செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் மேல்மலையனூர் தாலுகாக்களில் சம்பா நெல் அறுவடை தொடங்கி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் பெய்த பெஞ்சல் புயலால் நெற்பயிர்கள் விளைந்து தண்ணீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வடிந்து மேடான பகுதிகளில் நெல் அறுவடை இயந்திரம் மற்றும் ஆட்கள் மூலம் நெல் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல் மூட்டைகளை செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதில் நேற்று திங்கட்கிழமை என்பதால் 14 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்காக குவிந்தன. இதில் 500 டோக்கன் வழங்கப்பட்டு 11 ஆயிரம் நெல் மூட்டைகள் மட்டுமே எடுத்து கொள்ளப்பட்டது.
மீதமுள்ள 3,000 மூட்டைகளுக்கு 300 டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று விற்பனைக்காக எடுத்து கொள்ளப்படுகிறது என மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று விலை பட்டியல் சன்னரகமான பொன்னி நெல் 75 கிலோ மூட்டை ரூ1,850 முதல் அதிகபட்சமாக ரூ2,489 வரை விலை போனது. இதேபோன்று கோ. 51 ரூ1,109 முதல் அதிகபட்சமாக ரூ1,592, சன்னரகம் ரூ1,890 முதல் ரூ1,200 வரையில் விற்பனையானது. டி.கே. 9 நெல் ரூ1,529 முதல் 1919 வரையிலும், பிபிடி ரூ1,590 முதல் 1659 வரை அதிகபட்சமாக விற்பனையானது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து நெல் விலை 200 ரூபாய் கூடுதலாகவும் நேற்று சுமார் 100 முதல் 200 வரை விலை குறைந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது நல்ல நெல் மூட்டைகளுக்கு நல்ல விலை கொடுத்து வாங்குகிறோம். மழையில் பாதிக்கப்பட்ட நெல் மூட்டைகளை 100 முதல் 200 வரையிலும் குறைத்து விலை போட்டு வாங்குகிறோம் எனவும் தெரிவித்தனர். மேலும் வரும் நாட்களில் அதிகளவு நெல் அறுவடை நடைபெற்று அதிக நெல் மூட்டைகள் வர உள்ளது. இதுகுறித்து செஞ்சி மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்து போதிய இடவசதி செய்து தர வேண்டும். தினமும் வரும் நெல் மூட்டைகளை அன்றாடம் வெளியில் எடுத்து சென்றால் வெளியில் இருந்து கொண்டு வரும் விவசாயிகள் நெல் மூட்டைகளை இறக்கி வைக்க ஏதுவாக இருக்கும் என விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆகையால், மாவட்ட மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் செஞ்சி மார்க்கெட் கமிட்டி நிர்வாகத்தின் மீது கவனம் செலுத்தி போதிய இடவசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் ஒரே நாளில் 14 ஆயிரம் நெல் மூட்டைகள் குவிந்தன appeared first on Dinakaran.