அருமனை அருகே கேரளாவில் இருந்து இறைச்சி கழிவு ஏற்றிவந்த வாகனம் பறிமுதல்: கொட்டப்பட்ட குப்பைகள் எரிப்பு


அருமனை: அருமனை அருகே ஆறுகாணி பகுதியில் பன்றி பண்ணை அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடையாலுமூடு பேரூராட்சி செயல் அலுவலர் கந்தசாமி தலைமையிலான அதிகாரிகள் பன்றி பண்ணையை மூடி சீல் வைத்தனர். தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட பன்றி பண்ணையில் பன்றிகள் வளர்க்கப்படுவதாக பொதுமக்கள் புகார் எழுப்பினர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட பன்றி பண்ணைக்கு நேற்று காலை சரக்கு வாகனத்தில் கேரள மாநிலத்தில் இருந்து இறைச்சி கழிவுகள் கொண்டு வரப்படுவதாக ஆறுகாணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தை பேனு என்ற பகுதியில் தடுத்து நிறுத்தினர். பின்னர் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து வாகனத்தை ஓட்டி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெயக்குமாரை கைது செய்தனர். அதன் பிறகு சரக்கு வாகனத்தை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது ஒருபுறம் இருக்க அருமனை ஊராட்சி பகுதியில் கேரள மாநிலத்தில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகளை ஏற்றி வந்து சாலையோரத்தில் கொட்டிவிட்டு சென்று உள்ளனர். இதனை அறிந்த ஊராட்சி நிர்வாகம் கழிவுகளை தீ வைத்து எரித்ததாக தெரிகிறது. இதனால் எழும்பிய புகையால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் நேற்று அருமனை பகுதிக்கு சென்று குப்பைகள் தீ வைத்து எரிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் படபச்சை, நெட்டா வாகன சோதனைச்சாவடிக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கிருந்த போலீசாரிடம் கேரளத்தில் இருந்து வரும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்த பின்னரே தமிழகத்துக்குள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் ஆறுகாணியில் இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்து பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம் சோதனைச்சாவடியை கடந்து வந்ததா? அல்லது வேறு வழியாக வந்ததா? என்று விசாரணை நடத்தினார். எஸ்.பி.யின் இந்த திடீர் ஆய்வு போலீசாருக்கு கலக்கத்ைத ஏற்படுத்தி உள்ளது.

The post அருமனை அருகே கேரளாவில் இருந்து இறைச்சி கழிவு ஏற்றிவந்த வாகனம் பறிமுதல்: கொட்டப்பட்ட குப்பைகள் எரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: