அரையாண்டு விடுமுறைக்குப்பின் பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவர்கள்

திருவாரூர், ஜன. 3: திருவாரூர் மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின்னர் நேற்று ஆயிரத்து 276 பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் உற்சாமாக பள்ளிக்கு வருகை தந்தனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மாணவர்களின் நலன் கருதி கல்வி துறையின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் உட்பட பல்வேறு உன்னத திட்டங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின், கொண்டு வந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் திட்டங்கள் மட்டுமின்றி உரிய நேரத்தில் மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின்னர் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. முன்னதாக நேற்று முன்தினமே பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் தொட்டிகள், சமையல் கூடம் உள்ளிட்ட அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 945, அரசு உதவி பெறும் பள்ளிகள் 125, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 134, மற்றும் நர்சரி பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் என மொத்தம் ஆயிரத்து 276 பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் இந்த பள்ளிகளுக்கு நேற்று மாணவ, மாணவிகள் உற்சாகமாக வருகை தந்தனர். மேலும் அரசு உத்தரவுபடி நேற்று முதல் நாளிலேயே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 3ம் பருவத்திற்கான பாட புத்தகங்களும் வழங்கப்பட்டன.

The post அரையாண்டு விடுமுறைக்குப்பின் பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: