அற ஆட்சியே அரசாட்சி

‘ஆட்சி’ என்பது ஆட்சியாளர்களின் புகழை மட்டுமே பாடாமல் மக்களுக்கானதாக இருக்கவேண்டும். அவ்வண்ணம் ‘ராமன்’ மன்னராட்சி செய்திருந்தாலும் அதனை மக்களாட்சியாகவே செய்துள்ளார். முறை செய்து காப்பாற்றும் மன்னன், மன்னுயிர்க்காக்குங்காலை, மக்களுடன் இணைந்து இணங்கி வாழ்ந்து அவர்தம் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும். அதற்கேற்ப,

‘‘எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன்
முதிர்வரு கருணையின் முகமலர் ஒளிரா!
எதுவினை? இடர் இலை? இனிது நும் மனையும்
மதிதரு குமரரும் வலியர்கொல்?….’’
(கம்ப.பா.132)

என்று, ‘ராமன்’ எதிரில் வருபவர்களை கருணைக்கன் கொண்டு வினவுகிறான். இதில் ராமன் சக்கரவர்த்தித் திருக்குமாரனாக இருந்தாலும், சற்றும் கர்வமில்லாமல், எதிரில் வருபவர்கள் பேசுவதற்கு முன்பு, தான் முந்துறப்பேசி, அவர் தம் இன்பதுன்பங்களை அறிந்து, அதனைத் தானும் அனுபவித்து, இன்பம் பெருக்கியும் துன்பம் துடைத்தும் அறத்தின் வழியில் அரசாட்சி செய்தான் என்பது புலனாகிறது. இதில், ‘ராமபிரான்’ எதிர்வருபவர்களுடன் பேசினான் எனில், அவன் வீதிவலம் செல்லும் போது மன்னருக்குரிய பரிவாரங்களுடன் தேரின் மீது ஏறி, ஊர்ந்து செல்லாமல், மக்களுக்கு இணையாக நடந்து சென்றிருக்கிறான் என்பது வெளிப்படையாக தெரிகிறது. இவ்வண்ணம் ‘ராமன்’ அரசாட்சியில்கூட தனிநின்று ‘எளிமை’ என்னும் தத்துவத்தை உணர்த்துகிறான். மேலும், ஏழிரண்டு ஆண்டில் பூழிவெங்கானக வாசம் முடித்து வந்து ராமன் அயோத்திக்கு அரசனாகிறான். அப்போது வசிட்டர் மௌலிபுனைகிறார். இதனை,

‘‘அரியனை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரைசெறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மௌலி’’
(கம்ப.பா.10327)
– என்ற பாடல் எடுத்துரைக்கிறது.

இப்பாடல், ராமபிரானின் பட்டாபிடேகப் பாடல் எனினும், இதில் பட்டத்தரசனாகிய ராமனின் பெயர் ஓரிடத்திலும்கூட சுட்டப்படவில்லை. ‘ராமன்’ தன் பெயரை மறைத்துக் கொண்டு வீண்விளம்பரமற்ற அற ஆட்சி செய்துள்ளான் என்பது புலப்படுகிறது. ராமன் தன் பெயரை இழந்து மக்களாட்சி செய்த தத்துவம் இன்றைய அரசியலுக்கு எடுத்துக்காட்டும் பாடமாக விளங்குகின்றது.

சமநிலை மனநிலை

ராமபிரானை ஓர் அவதாரம், ஓர் அரசன், என்ற நிலைகளில் பார்ப்பதற்கு முன் ‘நல்ல மனிதன்’ என்று பார்க்கும்போது, அவன் வளமார் மானுட வாழ்விற்கு வழிகாட்டுகிறான்.
இன்பம் மற்றும் துன்பம் இரண்டையும் ஒக்கவே நோக்கும் சமமான மனநிலை ராமபிரானுக்கு இருந்தது. அவ்வகையில், ராமனிடத்தில் கைகேயி ‘உனக்கு அரசாட்சி இல்லை’ என்று கூறியபோது,
‘‘இப்பொழுது எம்மனோரால் இயம்புதற்கெளிதே? யாரும்
செப்பரும் குணத்துராமன் திருமுகச்செவ்வி நோக்கின்
ஒப்பதே முன்பு, பின்பு அவ்வாசகம் உணரக் கேட்ட
அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா’’
(கம்ப.பா.1602)

புது நறுமணம் பரப்பும் செந்தாமரையை வென்றது இராமனின் முகம். ராமபிரானின் முகம் தாமரையை வென்றதாகக் கம்பர் உவமிக்கக் காரணம், பூக்களின் மலர்தலும் கூம்பலும் கதிரவனால் ஏற்படினும் அம்மலர்ச்சியும் வாட்டமும் அக்கதிரவனை பாதிப்பது கிடையாது. மேலும் ராமன் சூரிய குலத்தைச் சார்ந்தவன் என்பது புலனாகிறது. அரசாட்சி ‘உண்டு’ என்றபோதும், ‘இல்லை’ என்ற போதும்.
‘‘ஒப்புதே முன்பு பின்பு…’’ (கம்ப.பா.1602.3)

– என்ற அடிக்கு இலக்கணமாக சமநிலை மனநிலையுடன் இருந்தான் ராமன். இந்த ‘சமமனநிலை’ என்ற வாழ்க்கைத் தத்துவத்தை ராமனிடம் கற்றுக் கொள்ளவேண்டும்.
அதே போல், ராமன் வனவாசம் சென்றபோது நாவாய் வேட்டுவ குலத்தைச் சார்ந்த குகனைத் தன் சகோதரனாக ஏற்று, அவன் திருத்திக்கொணர்ந்த தேனையும் மீனையுமன் தன் நயனத்தால் சுவைத்து, பின்னர் கங்கைக்கறையிலிருந்து நீங்கிச் சென்றான். இதன் பின் அங்கு பரதன் வருகிறான்.

