கொடைக்கானல்… குளிர் சீசன் என்று மட்டுமல்ல… எந்த மாதம் ஆனாலும், ஒரு நீண்ட விடுமுறை வந்தால், அனைவரின் முதல் சாய்ஸ் கொடைக்கானலாகத்தான் இருக்கும். நகரின் மையத்தில் நட்சத்திர ஏரி, பிரமாண்டமும், பூக்களின் வசீகரமும் கவர்ந்திழுக்கும் பிரையண்ட் பூங்கா, பள்ளத்தாக்கில் வெண்ணிலா ஐஸ்கிரீமை நிரப்பியது போல, கோக்கர்ஸ் வாக், மேகங்கள் கொஞ்சி விளையாடும் தூண் பாறை, தனித்தீவாய் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் பேரிஜம் ஏரி என கொடைக்கானலில் ரசிக்க, கண்களுக்கு விருந்தளிக்க எண்ணற்ற சுற்றுலாத்தலங்கள் உள்ளன. வழியெங்கும் டிராபிக், நிரம்பி வழியும் லாட்ஜ்கள், காட்டேஜ்கள்… எங்கு பார்த்தாலும் சுற்றுலாப்பயணிகள் என கொடைக்கானல் ரொம்பவே பிஸியாக இருக்கும். சமீப காலங்களில் சிலர் கொடைக்கானலில் இயற்கையாக விளையும் பொருட்களை போதைக்காக பயன்படுத்தி, இளைஞர்களை தவறான வழிகளில் செல்ல தூண்டுகின்றனர். அந்த வகையில் போதைக்காளானை தேடி வந்த கூட்டம், தற்போது குதிரை தாலியை நோக்கி குதிரை வேகத்தில் பயணிக்கிறது. அதைப்பற்றி விரிவாக பார்ப்போம். கொடைக்கானலுக்கு வரும் இளைஞர்கள் சமீபகால நோக்கம் எல்லாம் சுற்றுலா இடங்களை கண்டு களிப்பது அல்ல.
அதைத்தாண்டி தலை சுற்றி கிறங்க வைக்கும் போதை அயிட்டங்களை தேடித்தான் வருகின்றனர் என்பதுதான் கவலைக்குரிய விஷயம். குளுகுளு கிளைமேட்டில் கஞ்சா போதைக்காக இளைஞர்கள் படையெடுத்த காலம் மாறி, தற்போது கொடைக்கானலில் இயல்பாக புல்வெளிகளில் விளையக்கூடிய போதைக்காளான்களை உண்பதற்காகவே வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து இளைஞர்கள் கொடைக்கானலை நோக்கி அதிகம் வருகின்றனர். மேல்மலையில் ‘மேல்’ கூட்டம்: கொடைக்கானலில் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கூக்கால், கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் தங்கி இதுபோன்ற போதைக்காளான்களை ருசித்து வருகின்றனர். அங்கேயே மயங்க வைக்கும் போதையில் பல நாட்கள் தங்கி செல்கின்றனர். கொடைக்கானல் நகர் பகுதியை விட மலைப்பகுதிகளை நோக்கியே இதுபோன்ற இளைஞர் பட்டாளம் படையெடுத்து வருகிறது. சமீபகாலமாக போதைக்காளானையும் தாண்டி வேறு ஒரு போதை பொருள் மேல்மலை பகுதிகளில் கிடைப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் பெயர் குதிரை தாலி என்ற ஹார்ஸ் ரேடிஸ் கிழங்கு என்பதாகும். இதை நசுக்கி நுகர்ந்தால் போதை ஏறும் என்று இன்ஸ்டாகிராமில் பரப்பப்படுகிறது.
