இதற்கு பதிலளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: இந்த பிரச்சினைக்கு மூல காரணம், ரிஷி மூலம் யார்? என்று பார்த்தால் எதிர்க்கட்சியான அதிமுக தான். அன்றைக்கு நாடாளுமன்றத்தில், அரிய வகை கனிம வளங்களை ஏலம் விட மாநில அரசுகளுக்கு எதிராக தீர்மானம் வந்தபோது அதிமுக அதை ஆதரித்தது. ஆனால், இதில் அரசியல் ஆதாயம் தேட அதிமுக முயற்சி செய்கிறது. (இவ்வாறு அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அதிமுக உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்)
முதல்வர் மு.க.ஸ்டாலின்: உங்களுடைய உறுப்பினர் மாநிலங்களவையிலே என்ன பேசினார்? அதை இல்லையென்று சொல்கிறீர்களா? மறுக்கிறீர்களா?. அதற்கு பதில் சொல்லுங்கள். அதற்குப் பிறகு முடிவெடுக்கலாம்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்: அதிமுகவை சேர்ந்த ஒரு உறுப்பினர் ஆதரித்ததாக கூறுகிறீர்கள். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?. நாடாளுமன்றத்தில், அரிய வகை கனிம வளங்களை எடுப்பதற்கான ஏல முறைக்கு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதுகுறித்து தான் எங்கள் உறுப்பினர் பேசினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: நான் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக அரசின் சார்பில் சொல்வேன், தமிழ்நாடு அரசு ஒருபோதும் இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கவே வழங்காது. நமது முதல்வராக இருக்கும் வரை ஒருபிடி மண்ணைக்கூட எடுக்க தமிழ்நாடு அரசு நிச்சயமாக அனுமதிக்கமாட்டோம் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் (அதிமுக) செய்த தவறை மறைப்பதற்காக நீங்கள் அனைவரும் இன்றைக்கு இந்த முகக்கவசத்தை உங்கள் முகங்களிலே அணிந்து கொண்டு வந்திருக்கிறீர்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.
The post டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரத்தில் மூலகாரணமே அதிமுகதான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை ஒருபிடி மண்ணை கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம் appeared first on Dinakaran.