×

ஆஸி போட்டிகளில் சொதப்பலால் நெருக்கடி சாமியாரை சந்தித்து ஆசி பெற்ற கோஹ்லி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவுடன் நடந்த டெஸ்ட் போட்டிகளில் மோசமாக ஆடி ரசிகர்களின் கடும் விமர்சனத்துக்கு ஆளான இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, பிருந்தாவனில் உள்ள பிரபல சாமியார் பிரேமானந்த் மகராஜை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். சமீபத்தில் ஆஸி சுற்றுப்பயணம் சென்ற இந்திய கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது. மூத்த வீரர்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை இழந்தது. அந்த போட்டிகளில் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி, கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் உள்ளிட்ட சில வீரர்கள் சரியாக ரன் குவிக்காததே தோல்விக்கு காரணம் என ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் கடுமையாக விமர்சித்தனர்.

குறிப்பாக, விராட் கோஹ்லி 9 இன்னிங்ஸ்களில் ஆடி வெறும் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது, அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், கோஹ்லியும், ரோகித்தும் ரிடையர் ஆக வேண்டும் என ஏராளமான கிரிக்கெட் ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளை இட்டு தம் கோபத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் பிருந்தாவன் நகரில் அமைந்துள்ள பிரேமானந் மகராஜ் என்ற சாமியாரின் ஆசிரமத்துக்கு மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் தன் குழந்தைகளுடன் விராட் கோஹ்லி சென்று அவரது ஆசிகளை பெற்றார். கோஹ்லியும், அனுஷ்காவும் தங்கள் குறைகளை சாமியாரிடம் கூறி அவரது ஆலோசனைகளையும் பெற்றதாக தெரிகிறது. சாமியாரை கோஹ்லி சந்தித்து ஆசி பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வைரல் ஆனது.

The post ஆஸி போட்டிகளில் சொதப்பலால் நெருக்கடி சாமியாரை சந்தித்து ஆசி பெற்ற கோஹ்லி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Kohli ,Aussie ,New Delhi ,Virat Kohli ,Test ,Australia ,Premanand Maharaj ,Vrindavan ,Aussie… ,
× RELATED விராட் கோலி மீண்டும் கேப்டனாக...