×

அயர்லாந்து மகளிருடன் ஓடிஐ இந்தியா அசத்தல் வெற்றி: பிரதிகா ஆட்ட நாயகி

வதோதரா: இந்தியா வந்துள்ள அயர்லாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. வதோதராவில் இந்த தொடர் நடக்கிறது. நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து வீராங்கனைகள் முதலில் களமிறங்கினர். இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 56 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இருப்பினும் அந்த அணியின் கேப்டன் கேபி லுாயிஸ், லாரா டெலனி இணை பொறுப்புடனும், பொறுமையாகவும் விளையாடி 5வது விக்கெட்டுக்கு 117 ரன் விளாசினர். சதத்தை நெருங்கிய கேபி 92 ரன்னிலும், அரை சதத்தை கடந்த லாரா 59 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த சில ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வர அயர்லாந்து 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 238 ரன் எடுத்திருந்தது.

இந்திய வீராங்கனைகளில் பிரியா மிஸ்ரா 2விக்கெட் எடுத்தார். அறிமுக வீராகங்கனை சாயாலி சத்காரே, டைடஸ் சாது, தீப்தி சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து 239 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா 41, பிரதிகா ராவல் 89, அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் அமைத்து தந்த வலுவான அடித்தளத்தால் இந்திய அணி 34.3 ஓவரில் இலக்கை கடந்து 241 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் தேஜல் ஹசாப்னீஸ் 53, ரிச்சா கோஷ் 8ரன்னுடன் கடைசி வரை களத்தில் நின்றனர். ஆட்ட நாயகி பிரதிகா ராவல். அயர்லாந்து வீராங்கனைகள் அய்மீ மகுரி 3, ஃபிரேயா சார்ஜன்ட் ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

The post அயர்லாந்து மகளிருடன் ஓடிஐ இந்தியா அசத்தல் வெற்றி: பிரதிகா ஆட்ட நாயகி appeared first on Dinakaran.

Tags : ODI ,India ,Ireland ,Prathika Ata ,Vadodara ,Ireland women's ,India Shakhtal ,Pratika Ata Nayagi ,Dinakaran ,
× RELATED அயர்லாந்து மகளிருடன் 2ம் ஓடிஐ வாகை...