட்டுள்ளது.

* கொண்டாட்டத்தில் களைகட்டும் சரகம்
பொங்கல் திருநாளையொட்டி கிராமங்கள் சூழ்ந்த சேலம் சரகத்தில் கொண்டாட்டங்கள் களை கட்டும். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி என்று 4மாவட்டங்களிலும் மண்மணக்கும் விழாக்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பரிக்கும். சேலம் மாவட்டத்தில் கூலமேடு, செந்தாரப்பட்டி, வீரகனூர் போன்ற இடங்களிலும் நாமக்கல் மாவட்டத்தில் அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி பகுதிகளிலும் பாரம்பரிய காளைகள் துள்ளிக்குதிக்கும் ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக நடக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எருதாட்டங்களும், சேவல்சண்டைகளும் பொங்கல் விழாவை பொலிவு பெறச்செய்கிறது. தொழில் வளர்ச்சியிலும், நவீன சிந்தனைகளிலும் உச்சம் தொட்டாலும் வாழையடி வாழையாக தமிழர்திருநாள் கொண்டாட்டங்களை தொடர்கின்றனர் இங்குள்ள மக்கள்.

The post இயற்கையோடு கால்நடைகளை வழிபடும் திருநாள்: தமிழ்நிலத்தின் தனித்துவம் சொல்லும் தைப்பொங்கல் appeared first on Dinakaran.

Tags : Thai Pongal ,Tamil Nadu ,Aadi… ,
× RELATED தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்