செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில் குப்பை கிடங்கு வளாகத்தில் தேக்கமடைந்த குப்பைகளால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு சுவாச கோளாறு மற்றும் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, உடனடியாக குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் மட்டும் லட்ச கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகராட்சியில் உள்ள அனைத்து குப்பைகளும் பச்சையம்மன் கோவில் அருகே பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வரும் குப்பைகள் சாலையின் இருபுறமும் தேக்கமடைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் அதிக அளவில் உருவாகியுள்ளது. இந்த குப்பை கிடங்கை கடந்துதான் தினமும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் என வேலைக்கு செல்லும் பொதுமக்கள் முகத்தை மூடிக்கொண்டு கடந்து செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும், குப்பை கிடங்கை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் இருப்பதால் அடிக்கடி குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் குடியிருப்புகளை புகை சூழ்ந்துள்ளது.
எனவே, குப்பை கிடங்கு வளாகத்தில் சாலையின் இரு புறமும் தேக்கமடைந்துள்ள குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் உடனே அகற்ற வேண்டும். கழிவுநீர் தேங்கியுள்ளதை உடனே தேங்காமல் இருக்க வேண்டும். குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் சுவாச கோளாறு ஏற்பட்டு பல வகையான தொற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் உடனே நேரில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
The post குப்பை கிடங்கு வளாகத்தில் தேக்கமடைந்த குப்பை கழிவுகள்: தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு appeared first on Dinakaran.