டிவி பார்த்து தெரிந்து கொண்ட முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் இல்லை :செல்வப்பெருந்தகை பேச்சுக்கு அதிமுக எதிர்ப்பு

சென்னை : அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை,”அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் நடவடிக்கை மற்றும் காவல்துறை அணுகுமுறையை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். இதனை வாக்கு வங்கி அரசியலாக்கி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரன் செல்போனில் யாரிடம் பேசினார் என்பதை கண்டுபிடியுங்கள்.மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சரிடம் பேசி கண்டுபிடிக்க வேண்டும். தொலைபேசி எண்ணை வைத்து யாரென்று எளிதாக கண்டுபிடிக்கலாம்.

பாலியல் கொடுமையைவிட அதை அரசியலாக்குவது அதைவிட கொடுமையானது. தமிழ்நாட்டில் மனு நீதி சோழன் ஆட்சி நடைபெற்று வருகிறது. தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்ட முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் இல்லை. யார் தவறு செய்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்,”என்று கூறினார். செல்வப்பெருந்தகை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவரைக் குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை பேசுவதை ஏற்க முடியாது என்று சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு கொடூரம் நேர்ந்துள்ளது. முதல்வர் ஏன் தற்போது வரை அண்ணா பல்கலை. விவகாரத்தில் விளக்கம் தரவில்லை?” என கேள்வி எழுப்பினார்.

The post டிவி பார்த்து தெரிந்து கொண்ட முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் இல்லை :செல்வப்பெருந்தகை பேச்சுக்கு அதிமுக எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: