×

பொங்கல் எதற்காக?

இந்தியாவில் ஒவ்வொரு பண்டிகையும் உற்சாகமாகவும் ஆனந்தமாகவும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சார தொடர்புகளின் அடையாளமாக கருதப்படுகிறது தைப் பொங்கல். ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில்தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. அறுவடையால் மகிழ்ச்சி மிகுந்த மக்கள் தங்கள் கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இம்மாதத்தில் பல்வேறு விழாக்களைக் கொண்டாடுகின்றனர்.

தைப்பொங்கல் என்பது நாம் உண்ணும் உணவை விளைவிக்க உதவி செய்த அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் விதமான பண்டிகையாகும். குறிப்பாக விவசாயத்திற்கு எதெல்லாம் உதவியாக இருந்ததோ அவை எல்லாவற்றிற்கும் நன்றி கூறி வணங்குவது இதன் சிறப்பம்சமாகும். இது அறுவடை திருவிழா எனவும் அழைக்கப்படுகிறது. இது மகர சங்கராந்தியுடன் தொடர்புடையது மற்றும் சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது.

மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகிப் பொங்கலாகவும், தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனவரி 14ம் தேதி அன்று தொடங்கும் பொங்கல் பண்டிகை ஜனவரி 17 அன்று நிறைவடைகிறது. முதலாவதாக வருவது போகிப் பண்டிகை. இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது. அன்றைய தினம், வீட்டில் தேங்கி கிடக்கும் குப்பைகள், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

இரண்டாம் நாள் தைப்பொங்கல். தை மாதத்தின் முதல் நாள் இந்த பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அறுவடை செய்த நெல்லை கொண்டு, புதுப்பானை, புதுஅடுப்பில் சூரியனை பார்த்து பொங்கல் வைப்பார்கள். இந்த பானையில் மஞ்சள், இஞ்சி கொத்துக்கள் கட்டப்பட்டிருக்கும். அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள், கிழங்குகளை கொண்டு கூட்டு சமைக்கப்பட்டு அதுவும் சூரியனுக்கு படைக்கப்படும். பாரம்பரிய உணவான பொங்கலுடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல். பண்டைய காலத்தில் வேளாண்மைக்கு மிக அவசியமானது மாடுகள்தான்.

இந்தநாள் மாடுகளுக்கு சிறப்பு செய்து பொங்கல் வைத்து வழிபடும் நாளாக இந்நாள் உள்ளது. மாட்டுப் பொங்கல் அன்று வீட்டில் உள்ள கால்நடைகளைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு வண்ணம் பூசி, கூரான கொம்பில் சலங்கை கட்டிவிடுவார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். நான்காம் நாள் காணும் பொங்கல். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். இந்த நாளில்தான் கிராமங்களில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போன்ற வீர சாகசப் போட்டிகள் நடத்தப்படும்.

* மாட்டுப் பொங்கல்
ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு பயன்படும் எருதுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு பொங்கல் வைத்து படைத்து, அவற்றுக்கும் அளித்து, நாமும் உண்டு மகிழ்கிறோம். இதற்காகவே மாட்டுப் பொங்கல் என தனியாக ஒரு நாளில் கொண்டாடி மகிழ்கிறோம். மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, சிங்காரித்து அவற்றின் கழுத்தில், உரிமையாளரின் வசதிக்கேற்ப கரும்பு முதல் தங்கக்காசு வரை கட்டி சாலைகளில் ஓட விடுவதும் மாட்டுப் பொங்கலின் சிறப்பாக அமைகிறது. துள்ளித்திரிந்து ஓடிவரும் மாடுகளைப் பிடிக்கும் கட்டிளங்காளைகளாக விடலைகளும், விடலைகளை வேடிக்கை பார்க்கும் இளம் பெண்களும் மகிழ்ச்சி பூரிப்பில் திளைப்பதும் தைப் பொங்கல் முடிந்த மறுநாளில்தான்.

* பொங்கலுக்கு மற்றொரு பெயர்
கடந்த காலங்களில் பொங்கல் என்ற வார்த்தை நேரடியாக பயன்படுத்தப்படவில்லை என்ற போதிலும் அதற்கான மாற்று வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அக்காலத்தில் இது ‘அறுவடை திருவிழா’ என்று அழைக்கப்பட்டது. அதே நேரத்தில் தற்போது இந்த விழாவை ‘மகர சங்கராந்தி’ என்று பிற மொழி பேசுபவர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏனென்றால், அக்கால அரசர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளின் எல்லை பரந்து விரிந்திருந்தது ஒரு காரணம். எனவே அந்தந்த பகுதி மக்களின் சொல் வழக்கிற்கு ஏற்ப பேசிய மொழி அடிப்படையில் பொங்கல் பண்டிகையை குறிக்க வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

* பொங்கலின் சிறப்புகள்
குயவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கக்கூடிய வகையில், வீடுகளில் உள்ள பழைய மட்பாண்டங்களை (பானைகள், குடிநீருக்காக பயன்படுத்தும் குவளைகள்) பொங்கலுக்கு முன்தினம் போட்டுடைத்து விட்டு, தைத்திங்கள் முதல் நாளில் இருந்து புதிய பானைகளில் சமைக்கும் வழக்கமும் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளது. இதனால், மட்பாண்டங்களைச் செய்து பிழைப்பு நடத்துவோருக்கு வருவாய் கிடைப்பதுடன், வீடுகளிலும் புதிய பானைகளுடன் கூடிய நிலை உருவாகி, மனதிற்குப் புத்துணர்ச்சியைத் தரும். முந்தைய ஆண்டில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் வரும் புத்தாண்டில் நிகழாமல், பொங்கிவரும் பால் போன்று, சர்க்கரைப் பொங்கலின் இனிப்பான சுவையைப் போன்று இருக்கட்டும் என்பதே பாரம்பரிய தத்துவமாகக் கருதப்படுகிறது.

தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத அந்நாட்களில், பரம்பரை பரம்பரையாக ஒரு சில குடும்பங்களுக்கே தெரிந்த பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறையினருக்கு பயிற்றுவித்து, வழிவழியாக அந்தக் கலைகள் சென்று சேரும் விழாவாக பொங்கல் விழா இருந்து வந்துள்ளது. தவில், சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதசுரம் இன்னிசை, வாய்ப்பாட்டு, வீணை உள்ளிட்ட தந்தி இசைக்கருவிகளை இசைத்தல், சிலேடையுடன் கூடிய பேச்சுக்கலை, நகைச்சுவை நிகழ்ச்சி என ஒவ்வொரு குடும்பத்திற்கும், அவர்கள் சார்ந்துள்ள சமூகத்திற்கும் உரிய பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்காகவும் இப்பண்டிகையை காலங்காலமாக நம் முன்னோர் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

The post பொங்கல் எதற்காக? appeared first on Dinakaran.

Tags : India ,Tamils ,Aadi ,Thai ,Pongal ,
× RELATED அயலகத் தமிழர், மறுவாழ்வுத் துறை துணை...