புதுக்கோட்டை, ஜன.3: புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனை குறைவால் சிறிய நகரங்களில் இருந்த பாத்திரக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு வருவதால் அந்த கடைகளின் முதலாளிகள் பெரிய கடைகளுக்கு வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 பேரூராட்சிகள் உள்ளிட்ட பல சிறிய நகரங்கள் உள்ளது. இந்த நகரங்களை சுற்றி பல நூறு கிராமங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் அனைவரும் விவசாயத்தை நம்பியே இருப்பார்கள். இவர்களின் வீட்டிற்கு தேவையான பாத்திரகள் வாங்க வேண்டுமானல் கிராமங்களுக்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் வாங்குவார்கள். மேலும் பேரூராட்சி அளவில் உள்ள சிறிய நகரங்களுக்கு சென்று அங்கு அவர்களுக்கு தேவையான பாத்திரங்களை வாங்குவார்கள்.
வீட்டில் உள்ள நெல்லை நகர் பகுதியில் கொண்டு விற்பனை செய்து விட்டு அந்த பணத்தில் புதிய ரக பாத்திரங்களை வாங்குவார்கள். மேலும் வீட்டில் பயன்படாமல் கிடக்கும், பழைய அலுமனிய பாத்திரங்கள், ரப்பர் சாமான்கள் அனைத்தையும் எடுத்துசென்று புதிய பாத்திரங்கள் வாங்கும் கடையில் விற்பனை செய்து விட்டு அந்த பணத்தில் புதிய பாத்திரங்கள் வாங்கி வருவார்கள். இதனால் சிறிய நகரங்களில் பாத்திரங்கள் விற்பனை அதிகரித்து பாத்திரக்கடைளும் அதிகரித்தது. மேலும் பர்னிச்சர் சாமான்களும் விற்பனை செய்தனர். இந்நிலையில் உலகமயமாக்கல், ஜிஎஸ்டி போன்ற பிரச்னைகளால் சிறிய நகரங்களில் உள்ள பாத்திரக்கடைகளில் விற்பனை குறைந்தது. மேலும் பொதுமக்களின் பார்வையும் திருச்சி, மதுரை, சென்னை, கோயம்புத்தூர் பகுதிக்கு திரும்பியது. அங்குள்ள பெரிய கடைகளின் விளம்பர யுக்தி, வியாபார யுக்தியை சிறிய நகரங்களில் உள்ள கடைகளால் தாக்குபிடிக்க முடியாமல் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்தனர்.
இதனால் சிறிய நகரங்களில் பாத்திரக்கடைகள் வைத்திருந்தவர்கள் கடையை மூடிவிட்டு பெரிய நகரங்களில் உள்ள பெரிய கடைகளுக்கு குடும்ப சூழ்நிலையின் காரணமாக மாத சம்பளத்திற்கு பணிக்கு செல்கின்றனர். குறிப்பாக ஒரு சிறிய நகரத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 10 பாத்திரக்கடைள் இருந்தது என்றால் தற்போது 3 முதல் 5 கடைகள் தான் இருக்கிறது. முன்பெல்லாம் திருமண நிகழ்ச்சிகளுக்கு சீர்வரிசை கொடுப்பதற்கு சிறிய நகரங்களில் உள்ள கடைகளுக்கு சென்று பொருள் வாங்கினார்கள்.
தற்போது பெரிய நகரங்களில் இதற்கென பிரத்யோக பிரிவுகள், குறைந்த விலை மற்றும தள்ளுபடியால் பொதுமக்களும் சிறிய நகரங்களில் உள்ள பாத்திரக்கடைகளை முற்றிலும் புறம் தள்ளிவிட்டு பெரும் நகரங்களுக்கு செல்கின்றனர். மேலும் சிறிய நகரங்களில் கடை வைத்திருப்பவர்கள் படிக்காதவர்கள். அவர்கள் சிறு வயதில் இரு சக்கர வாகனத்தில் பாத்திரங்கள் விற்பனை செய்து அதில் கிடைத்த லாபத்தை வைத்து சிறிய நகரங்களில் குறைந்த அளவு வாடகையில் இடம் பிடித்து கடைகள் ஆரம்பித்தனர். அப்போது ஜிஎஸ்டி போன்ற வரிகள் இல்லை. இதுகுறித்து பொதுமக்களிடம் தெரிவித்து அதற்கு ஏற்றார்போல் வியாபாரம் செய்ய முடியவில்லை.
The post புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறிய நகரங்களில் பாத்திர கடைகள் மூடப்படும் அபாயம் appeared first on Dinakaran.