வேலூர், ஜன.11: வேலூரில் நிலத்தில் முதலீடு செய்யலாம் எனக்கூறி ₹2.83 கோடி மோசடி செய்த நண்பர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக எஸ்பி அலுவலகத்தில் ஐடி ஊழியர் புகார் அளித்துள்ளார். வேலூரை சேர்ந்த 39 வயது ஐ.டி. ஊழியர். இவர் நேற்று வேலூர் எஸ்பி அலுவலகத்தில் ₹2.83 கோடி மோசடி செய்யப்பட்டதாக புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நான் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தேன். காட்பாடியை சேர்ந்த நண்பர்கள் 2 பேரும் உன் சேமிப்பை வங்கியிலேயே வைத்திருப்பதால் எந்த பலனுமில்லை. நாங்கள் நிலம் வாங்கி விற்கும் தரகு வேலையும் செய்கிறோம். உன் பணத்தை எங்களிடம் முதலீடு செய்தால், உன் பெயரில் அக்ரிமெண்ட் போட்டு நிலத்தை வாங்கலாம். நிலத்தை விற்று லாபம் பார்க்கலாம் என பலமுறை ஆசை வார்த்தைகளை கூறினர். நானும் அக்ரிமெண்ட் என் பெயரில்தான் இருக்கும் என்ற தைரியத்தில் பல்வேறு தவணையாக ₹2 கோடியே 83 லட்சத்து 40 ஆயிரம் கொடுத்தேன். ஆனால் பணத்தை பெற்ற அவர்கள் இதுவரை ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. மேலும் எனக்கு காட்டிய நிலமும் வேறு ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. எனவே பணத்தை வாங்கிக்கொண்டு என்னை ஏமாற்றியுள்ளனர். பணத்தை கேட்டால் என்னை கொன்று விடுவதாக மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ₹2.83 கோடி மோசடி செய்த நண்பர்கள் கொலை மிரட்டல் எஸ்பி ஆபீசில் ஐடி ஊழியர் புகார் நிலத்தில் முதலீடு செய்யலாம் எனக்கூறி appeared first on Dinakaran.