‘‘வந்து எதிரே தொழுதானை வணங்கினான்; மலரிருந்த
அந்தணனும் தனைவணங்கும் அவனும், அவன் அடிவீழ்ந்தான்
தந்தையினும் களிகூரத் தழுவினான்,
தகவுடையோர்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிருந்தான் சீர்த்தியான்’’
(கம்ப.பா.2334)

எதிரே வந்து குகன் பரதனைத் தொழுதான் தன்னைத் தொழுத குகனை வீழ்ந்து வணங்கினான் பிரம்மனாலும் வணங்கத்தக்க பரதன். இதன் மூலம் அடியாராக விளங்குவதற்கு சாதியும் குலமும் தேவையில்லை, அன்பு மட்டுமே போதுமானது என்பது வெளிப்படுகிறது. இப்படி இருவரும் மாறிப்புக்கு அன்பு எய்தக் காரணம். ராமன், ‘‘குகனொடும் ஜவரானேம்’’ என்று குகனை சகோதரனாக ஏற்று, சரணாகதி அளித்ததே ஆகும். இவ்வாறு, ராமன் ‘சரணாகதித் தத்துவத்தில் சாதி தடையல்ல’ என்று காட்டுகிறான்.

ராமன் ‘சொல்லின் தாய்’அனுமனை ‘சொல்லின் செல்வன்’ என்பர் அந்த சொல்லின் சேயைத் தன் அடியாராகக் கொண்ட ராமபிரான் சொல்லின் தாயாக விளங்குகிறான் என்பது எம்கருத்து. ராமபிரானின் சொல்லாற்றல் பனுவலில் பல இடங்களில் வெளிப்பட்டிருந்தாலும், வீடணனைத் தன் தம்பியாக ஏற்கும் இடத்திலும் வெளிப்படுகிறது.
அவ்வமையம்,

‘‘……. ……… எம்முழை அன்பின் வந்த
அகனமர்க் காதல் ஐய; நின்னொடும் எழுவர் ஆனேம்
புகலரும் கானம்தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை’’ (கம்ப.பா.6507)
– என்ற பாடலில் தம்பியாக ஏற்றுக்கொண்டமை தெரியவருகிறது.

அப்போது தயரதனைக் கூறுமிடத்து, ‘எந்தை’ என்றோ? ‘தந்தை’ என்றோ? குறிப்பிடாமல் ‘நுந்தை’ என்று குறிப்பிடுகிறான் சொல்லின் தாயாகியராமன்.
‘எந்தை’ என்று கூறினால் அது வீடணனை சகோதரனாக ஏற்கவில்லை என்று பொருள்.

‘தந்தை’ என்று கூறினால் வாயளவில் மட்டுமே சகோதரனாக ஏற்றதாகப் பொருள்.‘நுந்தை’ என்று கூறியதால் ‘நும் தந்தை’ என்று பொருள்பட்டு, வீடணனைத் தான் மனதளவிலும் ஏற்றதை அறுதியிட்டு உறுதிசெய்யவே ‘உன் தந்தை’ என்று தயரதனை குகனுக்கு உரிமைமிக்க தந்தையாக்குகிறான். இவ்வண்ணம் ராமபிரான் சொல்லறம் எனும் தத்துவம்காத்து ‘‘சொல்லுக்குத் தாயாக’ விளங்குகிறான்.

இல்லறமும் நல்லறமும்
ராமபிரான் ‘பெண்ணாசையே கூடாது’ என்று குறிப்பிடவில்லை. மாறாக,
‘‘இந்த இப்பிறவிக்கு இருமாதரை சிந்தையாலும் தொடேன்…’’
(கம்ப.பா.5378.23)

என்று இல் அறம் காத்து நின்று, ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் வாழலாம் என்று அறம் உணர்த்துகிறான். இந்த ராம கருத்தை ராமலிங்க அடிகளின்

‘‘மருவு பெண்ணாசையே மறக்க வேண்டும்’’ (தெய்வ மணிமாலை)
என்று அடிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். வில்லறத்தில் ராமன் விலகாது நிற்கிறான் தாடகை வதையின் போது,
‘‘பெண் என மனத்திடை ெபருந்தகை நினைத்தான்’’ (கம்ப.பா.374)

அப்போது, விஸ்வாமித்திரன் சொல்லவே ராமன் அம்பு எய்தான் மேலும், வாலியைக் கொல்லவில்லை அது வில்லாமல் வாலிக்கு ராமன் வழங்கிய மோட்சமே ஆகும். பின், ராவணன் வதையின் போது, நிராயுதபாணியாக நிற்கும் எதிரிக்கும்கூட,

‘‘இன்றுபோய் போர்க்கு நாளை வா….’’ (கம்ப.பா.7271)
– என்று கூறி வில்லறம் காக்கிறான் கோசல நாடுடைய வள்ளல்.

நிறைவுரை

இவ்வாறு மேற்கண்ட தத்துவங்களுடன் ஏற்புடையவனாக ராமன் வாழ்ந்து தனிநின்ற தத்துவ மூர்த்தியாக’ விளங்குகிறான் என்பது இக்கட்டுரை உணர்த்து உண்மை ஆகும்.

சிவ.சதீஸ்குமார்

The post அற ஆட்சியே அரசாட்சி appeared first on Dinakaran.

Related Stories: