×

இங்கிலாந்து மகளிருடன் முதல் ஓடிஐ; ஆஸி அசத்தல் வெற்றி: ஆஸ்லே கார்ட்னர் ஆட்டநாயகி

சிட்னி: இங்கிலாந்து மகளிருக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து மகளிர் அணி, 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடி வருகிறது. சிட்னியில் நேற்று நடந்த முதல் போட்டியின்போது டாஸ் வென்ற ஆஸி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய துவக்க வீராங்கனைகள் டேம்மி பியுமோன்ட் 13, மய்யா பவுச்சிர் 9 ரன்களில் அவுட்டாகி மோசமான துவக்கத்தை தந்தனர். பின் வந்தோரில் கேப்டன் ஹெதர் நைட் 39, டேனி வையாட் ஹாட்ஜ் 31 ரன் எடுத்தனர். பிறர் சரியாக ஆடாததால், 43.1 ஓவரில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன் மட்டுமே எடுத்தது. ஆஸ்லே கார்ட்னர் 3, கிம் கார்த், அனபெல் சதர்லேண்ட், அலானா கிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸி துவக்க வீராங்கனை ஃபோப் லிச்பீல்ட் 4 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீராங்கனையான கேப்டன் அலிஸா ஹீலி அற்புதமாக ஆடி 70 ரன் குவித்தார். அதனால், 38.5 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன் குவித்து ஆஸி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்லே கார்ட்னர் 42, அலானா கிங் 11 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்தின் லாரென் பைலர், சோபி எக்லெஸ்டோன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த போட்டியில் 42 ரன் மற்றும் 3 விக்கெட் வீழ்த்திய ஆஸியின் ஆஸ்லே கார்ட்னர் ஆட்ட நாயகி. இந்த வெற்றியை அடுத்து, ஆஸி அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 2வது ஒரு நாள் போட்டி, நாளை மெல்போர்ன் நகரில் நடக்கிறது.

 

The post இங்கிலாந்து மகளிருடன் முதல் ஓடிஐ; ஆஸி அசத்தல் வெற்றி: ஆஸ்லே கார்ட்னர் ஆட்டநாயகி appeared first on Dinakaran.

Tags : England Women ,Ashley Gardner Striker ,Sydney ,Australia women's cricket team ,England ,England women's team ,Australia ,Audi ,UK Women ,Ashley Gardner ,Dinakaran ,
× RELATED இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா மகளிர்