நெல்லில் கரிபூட்டை நோய் தடுப்பது எப்படி?

திருச்சி, ஜன.3: நெல்லில் நெல் பழ நோய் என்ற கரிபூட்டை நோய் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜா பாபு வௌியிட்டுள்ள செய்திகுறிப்பில், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார பகுதிகளில் சம்பா பட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் நெல் பூக்கும் தருவாயில் உள்ளது. இந்த முன் பட்ட சம்பா நெற் பயிர்களில் சில இடங்களில் நெல் பழம் என்று சொல்லப்படுகிற நெல் கரிபூட்டை நோய் (அ) இலட்சுமி நோய் காணப்படுகிறது. இந்நோய் தாக்கிய நெல் மணிகள் பெருத்து கருமை கலந்த பச்சை அல்லது மஞ்சள் நிறமாக மாறி சிறிய பந்து வடிவில் காணப்படும்.

இந்நோய் நெற்பயிர் பூக்கும் பருவம் மற்றும் நெல் மணிகள் பால் பிடிக்கும் தருணத்தில் காணப்படும். குறிப்பாக தற்போது நிலவும் மழை மற்றும் மேக மூட்டத்துடன் கூடிய பனிப்பொழிவு உள்ள நிலையில் நோய் பரவல் அதிகமாகும். இந்நோயை வரும் முன் பூஞ்சாணக்கொல்லி தெளித்து கட்டுபடுத்துவதே சிறந்தது, ஏனேனில் நோய் தாக்கிய பின்பு நாம் வயலில் இறங்கி பூஞ்சாணக் கொல்லி தெளிப்பு செய்யும் போது சிறிய நெல் பழங்கள் (பந்துகள்) உடைந்து நோய் பரவல் அதிகமாகக் கூடும். குறிப்பாக CO(R)-50, BPT-5204 போன்ற நெல் ரகங்களில் இந்நோயின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

இந்நோயை கட்டுப்படுத்த சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் கீழ்க்கண்ட வழிமுறைகளை அறிவுறுத்துகிறது. இந்நோயிலிருந்து பயிரை காக்க பூக்கும் பருவத்தில் அதிக தழைச்சத்து உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும். இந்நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு புரோபிகோனசோல் 200 மில்லி அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு 500 கிராம் அல்லது காப்பர் ஹைட்ராக்சைட் 77%WP -500 கிராம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பூஞ்சாணக்கொல்லியை கண்டிப்பாக 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post நெல்லில் கரிபூட்டை நோய் தடுப்பது எப்படி? appeared first on Dinakaran.

Related Stories: