குன்னூரில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சிம்ஸ்பூங்காவில் 2500 ஜூஸ் பாட்டில் தயாரிக்கும் பணி தீவிரம்

குன்னூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குன்னூர் சிம்ஸ்பூங்காவில் சுமார் 2500 ஜூஸ் பாட்டில்கள் தயார் படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் மலை பிரதேசமாக உள்ளதால் குளு குளு சீசன் நிலவி வருகிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது நீலகிரி மாவட்டம் இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலையை ஒத்து இருந்ததால் அங்கு விளையக்கூடிய பிளம்ஸ், பேரி, பீச் உட்பட பல்­வேறு வகை பழ வகையான மரநாற்றுகளை பயிரிட்டு விளைவித்தனர்.

அவ்வப்போது நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப பழங்கள் மகசூல் கொடுத்தன. இவ்வகை மார நாற்றுகளை விவசாயிகள் ஊடுபயிராகவும், தனியாகவும் பயிரிட்டு மகசூல் எடுத்து வருகின்றனர். அரசு தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் பேரிக்காய், பிளம்ஸ், பீச் உட்பட பழமரங்கள் உள்ளன. சீசனுக்கு ஏற்ப பழங்கள் பழப்பண்ணையிலிருந்து பழவியல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, ஜாம், ஸ்குவாஸ், ஊறுகாய் உள்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக விடுமுறை நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வரக்கூடும் என்பதால், சிம்ஸ்பூங்கா பழவியல் நிலையத்தில் சுமார் 2500 ஜூஸ் பாட்டில்கள் விற்பனைக்காக தயார்ப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், ஆரஞ்சு ஜூஸ் 1100 பாட்டில்களும், தாட்பூட் ஜூஸ் 400 பாட்டில்களும், அன்னாசிப்பழம் ஜூஸ் 1000 பாட்டில்களும் விற்பனை செய்வதற்காக தயார் படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில் குறிப்பாக தற்போது புது முயற்சியாக சிம்ஸ்பூங்காவிற்குள் தோட்டக்கலைத்துறை சார்பாக சிறிய அளவிலான கடை அமைத்து, ஜூஸின் ருசியை அறியும் விதமாக டம்ளர்களில் ஜூஸ் விற்பனை செய்து வருகின்றனர். அதில் ஒரு டம்ளர் அன்னாசி பழ ஜூஸ் 10 ரூபாய்க்கும், திராட்சை ஜூஸ் 15 ரூபாய்க்கும், தாட்பூட் பழ ஜூஸ் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது இந்த புது முயற்சியால் விற்பனையும் களைகட்டியுள்ளதாக தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post குன்னூரில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சிம்ஸ்பூங்காவில் 2500 ஜூஸ் பாட்டில் தயாரிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: