அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் இல்லாததே குற்றங்கள் நடப்பதற்கு காரணமாக உள்ளது: உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் உறுப்பினர்கள் பேசியதாவது:
பூவை ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்): அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாத காரணத்தால் எஸ்டேட் அதிகாரியையும், பதிவாளரையும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி): மாணவியின் புகாரை ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது ஏன்? வேந்தர் என்ற முறையில் ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும். ஆளுநர் செயலில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.
ஈஸ்வரன் (கொமதேக): அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லை. அதனால் நிர்வாகத்தில் பல உயர் பொறுப்பில் அதிகாரிகள் இல்லை. எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாத சூழல் உள்ளது. துணைவேந்தர் இல்லாமல் இருப்பதற்கு யார் காரணம், அதனை நியமிகாதது ஆளுநரின் தவறு.
சதன் திருமலை குமார் (மதிமுக): மாணவிக்கு ஏற்பட்ட களங்கத்திற்கு ஆளுநரே முழு பொறுப்பு. ஆளுநர் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
மாரிமுத்து (இந்திய கம்யூ.): அண்ணா பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்திருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த சமூக விரோதி எப்படி உள்ளே வந்தார். குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும் இதில் பலர் சம்பந்தப்பட்டிருப்பார்களோ என்று தமிழ்நாடு முழுவதும் பேச்சு எழுந்திருக்கிறது.
நாகைமாலி (மார்க்சிஸ்ட்): முதல் தகவல் அறிக்கை விவரங்கள் தொழில்நுட்ப கோளாறால் வெளிவந்ததாக கூறுவதை ஏற்க முடியாது. தேசிய தகவல் மையத்தை விசாரணை வளையத்தில் கொண்டுவர வேண்டும்.
சிந்தனை செல்வன் (விசிக): அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சிசிடிவி காட்சிகள் மூலம் கிடைத்த சில தடயங்களை வைத்து 24 மணி நேரத்திற்குள் கைது செய்தது பாராட்டத்தக்கது. குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளது ஆறுதல் அளிக்கிறது.
எம்.ஆர்.காந்தி (பாஜ): இந்த சம்பவத்தில் யாருக்கு தொடர்பு இருந்தாலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். யார் அந்த சார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பாதித்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும், இந்த சம்பவத்திற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஜி.கே.மணி (பாமக): அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தமிழக மக்களின் உள்ளத்தை உலுக்கி எடுத்துள்ளது. இதை சாதாரண ஒரு நிகழ்வாக மக்கள் பார்க்கவில்லை. மக்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சியான சூழலை ஏற்படுத்தி உள்ளது.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய தகவல் மையம் மூலமே எப்ஐஆர் கசிந்துள்ளது. யார் அந்த சார் என கேட்கிறார்கள். முதல்வர் துறையில் உள்ள காவல்துறை ஆய்வாளரையே நேற்று கைது செய்துள்ளனர். ஆய்வாளருடன் கைதாகியுள்ள சார்… யார் அந்த சார்? யார் அந்த முகேஷ்? முகேஷை காப்பாற்ற முயற்சித்த அரசியல் கட்சி எது? குற்றவாளி யாருடன் பேசினார். தொலைத்தொடர்பு துறை ஒன்றிய அரசிடம் தானே உள்ளது. பாஜக வினர் அதை வெளியிட வேண்டும்.
ஆர்.பி.உதயகுமார் (அதிமுக): ஞானசேகர் திமுகவை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையில் புகார் அளிக்க அஞ்சும் நிலையை எப்ஐஆர்-ஐ வெளியிட்டு, இந்த அரசு ஏற்படுத்தி உள்ளது. உண்மை குற்றவாளிகளை கைது செய்யும் வரை அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும். தமிழ்நாட்டில், பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை என்றாகிவிட்டது. இவ்வாறு அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பேசினர்.

The post அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் இல்லாததே குற்றங்கள் நடப்பதற்கு காரணமாக உள்ளது: உறுப்பினர்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: