விருதுநகர், ஜன.3: விருதுநகர் நகராட்சியுடன் சின்னமூப்பன்பட்டி கிராமத்தை இணைக்க வேண்டாம் என கிராம பொதுமக்கள் எம்எல்ஏவிடம் மனு அளித்தனர். தமிழகத்தில் புதிதாக 13 நகராட்சிகள் மற்றும் 25 பேரூராட்சிகளை உருவாக்கியும், 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகளை விரிவாக்கம் செய்தும் தமிழக அரசு நேற்று முன்தினம் அரசாணை வெளியிட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி மற்றும் விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம் நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. அந்தவகையில் விருதுநகர் நகராட்சியுடன் கூரைக்குண்டு ஊராட்சியில் அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி, கோட்டைப்பட்டி, குமாரசாமிபுரம் ஆகிய பகுதிகளும், ரோசல்பட்டி ஊராட்சியில் ரோசல்பட்டி, குமராபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய பகுதிகளும், சிவஞானபுரம் ஊராட்சியில் சின்னமூப்பன்பட்டி, பேளம்பட்டி, லட்சுமி நகர் பகுதிகள் என 3 ஊராட்சிகளின் பகுதிகளை இணைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிவஞானபுரம் ஊராட்சியில் உள்ள சின்னமூப்பன்பட்டி கிராம மக்கள் தர்காசு தெருவில் உள்ள எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் கட்சி அலுவலகத்தில் சிவஞானபுரம் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சென்று மனு அளித்தனர். மனுவில், விருதுநகர் நகராட்சியுடன் சின்னமூப்பன்பட்டி கிராமத்தை இணைப்பதை கிராம பொதுமக்கள் எதிர்க்கிறோம். தமிழக அரசிடம் சட்டமன்ற உறுப்பினர் இணைப்பதை கைவிட வேண்டுமென பரிந்துரைக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
கிராமக்களின் கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து களைந்து சென்றனர். அதை தொடர்ந்து கிராமத்தில் நடத்திய சிறப்பு கூட்டத்தில் எம்எல்ஏவிடம் அளித்த மனுவிற்கு 2 நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி அலுவலகத்திலும் மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
The post சின்னமூப்பன்பட்டி கிராமத்தை நகராட்சியுடன் இணைக்க வேண்டாம்: எம்எல்ஏவிடம் மக்கள் மனு appeared first on Dinakaran.