உணவில் போதை பொருளை கலந்து கொடுத்து மணிக்கட்டு நரம்பை அறுத்து தாய், 4 சகோதரிகள் படுகொலை: ஓட்டலில் புத்தாண்டு கொண்டாடிய போது நடந்த கொடூரம்

லக்னோ: உத்தரபிரதேச ஓட்டலில் புத்தாண்டு கொண்டாடிய போது தனது தாய் மற்றும் 4 சகோதரிகளை கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த குடும்பத்தினர் சிலர், 2025 ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தலைநகர் லக்னோவின் நாகா பகுதியில் அமைந்துள்ள ஷரஞ்சித் ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அங்கு அவர்கள் நேற்றிரவு குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடினர். இந்நிலையில், இன்று அதிகாலை (ஜன. 1) குடும்பத்தினரில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை ஓட்டல் ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த போலீசார் 5 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் டி.சி.பி ரவீனா தியாகி கூறுகையில், ‘முதற்கட்ட விசாரணையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் லக்னோவில் உள்ள ஓட்டல் ஷரஞ்சித்தில், அறை எண்-109 இல் தங்கியிருந்தனர். இவர்கள் புத்தாண்டை கொண்டாட ரூமை புக் செய்துள்ளனர். ஓட்டல் அறையில் கொலையான நிலையில் கிடந்த அலியா (9), அலிஷியா (19), அக்சா (16), ரஹ்மான் (18) மற்றும் அவர்களது தாய் அஸ்மா (47) ஆகியோரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. இறந்த பெண்ணின் மகன் அர்ஷாத் என்பவரை பிடித்து விசாரித்து வருகிறோம். குடும்ப தகராறு காரணமாக தனது தாயையும், 4 சகோதரிகளையும் அர்ஷாத் கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளார். ஓட்டல் அறையில் குடும்பத்தினர் தங்கியிருந்த போது, இறந்து போன 5 பேருக்கும் அவர்கள் சாப்பிட்ட உணவில் போதை மருத்து கலந்து கொடுத்திருக்க வாய்ப்புள்ளது.

அவர்கள் மயக்கமடைந்த உடன் 5 பேரின் மணிக்கட்டு நரம்புகள் வெட்டப்பட்டுள்ளன. ரத்தம் பீறிட்டு ஓட்டல் அறை முழுவதும் பரவிக் கிடந்தது. அவர்களை பலத்த ஆயுதத்தால் பலமுறை குத்திக் கொன்றுள்ளார். கைதான அர்ஷாத்திடம் விசாரித்த போது, ‘இது எங்கள் குடும்ப விசயம்; நீங்கள் தலையிட வேண்டாம்’ என்று ஒரே பதிலை திரும்ப திரும்ப சொல்லி வருகிறார். அதனால் குடும்ப விவகாரமாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த கொலை சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தப்படவில்லை. கொலையானவர்களின் மணிக்கட்டு, கழுத்தில் கூர்மையான ஆயுதங்களால் அறுக்கப்பட்டுள்ளது.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. குடும்பத் தகராறா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். இச்சம்பவத்தில் அர்ஷாத்தின் தந்தை மீதும் சந்தேகம் உள்ளது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்த பின்னரே கொலை சம்பவம் எப்படி நடந்தது? எதற்காக நடந்தது என்பது குறித்த முழு விபரங்கள் தெரியவரும்’ என்றார். புத்தாண்டு கொண்டாட வந்த இடத்தில், தாயையும், 4 சகோதரிகளையும் சகோதரனே கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post உணவில் போதை பொருளை கலந்து கொடுத்து மணிக்கட்டு நரம்பை அறுத்து தாய், 4 சகோதரிகள் படுகொலை: ஓட்டலில் புத்தாண்டு கொண்டாடிய போது நடந்த கொடூரம் appeared first on Dinakaran.

Related Stories: