பிப்ரவரி மாதம் தேசிய வருவாய் வழி தேர்வு அரசு பள்ளி மாணவர்கள் ஜன.24க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்புதவித் தேர்வு பிப்ரவரி மாதம் நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்கள் ஜனவரி 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்புதவித் தேர்வு 2024-2025ம் கல்வி ஆண்டில் பிப்ரவரி 22ம் தேதி நடக்க இருக்கிறது.

இந்த தேர்வுக்க விண்ணப்பிக்க விரும்பும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம் இணைய தளம் மூலம் விண்ணப்ப படிவங்களை டிசம்பர் 31ம் தேதி முதல் ஜனவரி 24ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் 24ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

இது தொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 2024-2025ம் கல்வி ஆண்டில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவியருக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புவரை ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.

அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் 8ம் வகுப்பு படிப்பவர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும். மாணவர்களின் குடும்ப ஆண்டு வருவாய் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவ மாணவியர் 10ம் வகுப்பு சான்றில் தங்கள் பெயர் எப்படி வரவேண்டும் என்று விரும்புகிறார்களோ அதன்படி விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.

பெற்றோரின் கைபேசி எண்களை அளிக்க வேண்டும். உதவித் தொகை தொடர்பான விவரங்கள் அந்த கைபேசி எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளி அமைந்துள்ள மாவட்டத்தையே குறிப்பிட வேண்டும். தாங்கள் குடியிருக்கும் மாவட்டத்தை குறிப்பிடக்கூடாது. மாணவரின் பெயர், தந்தை அல்லது பாதுகாவலின் பெயர், பிறந்ததேதி, ஆதார் எண், பாலினம், கைபேசி எண் போன்ற விவரங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் மற்றும் இஎம்ஐஎஸ் இணைய தளத்தில் உள்ள விவரங்களுடன் ஒத்திருக்க வேண்டும். மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது ஆன்லைன் கட்டணம் ரூ.50 பணமாக பள்ளியில் செலுத்த வேண்டும்.

The post பிப்ரவரி மாதம் தேசிய வருவாய் வழி தேர்வு அரசு பள்ளி மாணவர்கள் ஜன.24க்குள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: