தேனி: தேனி புறநகர் பகுதியான ரத்தினம் நகர் அருகே திருநகரில் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு போலீஸ் சிறப்பு பிரிவு அலுவலகம் உள்ளது. நேற்று அதிகாலை மர்ம நபர்கள் இந்த அலுவலகத்திற்குள் புகுந்துள்ளனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அல்லிநகரம் போலீசார் அங்கு வந்தனர். அப்போது, அலுவலகத்தில் இருந்து 2 மர்ம நபர்கள் டூவீலரில் தப்பிக்க முயன்றனர்.
போலீஸ்காரர் முருகேசன் அவர்களை பிடிக்க முயன்போது, ஒரு வாலிபர் கல்லால் தாக்கியதில் அவர் காயமடைந்தார். மற்றொரு வாலிபரை விரட்டி சென்ற போலீஸ்காரர் ரமேஷ் திரும்பி வந்து, இரு போலீசாரும் சேர்ந்து தாக்கியவரை பிடித்தனர். விசாரணையில் அவர் தேனி மாவட்டம், பண்ணைப்புரம் நிதிஷ்குமார் (25), தப்பிச்சென்றவர் பண்ணைப்புரம் அருகே கோம்பை உதயகுமார் (24) என தெரிய வந்தது. இதை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் அலுவலகத்தில் கொள்ளையடித்த கஞ்சா ஆயில், கஞ்சா பொட்டலங்கள், வெள்ளை பவுடர், கைவிலங்கு, ஏர்கன் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தேனி எஸ்.பி சிவபிரசாத். அந்த அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கைதான நிதிஷ்குமார், ஏற்கனவே கஞ்சா வழக்கில் பிடிபட்டுள்ளார். அப்போது, இந்த அலுவலகத்திற்கு எப்படி, எந்த நேரத்தில் வரலாம் என நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. போலீஸ் அலுவலகத்திற்குள்ளேயே கொள்ளையர் கைவரிசை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post போலீஸ் ஆபீசில் துப்பாக்கி, போதைப்பொருள் திருட்டு: கல்லால் தாக்கியதில் போலீஸ்காரர் காயம், 2 வாலிபர்கள் கைது; திடுக் தகவல்கள் appeared first on Dinakaran.