சென்னையில் கன மழையால் சேதமடைந்த 5,000 சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது: மேயர் பிரியா பேட்டி

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி பகுதிகளில் கன மழையால் சேதமடைந்த 5 ஆயிரம் சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது, என மேயர் பிரியா கூறினார். சென்னை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அயனாவரம் வெள்ளாளர் தெரு மற்றும் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்னை சத்யா நகரில், நடைபயணம் மேற்கொண்ட அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர். முன்னதாக அயனாவரம் நகர்ப்புற நல வாழ்வு மையம், அம்மா உணவகம், மாநகராட்சி பூங்கா, இறகு பந்து விளையாட்டு அரங்கம், பூங்கா உள்ளே புதிதாக கட்டப்பட்டு வரும் உடற்பயிற்சி கூடம் மற்றும் தாகூர் நகர் சென்னை தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மேயர் பிரியா நிருபர்களிடம் கூறியதாவது: முதலமைச்சரின் உத்தரவுபடி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிறோம். பூங்கா, இறக்கு பந்து கூடம், அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு அம்மா உணவகத்திற்கு கூடுதலாக என்ன தேவை இருக்கிறது என்பது குறித்து கேட்டறிந்தோம். தொடக்க பள்ளியில் ஆய்வு மேற்கொண்டோம். தொடர்ந்து ஒவ்வொரு வார்டிலும் பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்து வருகிறோம்.

கடந்த நவம்பர், டிசம்பர் மாதம் பெய்த மழையில் 5 ஆயிரம் சாலைகள் சேதமடைந்துள்ளதாக கண்டறிந்துள்ளோம். அவற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சில சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்தாலே போதும் என்ற நிலைமை உள்ளது. அந்த சாலைகளில் முதற்கட்டமாக பேட்ச் ஒர்க் செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, மீதமுள்ள சாலைகள் வருகிற 2025ம் ஆண்டு நிதியை வைத்து பணிகள் நடைபெறும்.
இதை தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில், ‘‘சென்னையில் சில இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அதிமுகவின் பி டீமாக தமிழக ஆளுநர் ரவி செயல்படுகிறார். ஆளுநர் பேசியதை தவறு இல்லையென பேசுவது எதிர்பார்த்த ஒன்று தான்’’ என்றார்.

பின்னர் சென்னை தீவுத்திடலில் 49வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ள பெருநகர சென்னை வளர்ச்சி ஆணைய கண்காட்சி அரங்கை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்து பார்வையிட்டார். சிஎம்டிஏ கண்காட்சி அரங்கு இந்த ஆண்டு சென்னை, குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையத்தின் வடிவமைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரங்கில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் பல்வேறு சாதனைகள் 84 புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி அரங்கில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வால்டாக்ஸ் ரோடு சாலை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய குடியிருப்புகள் மாதிரி வடிவம், கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம் மாதிரி வடிவம், கொளத்தூர் மக்கள் சேவை மையம் மாதிரி வடிவம் மற்றும் கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தின் மூன்றாம் கட்டிடம் மாதிரி வடிவம் என 4 மாதிரி வடிவங்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்து சமய அறநிலையத்துறை அரங்கையும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டார்.

 

The post சென்னையில் கன மழையால் சேதமடைந்த 5,000 சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது: மேயர் பிரியா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: