ஒரே குடும்பத்தில் 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

அரியலூர்: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் நத்தக்குழியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி காசியம்மாள். ரங்கநாதன தம்பி சின்னத்தம்பி. ரங்கநாதன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது வீடு மற்றும் இடத்தை சின்னத்தம்பி ஆக்கிரமித்து வைத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கணவரின் சொந்த இடத்தில் வசிக்க விடாமல் சின்னத்தம்பி தகராறு செய்து வருவதாக செந்துறை காவல் நிலையம், தாசில்தார் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகத்தில் காசியம்மாள் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் புகார் மனு அளிப்பதற்காக காசியம்மாள் தனது மகள்கள் தீபா, ராசாத்தி, செல்வராணி உட்பட 5 பெண்களுடன் நேற்று காலை வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென தாங்கள் பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து 5 பேரும் உடலில் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் காசியம்மாளிடம் நடத்திய விசாரணையில், சொத்து பிரச்சனை காரணமாக நாங்கள் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றோம் என்றார். இதையடுத்து போலீசார், காசியம்மாள் உள்பட 5 பேரையும் செந்துறை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் 5 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ஒரே குடும்பத்தில் 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: