×

தந்தை பெரியார் குறித்து உண்மைக்கு முரணாக அவதூறு பேச்சு தமிழ்நாடு முழுவதும் சீமான் மீது 60 வழக்குகள் பதிவு: தொடர்ந்து புகார்கள் குவிந்து வருவதால் பரபரப்பு

சென்னை: தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக திமுக உள்ளிட்ட திராவிட அமைப்புகள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகாரின் படி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 60 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது புகார்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தந்தை பெரியார் பேசியதாக சில சொற்களை கூறினார். இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். பெண்களை இழிவாக பெரியார் பேசியதாக கூறியதற்கு சீமான் உரிய ஆதாரங்களை வெளியிட வேண்டும். இல்லை என்றால் நான் சீமான் வீட்டிற்கு நேரில் வந்து ஆதாரத்தை கேட்பேன் என்று கூறியிருந்தார். நேற்று முன்தினம் காலை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சீமானை கண்டித்து பெரியார் அமைப்புகள் புதுச்சேரியில் போராட்டம் நடத்தினர். இதுபோல் சென்னை, கோவை, திருச்சி என பல்வேறு மாவட்டங்களில் சீமான் பேச்சை கண்டித்து போராட்டம் நடந்தது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது திமுக சார்பில் சட்டத்துறை துணை செயலாளர் மருதுகணேஷ், திராவிடர் விடுதலை கழகம், தமிழர் முன்னேற்றப்படை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. கோவையில் திராவிடர் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கடலூர், சேலம், தென்காசி, தஞ்சை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பெரியார் அமைப்புகள், மற்றும் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்துள்ளனர். புகாரின் மீது முகாந்திரம் இருந்ததால், சீமான் மீது சென்னை சைபர் க்ரைம் மற்றும் மாவட்ட காவல் நிலையங்கள் என மாநிலம் முழுவதும் உண்மைக்கு புறம்பாக பேசியது.

இரு சமூகங்களுக்கு இடையே மோதலை உருவாக்குவது, கலவரத்தை தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நேற்று காலை வரை 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சீமான் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், வழக்கறிஞர்கள் சார்பில் மாநிலம் முழுவதும் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. சீமான் மீது புகார்கள் குவிந்து வருவதால் அவரை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகினற்னர். இந்த ஆலோசனையை தொடர்ந்து சீமான் கைது செய்ய படுவாரா என்று தெரியவரும். அதேநேரம் சீமான் பெரியார் குறித்து பேசியதற்கு உரிய ஆதாரங்களை கேட்டு அவர் செல்லும் இடங்கள் எல்லாம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

The post தந்தை பெரியார் குறித்து உண்மைக்கு முரணாக அவதூறு பேச்சு தமிழ்நாடு முழுவதும் சீமான் மீது 60 வழக்குகள் பதிவு: தொடர்ந்து புகார்கள் குவிந்து வருவதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Seeman ,Tamil Nadu ,Periyar ,Chennai ,Dravidian ,DMK ,Naam Tamilar Party ,Dinakaran ,
× RELATED பெரியார் பற்றி அவதூறாக பேசியதாக...