நசுக்கி முகர்ந்தால்… இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பரவ விட்டவர் கொடைக்கானல் மேல்மலை கிராமம் கவுஞ்சியை சேர்ந்த ராஜ். இவர் சமூக வலைத்தளங்கள் மூலம் சித்த வைத்தியம் செய்வதாக வீடியோக்கள் பல வெளியிட்டு இருந்தார். இதில் குறிப்பாக குதிரை தாலி என்ற ஒரு மூலிகை கிழங்கை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பாக பெங்களூருவில் இருந்து வாங்கி வந்து அதனை கவுஞ்சி கிராமத்தில் ஒரு இடத்தில் நட்டு வைத்து அதன் மூலம் வளர்ந்த செடிகளை வைத்து தற்போது சிகிச்சை அளித்து வருவதாக கூறுகிறார். குறிப்பாக இந்த குதிரை தாலி கிழங்குகளை சிறிதளவு எடுத்துக் கொண்டு அதனை ஒரு துணியில் சுற்றி அதை கற்களால் நசுக்கி அதன் கார தன்மையை மூக்கில் முகர்ந்து பார்க்க சொல்லுகிறார். அதன்பின்னர் இதனை சுவாசித்தவர்கள் சில நொடிகள் தன்னை மறந்து ஒருவித ரியாக்சன் செய்வதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்தான வீடியோவை இங்கு வந்து செல்லக்கூடியவர்கள் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதனை காணும் பிற இளைஞர் கூட்டம் நூற்றுக்கணக்கில் இவரை தேடி இந்த கிராமத்திற்கு வருகின்றனர். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகளவில் இளைஞர்கள் மற்றும் வெளிநாட்டவரும் இவரை தேடி வருகின்றனர். மேலும் இவர் கொடுக்க கூடிய இந்த சிகிச்சையானது எந்த வகையில் இருக்கக்கூடியது என்று அந்த பகுதி மக்களுக்கே தெரியவில்லை.
அட்வான்ஸ் புக்கிங்… இதுகுறித்து ராஜுவிடம் கேட்டபோது, ‘‘நான் கேரளாவில் இருந்து இந்த வைத்தியத்தை கற்று கொண்டேன். தற்போது இருக்கக்கூடிய இளைஞர்கள் மது, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை வஸ்துகளை அதிகம் பயன்படுத்தி தங்களது உடலை கெடுத்து வைத்துள்ளனர். இதனை சரிசெய்வதற்காக குதிரை தாலி கிழங்கு மூலம் சிகிச்சை அளிப்பதால் அவர்களுக்கு முழு பலன் கிடைக்கும். அனைத்தையும் மறந்து சில நொடிகள் தலையில் இருக்கக்கூடிய பாரங்கள் குறையும் அளவிற்கு இந்த மருந்து இருக்கும். காட்டு பகுதியில் கிடைக்க கூடிய மூலிகை பொருட்களை கொண்டு மூலிகை காபி தயாரிக்கிறேன். ஒரு கப் ரூ.400க்கு கொடுக்கிறேன். அதனை உட்கொண்ட சிறிது நேரத்தில் அவர்கள் கால் பாதத்தின் வழியாக ஒரு டம்ளர் அளவிற்கு கெட்ட நீர் வெளியேற்றம் ஆகிறது. எனது சிகிச்சைக்கு பல்வேறு பகுதியில் இருந்தும் தொடர்ந்து தொலைபேசியில் அழைத்து முன்பதிவு செய்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு அன்று கூட ரூ.500 வீதம் 2,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர். இந்த குதிரை தாலி சிகிச்சைக்கு குறிப்பிட்ட தொகை எதுவும் கேட்பதில்லை. அவரவர் விரும்பி தரும் தொகையை வாங்கிக் கொள்கிறேன் ’’ என மிரள வைக்கிறார். இவர் அளிக்கக்கூடிய இந்த சிகிச்சைக்கு கேரள மாநில முக்கிய அரசியல் தலைவரே அழைப்பதாகவும், கேரளாவில் உள்ள அதிகாரிகள் ஆதரவு அளிப்பதாகவும் இங்கிருந்து மதுரை மார்க்கமாக வாகனத்தில் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளாவுக்கு அழைத்து செல்கிறோம். வாருங்கள் என அழைப்பதாகவும் அள்ளி விடுகிறார்.
The post இளைஞர்களை தூண்டும் ‘குதிரை தாலி’ ‘தலைசுற்றல்’ நகரமாகும் இளவரசி பூமி appeared first on Dinakaran.